செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

டூல்கிட் என்றால் என்ன? கிரெட்டா துன்பெர்க் ஷேர் செய்த டூல்கிட்டில் என்ன இருந்தது? யார் இந்த திஷா ரவி? இவர் கைதானது ஏன்?

Veerakumar - tamil.oneindia.com :டெல்லி: இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த டூல்கிட் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த மாணவியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை அரங்கேறியது. இந்த கைதைத் தொடர்ந்து, டூல்கிட் என்றால் என்ன? ஏன் அது குற்றச் செயலாக பார்க்கப்பட்டது, என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 21 வயதாகும் திஷா ரவி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சவா இன்று அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் திஷா கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில், கிரெட்டா ஷேர் செய்த டூல்கிட்டை தான் உருவாக்கவில்லை என தெரிவித்தார். திஷா குறிப்பிட்ட டூல்கிட் கிரெட்டா டுவிட்டர் பக்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது

டூல்கிட் என்றால் என்ன? சரி.. அந்த டூல்கிட்டில் அப்படி என்ன இருக்கிறது? ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்திற்காக அல்லது அதை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஐடியாக்கள் கொண்டுள்ள ஆவணம் ஆங்கிலத்தில் Toolkit என்று அழைக்கப்படுகிறது. கிரெட்டா மட்டுமல்ல, எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், அதை நடத்தும்போதும் அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டிவை குறித்து இதுபோல டூல் கிட் உருவாக்கப்பட்டு பகிரப்படுவதும் வழக்கம்.

திஷா ரவிக்கு என்ன தொடர்பு? திஷா ரவியை பொறுத்தளவில், கிரேட்டா துன்பர்க்கின் 'ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர்' என்ற பருவநிலை போராட்டத்தின் இந்திய நிறுவனர்களில் ஒருவராகும். எனவே அவருக்கும் டூல்கிட்டை எடிட் செய்யும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. டூல்கிட் என்பது கூகுள் ஷீட் போன்றதுதான். உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், ஆக்சஸ் பெற்றவர்கள் அதை எடிட் செய்யலாம்.

டூல்கிட்டில் என்ன இருந்தது? கிரேட்டா துன்பர்க் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த 'டூல்கிட்' பின்னர் அகற்றப்பட்டதல்லவா, அதில் அப்படி அவர் என்ன கூறியிருந்தார் தெரியுமா? இந்த டூல்கிட்டை இந்தியாவில் களத்தில் உள்ள மக்கள் புதுப்பிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவுகள் வெளியிட்டு, அதன் மூலம் ட்விட்டரில் பெரும் பங்களிப்பு செய்வது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் அதில் இருந்தன.

பெரு முதலாளிகளுக்கு எதிராக அது மட்டும் கிடையாது. அடுத்த அம்சங்கள் முக்கியமானவை. அதானி,அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு எதிராக செயல்படுவது, அரசு அதிகாரிகள் மற்றும் அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போன், இமெயில் மூலம் கோரிக்கை வைப்பது போன்ற திட்டமும் டூல்கிட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தூதரகம் அருகே போராட்டம் பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவரவர் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள இந்தியத் தூதரகம், மீடியா நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்தி விவசாயிகள் போராட்டத்தை நோக்கி கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான், கிரேட்டா துன்பர்க் பதிவிட்டிருந்த டூல்கிட் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும் கிரேட்டா தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் வழக்கு பதிவு செய்தது டெல்லி காவல்துறை.

திஷா ரவி கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டில் இருந்த அம்சங்களில் சில போலீஸ் நடவடிக்கை எடுக்க தகுதியானவை என்பதால், அதை நீக்குமாறு கிரேட்டாவிடம் திஷா ரவி கூறியதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. திஷா ரவி இந்த டூல்கிட்டை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இதை திஷா ரவி மறுத்துள்ளார். கிரெட்டா தகவல்களில் சில வரிகளை திருத்தி தனது சோஷியல் மீடியாவில் போட்டேனே தவிர, கிரெட்டா டூல்கிட்டை நான் ஷேர் செய்யவில்லை என்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக