வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

பெளத்த விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களினுடையதா ?

May be an image of 1 person, outdoors, temple and text that says 'புத்த விகாரை தென்பட்டால் சிங்களவருடையதா?? அது Vinoth VinhBalda Balach andran வரலாற்று கட்டமைப்புகளுக்கான ரக்கான அமைப்புகள் அவசியம்'
Vinoth Balachandran : · விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களினுடையதா ?? வரலாற்றை நோக்குகின்ற பொழுது விகாரைகள் தென்பட்டால் அது சிங்களவர்களினுடையது என்று தமிழர்களுக்கு இருக்கும் பார்வையும், சிங்களவர்களு நாம் உருவாக்கிய அந்த பார்வையும் மிக பிழையானது. சமயத்தின் கொள்கைகளுக்கான யுத்தம், குடிகளுக்கான யுத்தம், சாதிகளுக்கான யுத்தம் என்பது ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் இருந்து ஒரு விடையத்தை அணுகுகின்ற பொழுது இன்று இருக்கும் மனநிலை, பழக்கவழக்கம், நடைமுறை மற்றும் அரசியல் நிலை கொண்டு நாம் வரலாற்றை அணுகுகிறோம். இது உண்மையில் பிழையான ஒரு விடையத்தையே தருகின்றது. ஒரு விடையத்தை நாம் பொது மேடையில் வைக்கின்ற பொழுது அதன் உண்மை தன்மையை எந்தவொரு தரப்பும் கேள்வி கேற்கும் வண்ணம் அமைய கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் பல அமைந்துவிட்டால் நாம் முன்வைக்கும் அனைத்து விடயங்களும் பிழை என்ற ஒரு மனநிலையை பொதுவெளி அமைந்துவிடும். நம்முடைய குரல்கள் பல இடங்களில் எடுபடாமல் இருப்பது இதனாலையேயாகும்..
எம் சமூகத்திடம் மட்டும் தான் சமூக கட்டமைப்புகளை பேணி பாதுக்காக்கும் சமூக அமைப்புசார் கட்டமைப்புக்கள் இல்லை. தனி தனியாக ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை தங்களுக்கு தெரிந்த வகையில் வெளிப்படுத்தும் ஒரு அவல நிலையே அங்கு காணப்படுகிறது.. இந்த நிலையை நாம் விரைவில் மாற்றியமைக்க சிந்திக்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட நபரால் சாத்தியமடையாது, ஒரு குழுவால் மட்டுமே சாத்தியப்படும்.
இன்றைய களத்தின் நிலையை கொண்டு நாம் மனதில் இருக்கும் ஒரு பிழையான எண்ணக்கரு தான் "விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களின் அடையாளம்" என்கின்ற எண்ணம். உண்மையில் விகாரைகள் எமக்கும் சொந்தமானவை தான். நாம் ஒரு பிழையான எண்ணத்தை இந்த உலகிற்க்கே எடுத்துரைத்து வந்துள்ளோம் அதன் வெளிப்பாட்டின் எதிர்வினையே விகாரையை கண்டால் நாமே கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறோம்..
கி.மு 2 நூற்றாண்டு முதல் கி.பி 10 நூற்றாண்டு வரை தமிழர் பகுதிகளிமும் பெளத்தம் பரவியிருந்தது. குறிப்பாக பல்லவர் காலத்தில் மிகவும் வளர்ச்சி பெற்றது. அக் காலத்தில் எத்தனையோ தமிழ் பெளத்த துறவிகள் தங்களை பொளத்தத்திற்காக அர்ப்பணித்து பல தொண்டுகளை ஆற்றிவந்துள்ளனர். அதன் வளர்ச்சி இலங்கை வரை பரவியிருந்தமையால் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் பெளத்தம் மேலோங்கி இருந்தது.
பொளத்தத்தில் தேரவாதம், மகாயானம் என இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. இலங்கையில் இன்று 70 விகிதத்திற்கும் அதிகமாக தேரவாத பெளத்தம் காணப்படுகிறது. தமிழகத்திலும் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் மகாயான பொளத்தமே பரவியிருந்துள்ளதாக அதிகளவு சான்றுகள் கூறுகிறது. அதற்க்கு சான்றுகளாக அமைவது வணக்க முறையும் தத்துவ கோட்பாடுகளுமேயாகும்.
மகாயான பெளத்த தத்துவங்கள் கி.மு 1 நூற்றாண்டாளவில் நாகலோகத்தில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. போதிசத்துவ எனும் நிலை மகாயான பொளத்தத்தில் மட்டுமே காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி என்பவள் ஒரு போதிசத்துவர் என்பது தமிழ் பெளத்தர்களின் கூற்று. அதனாலயே சிலப்பதிகாரம் பெளத்த காவியமாக போற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி
குண்டலகேசி
மணிமேகலை போன்ற ஐம்பெரும் காப்பியங்களும்
நீலகேசி என்கின்ற ஐம்சிறு காப்பியமாகவும்
விமாபசார
திருப்பதிகம்
வீரசோழியம்
மானாவூர்ப்பதிகம்
அபிதம்மாவதாரம்
சித்தாந்த தொகை என்ற இலக்கண மற்றும் அழிவுற்ற நூல்கள் கிடைக்கின்றமையும்
சிவஞான சித்தியார் எனும் 14 சாத்திர நூல்களில் ஒன்றாகவும் திகழும் நூல்களின் மூலமாக
மகாயான பொளத்தத்தமே தமிழர்களிடம் காணப்பட்டது என்பதற்கு சான்றாக அமைகிறது.
போதிசத்துவம் என்பது இறை நிலையை அடைவதற்கு முன்னரான ஒரு நிலை போன்றது அதாவது ஞானம் அடைவதற்கு முன்னரான நிலை என்பது தேரவாத பொளத்தத்தின் நிலைப்பாடாகும். மகாயான பொளத்தத்தில் போதிசத்துவர் என்பது முனிவர்,ரிஷி அல்லது தேவர்கள் நிலையை போன்றதாகும். அதாவது இவர்கள் மக்கள் இறை நிலையை அடைய வழிவகுக்கும் வண்ணம் தங்கள் இறைநிலை அடைவதை தாமதப்படுத்துவார்கள். அதற்காக பல பிறவிகள் எடுத்து பூமிக்கு வருவார்கள் என்பது அவர்கள் எண்ணக்கருவாகிறது.
பத்தினி தெய்வத்தின் போதிசத்துவ நிலையே "கண்ணகி (சிலப்பதிகார கண்ணகி )அம்மன்" என்பது மகாயான பொளத்தத்தின் நிலைப்பாடாகிறது. இங்குள்ள மஹாயான பெளத்த விகாரைகளில் கண்ணகியும், தேரவாத பெளத்த விகாரைகளில் கண்ணகியானது பத்தினி தெய்வமாகவும் வணங்கப்படுகிறது.
#திருச்சாழல் என்றால் இன்று எமக்கு யாருக்கும் தெரியாது, ஆனால் இந்த ஒரு ஒற்றை சொல்லுக்கு பின்னால் நாம் மறந்துவிட்ட எண்ணற்ற வரலாறுகள் மறைந்து கிடக்கின்றன, இவற்றை நாம் உணரும் பொழுது தான் நாம் எவ்வளவு பிழையான கொள்கைவாத நிலைப்பாடுகளில் இருக்கின்றோம் என்பது புரியும். திருச்சாழல் என்றால் என்னவென்று கீழ்க்காண்போம்.
அக் காலங்களில் மதங்களும் சமய கோற்பாடுகள் என்பது எப்படி இறைவனை அடைவது, அதற்கான சரியான மார்க்கம் யாது என்பதாகவே அமைந்திருந்தது. அதனால் எது சரி பிழை என்ற விவாதம் அக்காலம் தொட்டே இருந்து வந்ததை எல்லோரும் அறிவும்.
மாணிக்கவாசகர் காலத்தில் பொளத்தத்திற்கும் சைவத்திற்கும் ஒரு போட்டி நடைபெற்றது. மாணிக்கவாசகரின் வரலாற்றினை கூறும் "திருவாதவூரார் புராணத்தில்" ஈழநாட்டுப் புத்தர் அவர் மன்னருடன் தில்லைக்கு சென்று வாதம் புரிந்ததாகவும் அந்த வாதத்தில் மாணிக்கவாசகர் வென்று அங்கிருந்த பெளத்தர்கள் அனைவரையும் வென்றதுடன் அந்த மன்னனின் ஊமை மக்களை பேசவைத்ததாகவும் கூறப்படுகிறது.
தான் தோற்றுவிட போகிறோம் என்பதை உணர்த்த பெளத்த துறவிகள் சிவனை நித்திக்கு விதமாக கேள்விகளை கேற்க, சிவனை வேண்டி பாடல்கள் பாடி அனைத்து பொளத்தர்களையும் மாணிக்கவாசகர் ஊமையாக்கினார். அதை கண்ட மன்னன் மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கோரி என் மக்களை பேசவைத்துவிடுங்கள் நான் சைவத்தை ஏற்று சிவத்தத்தொண்டு செய்கிறேன் என்று கூறுகிறார்.
நீங்கள் அவமதித்து கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களுடைய மக்களே பதில் கூறுவாள் என்று கூறி "புத்த குரு கேட்ட கேளிவிகளுக்கெல்லாம் நீயே பதில் சொல்" என்று அப் பெண்ணை பணித்தார் மாணிக்கவாசகர். அவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில்களையும் கோர்வையாக கோர்த்து பாடப்பட்டதே 8ம் திருமுறை 12ம் சருக்கம் "திருச்சாழல்"
பெண்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழு கேள்வி கேட்பதாகவும் மற்றைய குழு பதில் கூறுவது போன்றும் இப் பதிகத்தை பாடினார் மாணிக்கவாசகர்..
இங்கு முக்கியமான விடையம் யாதெனில், ஈழ நாட்டில் இருந்து தமிழ் பெளத்த துறவிகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளமையும், விவாதத்தில் தோக்கடிக்கப்பட்ட பின் மன்னர் சைவத்தை தழுவினார் என்பதும். அத்துடன் தமிழ் நாட்டில் காணப்பட்ட தமிழ் பெளத்த துறவிகளும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாக பதிவாகியுள்ளமையும் முக்கிய விடயங்களாகும்.
மாணிக்கவாசகர் மட்டுமின்று திருஞான சம்பத்தரும் பெளத்தர்களை தோற்கடித்து இலங்கைக்கு அனுப்பியதாகவும் சான்றுகள் உள்ளது.. சைவர்கள் மட்டுமின்றி சமணர்களும் கூட இவ்வாறு செய்துள்ளனர். சமண குருவான "அகளங்கர்" என்பவரும் பெளத்தர்களை வாதத்தில் வென்று இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பேடுகள் காணப்படுகின்றது. சாக்கிய நாயனார் என்பவர் பெளத்தத்தில் இருந்து சிவனை தரிசித்து வந்தவர் என்பது நாம் அறிந்த ஒன்றாகும்.
தமிழ் பெளத்த குருக்களாக அல்லது துறவிகளான "புத்ததத்த, அனுருத்தர், தருமபாலர், தர்மகீர்த்தி, திக்நாதர், சங்கமித்திரர், போதி தருமர் என பல துறவிகள் தமிழகத்தில் பெயர்பெற்றவர்களாகவும் இலங்கைக்கு வந்து பெளத்தத்தை மன்னர்களுடன் இணைந்து மேம்படுத்தியதாகவும் இலங்கை மற்றும் இந்திய சுவடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக களப்பிரர்கள் காலத்தில் அதிகளவான சான்றுகள் காணப்படுகின்றது.
இந்த மக்கள் அனைவரும் இலங்கையில் தங்கள் வழிபாட்டு இடமாக மகாயான பெளத்த விகாரைகளை உருவாக்கி வழிபட்டு வந்திருப்பார்கள். அதே போன்று சிங்களத்தில் இருந்து சைவத்தை ஏற்றவர்கள் கோவில்களை உருவாக்கி வழிபட்டு வந்திருப்பார்கள் அல்லது அக் கோவிலுக்கு தானங்கள் வாங்கியோ அல்லது மேம்படுத்தியோ இருப்பார்கள்..
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் இருந்தால் அது தமிழர் விகாரைகளாக மட்டுமே இருக்க முடியும், ஒரு நாளும் அது சிங்கள மக்களினால் உருவாக்கிய விகாரையாக இருக்க முடியாது. அல்லது சிங்கள மன்னர்கள் தமிழ் மக்களுக்காக கட்டிக்கொடுத்த விகாரையாக இருக்கலாம் அதனால் அங்கு மன்னர்களின் பெயர் பட்டியல்கள் அல்லது கல்வெட்டு தகவல்கள் காணப்படலாம். விகாரை என்பது சிங்களவர்களுடையது என்ற எண்ணத்தை சிங்களவர்களுக்கு நாமே விதைத்துவிட்டோம் அதே போன்று எமக்குள்ளும் விதைத்துவிட்டோம்.
ஆரம்பத்தில் கூறியது போன்று சமூகத்திற்கு தேவையான சமூக அமைப்புக்களை உருவாக்காமல் அனைத்தையும் அரசியல்பால் முன்னெடுத்ததன் விளைவே இது. இதன் தோல்வியானது தமிழ் சமூகத்திற்கு மட்டுமே.. இதனை மாற்றியமைக்க வேண்டுமாயின் சமூகத்தை மேம்பட கட்டியெழுப்பும் சமூக அமைப்புகள் அவசியமாகிறது. அவரை அரசியலாக அல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கவேண்டியது அவசியமானதாகிறது.
திருகோணமலையில் இருக்கும் வெல்கம் விகாரை, தமிழ் பெளத்தர்களின் விகாரை. விகாரை என்றாலே சிங்களவர்களுடையது என்ற எண்ணத்தினாலையும் தமிழ் பெளத்தர்கள் காலப்போக்கில் மறுவிவிட்டதாலும் (இக் காரணங்கள் பதிவை நீட்டித்து விடும் என்பதால் மருவிய காரங்களை தனி ஒரு பதிவாக பார்க்கலாம்) இன்று அவ் விகாரை சிங்களவர்களுடைய விகாரையாக மாறிவிட்டது.
காலத்தால் முட்பட்ட விகாரைகள் காணப்பட்டால் அது சிங்களவர்களுடையது என்ற எண்ணத்தை நமக்குள் இருந்து அகற்றி அதற்கும் தமிழுக்கும் உண்டான தொடர்பை வெளியில் கொண்டுவர வேண்டும். அதனை அரசியல் ரீதியாக இன்று அறிவியில் ரீதியாக சமூகத்துக்கு முன்வைக்க வேண்டும் அவ்வாறு செய்வதனூடாக விகாரை என்றால் சிங்களவர்களினுடையது என்ற சிங்கவர்களின் எண்ணத்தை மாற்ற முடிவதுடன் சிங்கள கடும்போக்குவாதிகள் மற்றும் இரு தரப்பிலும் மறைந்துள்ள வேற்றுமத அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் இலகுவாக அப்புறப்படுத்தமுடிவதுடன், தொல்பொருள் ஆராட்சி என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக