செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தேவேந்திர குல வேளாளர்கள்- மத்திய அரசு விளக்கத்தின் பின்னணி!

minnambalam : தங்கள் இனத்தில் இருக்கும் ஏழு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்று சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலான கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடியும் இதுபற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ஒரு அரசு விழாவில் தமிழ்நாட்டின் ஒரு சமுதாயத்தைப் பற்றி பத்து நிமிடங்கள் நாட்டின் பிரதமர் பேசுவது இதுவே முதல் முறை. மூன்று முறை உரத்த குரலில் "தேவேந்திர குல வேளாளர் " என்று பிரதமர் மோடி அழைத்ததை அடுத்து அந்த சமுதாயப் பிரமுகர்கள் உருகிவிட்டார்கள். பிரதமர் மோடி பொதுப்பெயரை அறிவித்துவிட்ட நிலையில் நாடாளுமன்றத்திலும் அந்த மசோதா விரைவில் நிறைவேற இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 15) மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.      “ ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சமுதாயத்துக்கு தேவேந்திர குலவேளாளர் என்று பிரதமர் பெயர் சூட்டியதை அடுத்து. அவர்களை பட்டியல் பிரிவு (எஸ்சி) வெளியேற்றப் போவதாகவும் அவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அப்படி ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து பட்டியல் வகுப்பிலேயே நீடிப்பார்கள்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டியல் மாற்றமே தேவேந்திரகுல வேளாளருக்கான அங்கீகாரம் என்று கூறி வரும் தேவேந்திர குல வேளாளர் பிரமுகர்கள் பலருக்கும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மசோதாவை அடுத்து இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, “ புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்ட நெடுநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திடவும், அவர்கள் தற்போது இடம் பெற்றிருக்கக்கூடிய SCHEDULED CASTE என்ற பட்டியலினத்திலிருந்து விலக்கிடவும் தொடர்ந்து போராடிவருகின்றனர். அதில் ஒரு பகுதியாகிய பெயர் மாற்றக் கோரிக்கைக்கான சட்டத் திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதில் மாற்றமில்லை. ஆனால், பட்டியல் மாற்றம் என்பதே தேவேந்திரகுல வேளாளர்களின் நிரந்தர இலக்காகும். பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சமூக அடையாளமாக கருதப்பட்டாலும் பட்டியிலினத்திலிருந்து விலக்கு பெறாமல் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் விடுதலை பெற்றதாகவோ முழு அங்கீகாரத்தையும் பெற்றதாகக் கருத இயலாது.

பெயர் மாற்றத்திற்கான சீரிய முயற்சிகளை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகள் பட்டியல் மாற்றத்திற்கான கருத்துருவையும் இணைத்து மசோதாவை நிறைவேற்றி, தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டதால் நூறாண்டு காலத்திற்கு மேலாக இந்த சமூகம் அனுபவிக்கும் சமூக ஒதுக்கலுக்கும், ஒடுக்கலுக்கும்; உளரீதியான தாழ்வு சிக்கலுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும்”என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் சார்பில், “தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் வகுப்பிலேயே தொடர்ந்து நீடிப்பார்கள்” என்று அறிவிக்கப்பட காரணம் என்ன?

இந்த விவகாரத்தில் மத்திய அரசுப் புள்ளிகளோடு நெருக்கமாக இருக்கும் தேவேந்திர குல வேளாளர் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்,

“பொதுப் பெயர் சூட்டப்பட்டதால் தேவேந்திர குல வேளாளர்கள் பலர் தமிழகம் முழுக்க பரவலாக பல இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்கள். ஆனால் இந்த அறிவிப்பால் அரசியல் ரீதியாக ஆதாயத்தை இழக்கும் சில கட்சிகள்.... அடுத்து பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். சலுகைகளை எல்லாம் இழக்க வேண்டிவரும் என்று சமூக தளங்களில் பரப்புரையில் ஈடுபட்டார்கள். மேலும் இன்று வரை எஸ்சி பட்டியலில் இருப்பவர்கள் நாளை ஓபிசி பட்டியலில் இடம்பெறப் போகிறார்கள் என்றும் இதனால் ஓபிசி மக்களின் உரிமை பறிபோகும் என்றும் தகவல்களைப் பரப்பினார்கள்.

இதனால் ஒரே நேரத்தில் தற்போது வரை எஸ்டி பட்டியலில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் இடையேயும், ஓபிசி மக்களிடையேயும் பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்கிட முயற்சிக்கிறார்கள். பட்டியலில் இருந்து வெளியேற்றம் என்பது அம்மக்களிடையே அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு செய்யப்பட வேண்டிய ஒரு நீண்ட நெடிய நிர்வாக சட்ட நடைமுறை.

ஆனால் வரும் தேர்தலில் இந்த அறிவிப்பை பாஜகவுக்கு எதிராகவே பயன்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இதுபோன்ற தகவல்களைப் பரப்பியதால்தான் மத்திய அரசு இந்த விளக்கத்தை வெளியிட நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உள்ளபடியே அடுத்த எம்பி தேர்தலுக்குள் தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலில் இருந்து அவர்களின் சலுகைகளுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் வெளியே கொண்டுவரப்படுவார்கள்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக