வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

சாத்தூர் பட்டாசு ஆலை திடீர் தீ விபத்து 16 பேர் உயிரிழந்தனர்

இ.கார்த்திகேயன்- ஆர்.எம்.முத்துராஜ்
பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து
பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

சாத்தூரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் உள் தொழிலாளர்களாக மூன்று லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் உற்பத்தியில் ஐந்து லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகிதத் தேவையை இப்பகுதிகளிலுள்ள பட்டாசு ஆலைகளே பூர்த்திசெய்கின்றன.

சாத்தூர்: பதறவைத்த பட்டாசு ஆலை தீ விபத்து.. 12ஆக அதிகரித்த உயிரிழப்பு! - பிரதமர், முதல்வர் இரங்கல்

இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எதிர்பாராமல் ஏற்படும் திடீர் தீ விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. இந்நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 12 பேர் உயிரிழந்தனர். சாத்தூர் அருகில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ‘ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை’ இயங்கி வருகிறது.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வந்த இந்த ஆலையில், 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வழக்கம் போல் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், பட்டாசுகளுக்கு வெடிமருந்து செலுத்திய போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து பரவிய தீயால் 6 அறைகள் வெடித்துச் சிதறியது. இதில், ஒரு பெண் உட்பட 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரைத் தவிர உயிரிழந்த மற்றவர்களின் விவரம் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

பட்டாசு உற்பத்தி அறைகள்
பட்டாசு உற்பத்தி அறைகள்

மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட எஸ்.பி., பெருமாள் ஆகியோர் பட்டாசு விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். “சில பட்டாசு ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பார்ப்பதற்காக சட்டத்தை மீறி பட்டாசு உற்பத்தி அறைகளில் கூடுதலாக தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கப்படுவதும், வேதிப் பொருள்களின் வீரியம் தெரியாமல் மருந்துகள் கையாளப்படுவதும்தான் பெரும் விபத்துகளுக்குக் காரணம். உற்பத்தியாளர்கள் விதிமுறைப்படி ஆலைகளை நடத்துவதும் தொழிலாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் மட்டுமே வெடிவிபத்துகளைத் தடுக்க முடியும்” என்றனர் பட்டாசு ஆலை உரிமையாளர்கள்.

சாத்தூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், ``தமிழகத்தின் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கவலைப் படுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ, களத்தில் அலுவலர்கள் பாடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் விருதுநகர் தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50, 000 வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழ்னக்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக