ஞாயிறு, 3 ஜனவரி, 2021

புகழ்பெற்ற எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான இளவேனில் மாரடைப்பால் காலமானார்

dinkaran : சென்னை: புகழ்பெற்ற எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான இளவேனில் (70) மாரடைப்பால் காலமானார். கலைஞரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை படத்தை இயக்கியவர் இளவேனில்; பல நூல்களையும் எழுதியுள்ளார். 

LR Jagadheesan : · இந்த ஆண்டும் இப்படியொரு பேரிழப்போடு தொடங்கியிருக்க வேண்டாம். எனது ஊடக உலகின் ஆசான் சின்னக்குத்தூசி தியாகராஜன் அறையில் அறிமுகமான பலப்பல அற்புத ஆளுமைகளில் மறக்க முடியாதவர். மக்களை நேசித்த; மண்ணில் தம் கால்கள் நிலைகொண்டவர்கள் மட்டுமே தினம் தினம் கூடிக்கலைந்த வேடந்தாங்கலாக அந்த அறை இருந்தது. Seasonal வேடந்தாங்கல் அல்ல. வருஷம் முழுக்க அது நிரந்தர வேடந்தாங்கலாக நீடித்தது. புன்னகை மாறா முகம்.                கூர்மையான அதேசமயம் நகைச்சுவை ததும்பும் பேச்சு. வலுவான வாதங்கள். அவரது கேள்விகள் எளிமையாய்த்தான் வெளிப்படும். ஆனால் அவை ஒவ்வொன்றுமே எதிர்தரப்பை சிக்கவைக்கும் கொக்கிகள் என்பதை அவர்கள் உணர்வதற்குள் அவர்கள் இவரிடம் வாதத்தில் தோற்றுவிட்டிருப்பார்கள். 

அவர் அரசியலில் கம்யூனிஸ்டாகத்தான் உருவானார். ஆனால் திராவிடத்தின் மீது தீராக்காதல் கொண்ட தமிழ்க்காதலனாகவே அவர் இறுதியில் பரிணமித்தார். உண்மையான கம்யூனிஸம் தேங்கிய குட்டையோ என்றோ எழுதப்பட்ட எழுத்தின் புனிதத்தை காக்கும் மத அமைப்போ அல்ல; மக்களின் வாழ்வியலில் அவர்களின் வரலாற்றுப்பயணத்தில் கால, தேச வர்த்தமான தேவைகளுக்கேற்ப தன்னை தொடர்ந்து புதுப்பித்து மாற்றியமைத்துக்கொண்டு வளர்ந்து பரவி வியாபிக்கும் வற்றாத ஜீவநதி என்கிற கோணத்தில் இடதுசாரி அரசியலை முன்னெடுத்த மிகச்சில கம்யூனிஸ்டுகளில் அவர் முதன்மையானவர். அதன் விளைவு அவர் விரும்பிய கம்யூனிஸம் தமிழ்மண்ணில் திராவிடர் இயக்கமாக வேர்பிடித்து வளர்ந்தோங்கி நின்றதை அவர் வெளிப்படையாக ஆமோதித்தார். ஆதரித்தார். உண்மையான தமிழ் படைப்பாளியாக ஒருவகையில் அவர் அதை ஆராதிக்கவும் செய்தார். அதற்கான அவரது சாட்சியங்களே அவரது பலப்பல அரசியல் கட்டுரைகள்; புத்தகங்கள்.

அவற்றில் இரண்டு நூல்கள் திராவிடர் இயக்கத்தவர் ஒவ்வொருவரும் படித்து பாதுகாக்க வேண்டியவை.
“புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்”
"ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’’
போய் வாருங்கள் இளவேனில். உங்களின் எழுத்துக்களே உங்களின் உண்மையான வாரிசுகள். அவை உங்கள் தனித்தன்மையை, சிந்தனைப் பெருமதியை எதிர்காலத்தில் தமிழர்களுக்கு தொடர்ந்து உணர்த்தும்; உறுதிப்படுத்தும்.
பிகு: தமிழ்நாட்டின் மீது நடந்த இந்தித்திணிப்பு என்கிற ஆனப்பெரிய அரசியல்/கலாச்சார படையெடுப்பை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓர்க்குரலில் எழுப்பிய போர்க்குரலை, அதன் வீரியத்தை, முழுமையான வீச்சை அதன் பன்முகத்தன்மையை தன் எழுத்தின் வழியே அவர் நம் கண்முன் நிறுத்துவார். கருத்தில் உறையச்செய்வார். அந்த கதையும் காட்சிகளும் இன்றுவரை ஏன் திரையில் காட்சியாய் விரியவில்லை என்பது எனக்குப்புரியாத புதிர். உண்மையில் சி சு செல்லப்பாவின் வாடிவாசல் ஒரு சராசரிக்கும் கீழான குறுநாவல். படிக்க முடியாமல் படித்து முடித்த கதை. அதையெல்லாம் படமாக்கும் வெற்றிமாறன்கள் கண்ணில் இளவேனிலின் வீரியமிக்க எழுத்துக்கள் படாமல் போனது வேதனை தான். எதிர்காலத்திலேனும் அவை திரையில் கண்முன் விரியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில் அந்த காட்சிகளின் வலிமை அப்படி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக