சனி, 6 பிப்ரவரி, 2021

தேர்தலுக்கு முன்...அமமுக கலைப்பு: அதிமுகவுடன் இணைப்பு! ஒதுங்கிக்கொண்டு ஒன்றாக்க முயற்சிக்கிறாரா சசிகலா?

தேர்தலுக்கு முன்...அமமுக கலைப்பு: அதிமுகவுடன் இணைப்பு!   ஒதுங்கிக்கொண்டு ஒன்றாக்க முயற்சிக்கிறாரா சசிகலா?

minnambalam ":  நேற்றுப்போல் இன்று இல்லை; இன்று போல் நாளையில்லை...காதலுக்கு மட்டுமில்லை; கலிகால அரசியலுக்கும் இது அப்படியே பொருந்தும் பாட்டுதான். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால் தேர்தல் கால அரசியலுக்கு இது செமையான சிச்சுவேஷன் சாங்...   சசிகலாவின் ரீஎன்ட்ரி குறித்தும் இப்படித்தான் நாளுக்குநாள், மணிக்கொரு தரமாக கதைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் சசிகலா தற்போது இருக்கும் கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து அத்தனை எளிதில் ‘பிரேக்கிங் நியூஸ்’ வருமென்று தோன்றவில்லை. நமக்குத் தெரிந்து, ஜனவரி 27 ஆம் தேதியிலிருந்து நடந்த நிகழ்வுகளிலும் அரிதான சந்திப்புகள், அதிரடி அறிவிப்புகள் எதுவும் அங்கே நிகழ்வதற்கு வாய்ப்புகளில்லை.    பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் நான்காண்டு சிறைத்தண்டனை முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஜனவரி 20ஆம் தேதி, சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் சசிகலா. பிறகு விக்டோரியா தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 27 ஆம் தேதியன்று, அங்கே வைத்தே அவருக்கு விடுதலை அளித்தது, பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம்.

அதற்குப் பின்னும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், ஜனவரி 31ஆம் தேதி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து 3737 தமிழகப் பதிவு எண் காரில் கிளம்பியவர், தினகரனை அழைத்து முன்னே சென்று வழிகாட்டச் சொன்னார். அமமுக கொடியுடன் தினகரன் கார் முன்னே செல்ல, பின்னால் அதிமுக கொடியுடன் சசிகலா கார் போக, அவர்கள் கார்களைத் தொடர்ந்து குடும்பத்தார் கார்களும் அமமுக,வினர் கார்களும் அணிவகுத்து சென்றன. அந்த அணிவகுப்பு முடிவடைந்தது நந்திமலை அருகில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில்.

அங்கே சசிகலாவுடன் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் மட்டும் 45 நிமிடங்கள், தனி அறையில் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழக அரசியலின் தற்போதைய நிலை பற்றியும், சென்னை போவது பற்றியும் அப்போது அவர்களிடம் பேசியிருக்கிறார் சசிகலா. அப்போதுதான், ‘இளவரசி பிப்ரவரி 5 ல் வெளியே வந்துவிடுவார்; அவரும் வந்த பிறகு, 8ஆம் தேதி, சென்னை போகலாம். அன்றைக்கு பூராடம் நட்சத்திரம், சுப முகூர்த்த நாள்!’ என்று அவரே நாளும் குறித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் அந்தத் தேதியை வெளியே அறிவித்தார் டிடிவி தினகரன்.

கோடாகுருக்கி பண்ணை வீட்டில், தற்போது சசிகலாவுடன் டாக்டர் வெங்கடேஷ், அவரது மனைவி ஹேமா, விவேக், அவரது மனைவி கீர்த்தனா, சசிகலா உதவியாளர் கார்த்திகேயன், ஒரு டாக்டர், இரண்டு செவிலியர்கள், ஒரு செவிலியர் உதவியாளர், வழக்கமான சமையல்காரர் உட்பட 12 பேர் தங்கி இருக்கிறார்கள். காலை மாலை இரவு மூன்று வேளையும் டாக்டர்கள் பரிசோதனைகள் செய்து மாத்திரை கொடுத்து வருகிறார்கள். தினந்தோறும் மூலிகை பொருட்கள் கலந்த வேது பிடித்து வருகிறார் சசிகலா. சிறையிலிருந்து வெளியில் வந்தபின், குடும்பத்தாருடன் அதிகம் பேசாத சசிகலா, பேசும்போதெல்லாம் சொல்லும் ஒரே அட்வைஸ் இதுதான்...‘‘நம்ம குடும்பத்திலிருந்து இப்போதைக்கு வேறு யாரும் அரசியலுக்கு வரவேண்டாம்; தலையிடவேண்டாம். அவரவர் பிசினஸ்களை மட்டும் பாருங்கள்!’’

சென்னை திரும்புவது பற்றி சசிகலாவிடம் பேசிய அவரின் உறவினர்கள், ‘‘சென்னைக்குள் சென்றதும் அம்மாவின் சமாதிக்கு நீங்கள் போய் கும்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும். அங்கே போகமுடியவில்லை என்றால், அதிமுக தலைமைக்கழகத்துக்குச் சென்று வெளியில் உள்ள அம்மா உருவச் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தி வணங்கிவிட்டுப் போய் விடுவோம்!’’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ‘‘பிரச்சினை ஏதும் செய்து கொள்ள வேண்டாம். சுமூகமாகப் போய் விடுவோம் ஒரு தகவலுக்கு வெயிட் பண்ணுகிறேன். வந்ததும் அக்கா சமாதிக்குப் போய்விட்டு வீட்டுக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்!’’ என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.

அவர் தங்கியிருக்கும் பண்ணை வீட்டிலிருந்து சென்னை வீட்டுக்குச் செல்லும் வரையிலும் இடைப்பட்ட பகுதிகளில் 66 இடங்களில் அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்கு அமமுகவினர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். (இங்கே ஒரு இடைச்செருகல் தகவல்...தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தற்போது 66 வயதுதான்!) ஆனால் அவருக்கு எதிராக அதே அளவிற்கு புகார்களும் குவிந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஜெயலலிதாவின் சமாதிக்கு அவர் போவாரா என்பது இப்போது வரையிலும் உறுதியாகவில்லை. அவர் ஒரு தகவலுக்காக காத்திருப்பதாகச் சொன்னதை சுட்டிக்காட்டும் அவருக்கு நெருக்கமான சிலர், ‘அந்தத் தகவல் வந்துவிட்டால் அம்மா சமாதிக்கு அவர் நிச்சயம் போவார். ஆனால் தலைமைக்கழகத்தின் பக்கம் தலை காட்ட மாட்டார்!’’ என்கிறார்கள்.

வரும் எட்டாம் தேதிக்குள் அவர் எதிர்பார்த்த அந்தத் தகவல் வந்துவிடுமா என்பது தெரியாவிட்டாலும், அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்தத் தகவல் என்ன என்பது பற்றி அவர்களிடம் கேட்டோம்...

‘‘சின்னம்மாவுக்கு எதிராக முதல்வரும், அமைச்சர்களும் பேசிவருவதும், புகார் கொடுப்பதும் அவரைப் பெரிதும் காயப்படுத்தினாலும் அவர் எந்தவொரு கோபத்தையும் காட்டவில்லை. தற்போதுள்ள அவருடைய உடல்நிலை, அரசியல் சூழ்நிலையை வைத்துப் பார்க்கையில், அவர் மீண்டும் தீவிர அரசியலுக்குள் இறங்குவதற்கு வாய்ப்பு அதிகமிருப்பதாகத் தெரியவில்லை. அதை அவரும் விரும்பாததுபோல்தான் தெரிகிறது. ஆனால் தன்னுடன் இருந்து, தனக்காகவே கட்சியை விட்டு வெளியில் வந்த தினகரனுக்கு அரசியலில் ஒரு இடத்தை உருவாக்கித் தந்துவிட்டுத்தான் ஒதுங்க வேண்டுமென்று அவர் நினைக்கிறார். அதனால்தான், ‘நான் ஒதுங்கிக்கொள்கிறேன்; தினகரனை மட்டும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது கட்சிக்கும் பெரும் பலமாக இருக்கும். இல்லாவிட்டால் திமுகவை எதிர்த்து நீண்ட நாட்களுக்கு அரசியல் செய்ய முடியாது!’ என்று சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார். அதற்கு அவர் சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார். அதாவது, ‘தேர்தலுக்கு முன்பாகவே அமமுகவை கலைத்து விட்டு தினகரன், அதிமுகவில் இணைந்துவிடுவார். ஆனால் தினகரன் உட்பட அவர் தரும் பட்டியலில் இருக்கும் 35 பேருக்கு அவர்கள் கேட்கும் தொகுதிகளில் சீட் தரவேண்டும் என்பதுதான் அதில் முக்கிய நிபந்தனை. கட்சி தற்போதிருக்கும் நிலையில் இந்த நிபந்தனையைப் பரிசீலித்து முடிவெடுக்கவும் அதிமுக தலைமையில் இருந்து ‘க்ரீன் சிக்னல்’ கிடைத்திருக்கிறது. ஆனால் என்ன முடிவெடுப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை. அவர் காத்துக்கொண்டிருப்பது அந்தத் தகவலுக்காகத்தான்!’’ என்றார்கள்.

இப்படியொரு மறைமுகப் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதா என்று அதிமுக தரப்பில் விசாரித்தபோது, அவர்களிடமிருந்தும் மறுப்பான பதில்கள் எதுவும் வரவில்லை. ஆனால் உறுதிப்படுத்தவும் யாரும் தயாராக இல்லை. அதனால் இந்த விஷயம் குறித்து இபிஎஸ்–ஓபிஎஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் என நான்கைந்து பேர்களுக்குள் மட்டுமே ஆலோசனை போய்க் கொண்டிருப்பது புலப்படுகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அதிமுக மாநில நிர்வாகி ஒருவர், ‘‘தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் காணப்படும் எழுச்சியையும் வரவேற்பையும் பார்த்து மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அந்த உற்சாகத்தில்தான் விவசாயிகள் கடன் தள்ளுபடி என்று அடித்து ஆட ஆரம்பித்து விட்டார். இந்தத் தருணத்தில் வெற்றிக்கான எந்த வாய்ப்பையும் அவர் தள்ளிவிடுவதற்குத் தயாராக இல்லை. ஆட்சிக்காலத்தில் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று நினைத்தார்கள். அது நிறைவேறிவிட்டது. இப்போது தேர்தல் என்று வரும்போது மீண்டும் ஒன்று சேர்ந்தால் கட்சிக்குப் பலமாக இருக்குமென்று அவர்கள் நினைக்கவே வாய்ப்பு அதிகம். அது மட்டுமில்லை. தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 65 தொகுதிகளில் அமமுக தனித்து நின்றால் அதிமுகவின் தோல்விக்கு அது முக்கியக் காரணமாக இருக்குமென்று முதல்வருக்கும் சர்வே ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே பாரதியஜனதா கட்சித்தலைமைக்கும் இதேபோன்ற தகவல் கிடைத்துத்தான் அவர்களும் இணைப்பை மறைமுகமாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லிக்குச் சென்றதற்கு முக்கியக் காரணம், தன்னை முதல்வர் வேட்பாளராக அவர்கள் அறிவிக்க வேண்டுமென்பதுதான். ஆனால் அப்போது அவர்கள் எந்த உறுதியையும் தராமல் இவரை திருப்பி அனுப்பிவிட்டனர். அதற்கு சசிகலாவின் வருகைக்கு கட்சியில் எந்த மாதிரியான விளைவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் இந்த இணைப்புத் திட்டத்தை அவர்களும் அமோகமாக ஆதரிப்பார்கள்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்று உத்தரவாதம் கொடுத்தால் அதற்கு ஈடாக தினகரனை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. மன்னிப்புக்கடிதம் கொடுத்தால் தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்கத் தயார் என்று கேபி முனுசாமி பேசியதும் தலைமையில் நடந்து வரும் மறைமுகப் பேச்சுவார்த்தையின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் இந்தத் தகவல், பேச்சுவார்த்தை எதையும் நாங்கள் திட்டவட்டமாகக் கூறமுடியாது. இப்படியொரு முயற்சி நடந்தாலும் இடையில் ஆட்டையைக் கலைப்பதற்கு நிறையவே ஆள்கள் இருக்கிறார்கள்.’’ என்றார்.

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... இதுவும் அரசியலில் எல்லாக்காலத்துக்குமான ‘சிச்சுவேஷன் சாங்’ தான்!

–பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக