வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

விவசாயிகள் பம்புசெட்டுகளுக்கு தடை இல்லாமல் மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும்- முதலமைச்சர்

விவசாயிகள் பம்புசெட்டுகளுக்கு தடை இல்லாமல் மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும்- முதலமைச்சர்
maalaimalar :விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உடுமலை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவினாசியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் திருப்பூர், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம் என மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் இஸ்லாமியர்கள், விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.இன்று 2-வது நாளாக அவர் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடர்ந்தார். உடுமலை பஸ்நிலையம் அருகே அவர் இன்று காலை பிரசாரத்தை தொடங்கினார். அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

உடுமலை சட்டமன்ற தொகுதி எப்போதும் புரட்சி தலைவி அம்மாவின் கோட்டையாக விளங்கி வருகிறது. அம்மாவின் ஆட்சியில் உடுமலை தொகுதியில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. எம்.ஜி.ஆர். அம்மா இருபெரும் தலைவர்கள் முதல்-அமைச்சராக இருந்த போதும் இங்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினோ அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை, மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

அதுமட்டுமல்ல கனிமொழி எம்.பி. திருப்பூர் மாவட்டத்திலேயே சுற்றுப்பயணம் செய்து பொய் பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை என தவறான தகவலை பரப்பி வருகிறார்.

குறிப்பாக குடிமராமத்து திட்டம் பற்றி அவர் பேசியிருக்கிறார். அந்த திட்டம் காகித அளவில் தான் உள்ளது என கூறி இருக்கிறார். அவருக்கு விவசாயிகளை பற்றி தெரிய வாய்ப்பு இல்லை. அவர் சென்னையில் வசிப்பவர்.

குடிமராமத்து திட்டத்தில் 6211 ஏரிகள் சீரமைக்க ரூ. 1,418 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மூலமும் ஏரி, குளங்களை சீரமைத்து வருகிறோம் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் மழைநீர் சேகரிக்கப்பட்டு நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

கனிமொழி

ஆனால் கனிமொழி இதையெல்லாம் தெரிந்து பேசுகிறாரா? அல்லது தெரியாமல் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

அ.தி.மு.க. அரசு பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது. எங்கள் அரசு 100 மெட்ரிக் டன்னுக்கு மேலாக உணவு தானிய உற்பத்தி செய்துள்ளது. இதற்காக விருதும் வாங்கியுள்ளோம்.

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆளுகிறது. இதனால் தமிழகத்துக்கு எதுவும் நன்மை கிடைக்கவில்லை என கனிமொழி கூறுகிறார். மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தான் திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்துள்ளோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நீங்கள் எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள். என்ன நிதியை பெற்று தந்தீர்கள்.

நாங்கள் சொன்னதால் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1100 எண் குறை தீர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கனிமொழி கூறி இருக்கிறார். ஆனால் 2 மாத காலத்துக்கு முன்பாகவே அதிகாரிகள் குழு செயல்பட்டு இந்த திட்டத்தை வெற்றி பெறச்செய்துள்ளது. இன்னும் 10 நாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளேன்.

அந்த திட்டத்தின் படி வீட்டில் இருந்தே பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனையா, தெருவிளக்கு எரியவில்லையா, பட்டா கிடைக்கவில்லையா? என 1100 எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்தால் உடனடியாக பிரச்சனை தீர்த்து வைக்கப்படும்.

ஏற்கனவே 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து பகுதிகளிலும் அமைச்சர்கள் தொகுதிக்கு சென்று மனு வாங்கினர். இதில் 9 லட்சத்து 75 ஆயிரம் மனு வாங்கப்பட்டது. 5 லட்சத்துக்கும் 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

அத்துடன் இந்த பகுதியில் கால்நடை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம் வேண்டும் என அமைச்சர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று ரூ.255 கோடியில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

காங்கயத்தில் நேற்று விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பம்புசெட்டுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110 கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விவசாயிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாரதிய ஜனதாவின் அடிமை ஆட்சி அ.தி.மு.க. என கூறி வருகிறார். 13 ஆண்டு காலம் மத்திய அரசுடன் செயல்பட்ட தி.மு.க.வினர் தமிழக மக்களின் நலனுக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களின் குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டனர்.

நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரசும், தி.மு.க.வும் தான். அதனை எதிர்த்து போராடிய கட்சி அ.தி.மு.க. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 435 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் அதிகளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

எந்த திட்டங்களை சொன்னாலும், அதனை செயல்படுத்தி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வருகிற ஒரே அரசு அம்மாவின் அரசு. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்களது ஆதரவை இரட்டை இலை சின்னத்துக்கு தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பல்லடம் பகுதிக்கு சென்று பொது மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு மகளிர் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார்.

பிரசார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், லியாகத் உள்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக