சனி, 20 பிப்ரவரி, 2021

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுகிறாரா பாமக ராமதாஸ்?

May be an image of 1 person
Parthi Ravichandran : · அது 1998ம் ஆண்டு ; அன்று விடியம்போது சிதம்பரம் நகரம் அதுவரை சந்தித்திடாத கலவரத்தை சந்திக்கும் என்றோ; தமிழ்நாடு அரசியல் அன்றிலிருந்து சாதியில் சிக்கி சீரழியும் என்றோ தில்லை நடராஜனுக்கோ, தில்லைவாழ் மக்களுக்கோ தெரிந்திருக்காது. சிதம்பரம் பாமகவின் நகர பிரமுகர் பழனிவேல் என்பவர் தில்லை கிழக்கு வாசலில் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த படுகொலையை செய்ததாக அறியப்படுபவர்கள் பிரேம்குமார் வாண்டையாரும்; அவருடைய தம்பி ஶ்ரீதர் வாண்டையாரும்.
சிதம்பரம் நகரத்தில் மாரியப்பா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என தொழிலில் கோலோச்சிய வாண்டையார் குடும்பம்.
எளிதாக சொல்வதென்றால் பசும்பொன் படத்தில் ‘தென்னாட்டு சிங்கமே’ பாடலில் சிவாஜிக்கு மாலை போடுபவர் தான் இந்த பிரேம்குமார் வாண்டையார்.
சினிமா பாணியில் ரவுடியிசம் கட்டபஞ்சாயத்து, மாமுல், பெட்டிக்கடைகளில் கூட இவர்களது படம் இருக்க வேண்டுமென உத்தரவிடுகிறார்கள் என்பது பாமகவின் குற்றச்சாட்டு.
சின்னக்கடை செட்டு, தோப்பு செட்டு என இரண்டு குண்டாஸ் அமைப்பு சிதம்பரத்தில் உருவாகி ஒன்று வாண்டையார் தலைமையிலும்; இன்னொன்று பாமக தயவிலும் இயங்கிற்று.
கொல்லப்பட்ட பழனிவேல் பாமகவை சேர்ந்தவர்
பழனிவேல் கொல்லப்பட்டதும் இனக்காவலர் என இராமதாஸ் போராட்டத்தில் குதித்தார்.
வடதமிழகத்தில் ஆளும் கலைஞர் அரசை கண்டித்து பாமக பந்த்.
ஆனாலும் தஞ்சை மாவட்ட கிராமங்களில் வன்னியர்களும் அதிமுகவினரும் தான் மோதிக்கொண்டனர்.
படுகொலையை கண்டித்து சிதம்பரத்தில் நடந்த கண்டன பேரணியில் கலவரம் வெடித்தது.
ஊர்வலத்தில் வாண்டையார் குடும்ப சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட; வாண்டையார் சார்பில் தஞ்சையில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள், பேரணியில் பங்கேற்றவர்களோடு பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
உடனடியாக கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
தமிழக அரசு வண்டையார் சகோதரர்களை பிடிக்க ஆணை பிறப்பித்தது.
வாண்டையார் சகோதரர்கள் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றனர்.
பிரேம் குமார் வாண்டையார் கார் விபத்தில் அகால மரணமடைந்தார்.
பலி எண்ணிக்கை; பொது சொத்து சேதாரம் என்பதையெல்லாம் தாண்டி இராம்தாஸ் அன்று கையிலெடுத்த அரசியல் அவரை தமிழக அரசியலின் சாணக்கியனாகவும்; தமிழ்நாட்டின் எதிர்காலத்தை குட்டிசுவராகவும் மாற்றி எழுதியது.
கலவரத்திற்கு சமாதானம் பேச கள்ளர் தலைவர்களிடம் ஒற்றுமையாக கையசத்த ராமதாஸ்;
அதே வேளையில் மிக முக்கியமான அரசியலை கையில் எடுத்தார்.
சாதி அமைப்பில் எந்த சாதியும்; இன்னொரு சாதிக்கு சரி நிகரானது அல்ல என்பது நமக்கெல்லாம் தெரியும்.
இராமதாஸ் மிக நுட்பமாக சமூக தளத்தில் “கள்ளர்களுக்கு கீழும்; பறையர்களுக்கு மேலும்” என்ற ஒரு சமூக தட்டை ஒருங்கிணைத்தார்.
வலையர், முத்துராஜா, பள்ளர், மள்ளர், தேவேந்திரகுலத்தார் உள்ளிட்ட பல சாதிகளை ஒருங்கிணைத்தார்.
அந்த சாதிகளை எல்லாம் அரசியல் ரீதியாக தூண்டிவிட்டார்.
வடக்கே வன்னியர், மத்தியில் முத்தரையர், தெற்கே தேவேந்திரர் என புதுமாதிரியான அரசியல் காய்நகர்த்தல்.
இம்மானுவேல்சேகரனுக்கு நினைவிடம் அமைத்தார்.
மொத்த தமிழகத்திலும் ஆங்காங்கே ஒரு சமூகத்தை அவர் தூண்டிவிட ; அவருக்கு சார்நிலையில் பல ஜாதி கட்சிகள் உருவாக;
விளைவு அதை பார்த்து மிரண்டு போன மற்ற சமுதாயங்களும் அரசியல் கட்சிகளை தோற்றுவித்து அவருக்கு எதிரணியில் நின்றன.
2001 சட்டமன்ற தேர்தலில் பதிவான, போட்டியிட்ட கட்சிகளை ஒரு முறை திருப்பி பார்த்தால் அதன் நிலவரம் புரியும்.
கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்,
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்,
ஏ எம் ராஜாவின் கொங்குநாடு மக்கள் கட்சி,
ஏ சி சண்முகத்தின் புதிய நீதி கட்சி,
இராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி,
குழ. செல்லையாவின் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்,
கு. ப. கிருஷ்ணனின் தமிழர் பூமி கட்சி,
வேட்டவலம் மணிகண்டனின் இந்தியன் உழவர் - உழைப்பாளர் கட்சி,
ஜான் பாண்டியனின் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக்கழகம்,
ஜகத்ரட்சகனின் வீர வன்னியர் பேரவை
என ஒரு டஜன் சாதிய கட்சிகளை 2001 தேர்தலுக்கு முன் உருவாக்கி வைத்தார் தமிழ்குடி தாங்கி ராமதாஸ்.
இதில் அரை டஜன் கட்சிகள் 2004 நாடாளுமன்றத்தேர்தலுக்கு பின்னே கலைந்து போனாலும், இந்த கட்சிகள் ஏற்படுத்திய சாதி ரீதியான பாகுபாடு concentrate ஆகி,
திராவிட கட்சிகளின் வேட்பாளர் தேர்வில் அதுவரை அல்லாத அளவு எதிரொலிக்க தொடங்கியது.
முத்தாய்ப்பாக ஜெ குரு வேறு கூட்டம்போட்டு சத்திரியர், வீரப்பரம்பரை, ராஜ்புட் வம்சாவழி என புது ட்ரண்டிற்கு ரூட்டு போட்டுத்தர,
அவனவன் வீரம், போர் என ஆங்காங்கே புற்றீசல் போல் கிளம்பி இன்று வரை தமிழன்னையின் திருமேனியில் கிடைத்த இடத்தில் எல்லாம் தீமூட்டி வருகிறார்கள்.
அன்று வரை ஏதோ ராமதாஸின் கட்டுப்பாட்டுக்குள் தானே சாதிவெறி அடங்கி கிடக்கிறது.
அதுவரை நல்லது என நிம்மதியாக தூங்கிய தமிழ்நிலத்திற்கு மற்றொரு பேரிடியை இறக்கினார் ராம்தாஸ்.
இவ்வளவையும் செய்துவிட்ட தமிழக அரசியலின் சாணக்கியர் ராம்தாஸ், என்ன கனவோ கண்டு 2011 தேர்தலில் விசிக, வாண்டையாரின் மூமுக வுடன் கூட்டணி வைத்தார்.
பழனிவேலின் ரத்தம் ஓடிய சிதம்பர நகர வீதிகளில் ஶ்ரீதர் வாண்டையாருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்தார்.
சாதிவெறி குழாமின் மீது ராமதாஸுக்கு இருந்த பிடி அத்தோடு தகர்ந்தது.
சாதாரண மக்கள் தலைவன் சொல் கேட்பார்.
ஊட்டி வளர்க்கப்பட்ட சாதிவெறி யார் பேச்சை கேட்கும்?
நாய்க்கன்கொட்டாய், மகாபலிபுரம், மரக்காணம், கோலியனூர் என ராமதாஸ் பிடியில் இருந்து வெளியே வந்த சாதிவெறி கட்டுப்பாடின்றி கோரதாண்டவம் ஆடியது.
சாதி தான் இருமுனை கத்தியாயிற்றே; பல மறுமுனைகளுக்கும் சாதிவெறி பற்றி, இன்று 16 வயது, 18 வயது இளைஞர்கள் எல்லாம் நால்ரோட்டில் கூச்சமே இன்றி சாதிப்பெயர் தாங்கிய பேனர்களில் பல் இளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வாட்ஸப் க்ரூப்களில் பேரன்கள், தாத்தாவிற்கு சாதி வரலாறு வகுப்பெடுக்கிறார்கள்.
நிலையான எல்லை இல்லாத சாதிக்கு முதன்முறையாக சாதிய எல்லை வரைகிறார்கள்.
தனக்கு பிடியில்லாததை உணர்ந்த ராமதாஸ் அடுத்து போய் கூட்டிவந்தது பாஜக வை.
2011 க்கு பிறகு மிச்சம் இருந்த பாமக இளைஞரணியை இன்று பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டு,
தமிழகத்தின் நிகழ்கால சீரழிவிற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாதது போல பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், பின்தங்கிய வன்னியர்க்கு 20% இட ஒதுக்கீடு என ‘சோஷியலிஸ்ட்’ அரிதாரம் பூசி 2021 தேர்தல் மேடையில் குதித்திருக்கிறார் ராமதாஸ்.
தமிழகத்தின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு தைலாபுரத்தில் இருந்துக்கொண்டே பாடை கட்டுவாரா ராமதாஸ்? என்பதை சில மாதங்களில் அறிந்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக