ஞாயிறு, 3 ஜனவரி, 2021

ஸ்டாலினுக்கு வேலுமணி சவால் ! என் மக்கள் மீது கை வைத்தால்..

minnampalam : கொரோனா காலத்தில் பல தலைவர்கள் அறைக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர். ஆனால், முதலமைச்சர் தன்னைப்பற்றி கவலைப்படாமல் களப்பணியாற்றினார். எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியை பிடிக்க ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முதலமைச்சர் மீதும், என் போன்ற அமைச்சர்கள் மீதும் கூறி வருகிறார்.
என் மக்கள் மீது கை வைத்தால்...- ஸ்டாலினுக்கு வேலுமணி சவால்!

அவர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க தடையாய் இருந்தவர்கள் நாங்கள். அதனால் இப்படி அவதூறு பரப்பி வருகிறார். கோவை வந்திருக்கிறார் ஸ்டாலின். என் மீதான ஊழலை நிரூபித்தால் இன்றே நான் எனது பதவியை ராஜினாமா செய்வதாக உடனடியாக கடிதம் கொடுக்கிறேன். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா?இன்றே சவாலுக்கு தயாராக உள்ளேன்.குற்றச்சாட்டுகள் அரசியலுக்காக மட்டுமே. ஊழல் குற்றச்சாட்டுக்களை கூற மு.க.ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை”என்று கூறிய வேலுமணி கிராம சபை கூட்டத்தில் நடந்தது என்ன என்பது பற்றியும் கூறியுள்ளார்.

”அந்த அம்மா விடுதலை சிறுத்தை கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்தவர். அந்தக் கோவில் 2000 வருட பழமையான கோயில். அதை மறித்துதான் கிராம சபை கூட்டம் நடத்துகிறார். அவர் உள்ளிட்ட சிலர் கோயிலுக்கு போய்விட்டு வந்தனர். அப்போது இந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு நின்றுள்ளனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு என்று ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். அந்த அம்மா கேட்டது நியாயம். ஆனால் அதற்காக கை வைத்து தாக்குவது என்ன நியாயம்? இதற்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும்.”என்ற வேலுமணியிடம்,

”நீங்கள்தான் ஆள் அனுப்பி குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?” என்று கேட்டதற்கு,

“அந்த நிகழ்ச்சி நடந்ததே எனக்குத் தெரியாது. இப்படி நடந்ததும் போன் போட்டு அந்த பெண்ணிடம் நிர்வாகிகள் எனக்குக் கொடுத்துள்ளனர். ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு நான் கூறினேன். அந்த மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கோபப்பட்டு இதுபோல திமுகவினர் செய்கிறார்கள். என் மீது என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் என் மக்கள் மீது கை வைத்தால் சும்மா இருக்க மாட்டோம்.

ஆண்மையுடன் சவால் விடுகிறேன்.ஸ்டாலின் ஆண்மையுள்ளவராக இருந்தால் சவாலை சந்திக்க தயாரா? அப்படி நிரூபித்தால் நான் அடுத்த தேர்தலில் சீட் கூட கேட்க மாட்டேன்” என்று கூறியுள்ளார் வேலுமணி.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக