ஞாயிறு, 31 ஜனவரி, 2021

வெளிநாட்டு பணியாளர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஐக்கிய அரபு அமீரகம்.. யாருக்கெல்லாம் குடியுரிமை கிடைக்கும்?

"வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?
சாய்ராம் ஜெயராமன் - பிபிசி தமிழ் : "வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்? கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அரபு நாடுகளில் மிக நீண்டகாலமாக பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் திடீரென தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது பலரது வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது. இத்தனை ஆண்டுகாலமாக நேரம், காலம் பார்க்காமல் கடும் உழைப்பை வெளிப்படுத்திய தங்களை உடனடியாக நாட்டை விட்டு கிளம்ப சொல்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதேபோன்று, யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை இப்போது ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள் என்றாலும் இதுவரை அந்த நாட்டு அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், புதிய அறிவிப்பின்படி யாருக்கெல்லாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை கிடைக்கக்கூடும்? அதற்கான தகுதி என்ன? பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் குடியுரிமை கிடைக்குமா? இதுகுறித்து அங்கு வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? உள்ளிட்ட விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

"வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலுசேர்க்கும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை அந்த நாடு முதல்முறையாக அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு குடியுரிமை திட்டத்தின்படி, முதலீட்டாளர்கள், தனித்துவமான திறமைகள் கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பணியாளர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் குடியுரிமை வழங்கப்படும் என்றும், மேலும் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டிருக்க முடியுமென்றும் அவர் அறிவித்துள்ளார்.

"நமது (ஐக்கிய அரபு அமீரகத்தின்) வளர்ச்சி பயணத்துக்கு பங்களிக்கும்" நபர்களை கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.

சிறந்த கல்வியறிவு மற்றும் பணித்திறனை கொண்டுள்ளவர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தரமாக தக்க வைக்கும் முயற்சியாக பார்க்கப்படும் இந்த திட்டத்தால், குறைந்த வருமானம் கொண்ட உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு பெரியளவில் பலன் இருக்காது என்றே கருதப்படுகிறது.

இதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்னவென்றால், குடியுரிமை பெற விரும்புபவர்கள் மற்ற நாடுகளை போன்று தாங்களாகவே குடியுரிமை கோரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது.

ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய திட்டத்தின்படி, குடியுரிமை பெற எந்தவித விண்ணப்பம் சார்ந்த நடைமுறையே இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, தகுதிவாய்ந்த தனிநபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பமோ அல்லது அதிகாரிகளோ பரிந்துரை செய்வார்கள் என்றும் அதுகுறித்த முடிவை அமைச்சரவை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த திடீர் அறிவிப்பு?

"வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?

ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் அந்த நாட்டில் உள்ள குடிமக்களின் எண்ணிக்கை வெறும் பத்தில் ஒரு மடங்குதான். அதாவது, அந்த நாட்டின் வளர்ச்சியில், செயல்பாட்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பங்கு அளவிடற்கரியது.

2005ஆம் ஆண்டு வெறும் 41 லட்சமாக இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகை அதிவேகமாக உயர்ந்து 2010இல் 83 லட்சமாக அதிகரித்தது. இதற்கு அங்கு ஏற்பட்ட தொழில்வளர்ச்சியும் அதனால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து குவிந்த பணியாளர்களுமே காரணம். அப்போது முதல் உயரத்தொடங்கிய அந்த நாட்டின் மக்கள் தொகை கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு வரை புதிய உச்சங்களை தொட்டு வந்ததாக தரவுகள் கூறுகின்றன.

ஆம், கொரோனா வைரஸ் பரவலாலும், மீண்டெழாத கச்சா எண்ணெயின் விலையாலும் வேலைவாய்ப்பை இழந்த பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையால் குறைந்த ஊதியம் பெறும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட உடலுழைப்பு தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றாலும், இது பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

உலகின் நிதி தலைநகராகவும், சுற்றுலா மையமாகவும் உருவெடுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், தனது அடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கு அயல்நாடுகளை சேர்ந்த துறைசார் வல்லுநர்களை பெரிதும் சார்ந்துள்ளது.

இந்த நிலையிலேயே, திறன்மிகு வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களை தக்க வைக்கும் வகையிலேயே இந்த புதிய குடியுரிமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபியை சேர்ந்த தி நேஷனல் என்ற செய்தித்தாள் கூறுகிறது.

இதுவரை பணிவாய்ப்பை அடிப்படையாக கொண்ட சில ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கத்தக்க நுழைவு இசைவு (விசா) மட்டுமே வெளிநாட்டு பணியாளர்களுக்கு கொடுத்து வந்தது ஐக்கிய அரபு அமீரகம்.

"வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?

ஐக்கிய அரபு அமீரகம், குறிப்பாக அங்குள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களின் வியக்கத்தக்க வளர்ச்சிக்கு பின்னால் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

பெரும்பாலும் கட்டுமானம், உணவகம், சுற்றுலா, வர்த்தகம், இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை தாய்நாட்டிலுள்ள தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இவர்களில் லட்சக்கணக்கானோர், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வந்தாலும், இதுவரை நிரந்தர வசிப்புரிமையோ அல்லது குடியுரிமையோ அல்லது சமூக நலன் சார்ந்த வசதிகளோ வழங்கப்பட்டதில்லை.

மாறாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புதிததாக வரும் தொழில்முனைவோர் அல்லது முதலீட்டாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நீண்டகாலம் வசிக்கும் வகையிலான நுழைவு இசைவை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டு அரசு வழங்கி வருகிறது.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள், திறன்மிகு மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு "கோல்டன் விசா" என்ற பெயரில் சுமார் பத்தாண்டுகள் அந்த நாட்டில் வசிக்கும் வகையிலான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் நீட்சியாகவே தற்போது திறன்மிகு மற்றும் தேவை அதிகம் உள்ள பணியாளர்களை தக்க வைப்பதற்காக குடியுரிமை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும், இந்த திட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுபவர்களுக்கு ஏற்கனவே குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச கல்வி, சுகாதாரம், வீட்டு கடன் உள்ளிட்ட வசதிகள் கிடைக்குமா என்பது குறித்து இதுவரை தெளிவில்லை.

வளைகுடா நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு பொதுவாக குடியுரிமை வழங்கப்படுவதில்லை. இது பொதுவாக அமீரகத்தை பூர்விகமாக கொண்ட ஆண்களின் மனைவிகளுக்கும், அமீரகத்தை சேர்ந்த ஆண்களின் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வெளிநாட்டினரை மணந்த அமீரகத்தை சேர்ந்த பெண்களின் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை அளிக்கப்படாது. மாறாக அதற்கு விண்ணப்பிக்க வேண்டும், இந்த நடைமுறைக்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

தமிழக பணியாளர்களின் பங்கு

இந்தியாவுக்கும் ஐக்கிய அரேபு அமீரகத்துக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக சிறப்பான உறவு நிலவி வருவதாக கூறும் அங்குள்ள இந்திய தூதரகம், 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அந்த நாட்டில் சுமார் 34 லட்சம் இந்தியர்கள் வசித்து வருவதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும்.

இந்தியர்களை பொறுத்தவரை, குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் கூறுகிறது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"1970-80களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியர்கள் பெரும்பங்கு வகித்த நிலையில், காலம் செல்ல செல்ல அந்த நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு துறைசார் வல்லுநர்களாகவும் இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். தற்போதைய நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள 65 சதவீத இந்தியர்கள் உடலுழைப்பு தொழிலாளர்களாகவும், 20 சதவீதத்தினர் பல்வேறு துறைகளில் உதவியாளர்களாகவும், 15 சதவீதம் பேர் தொழில்முறை பணியாளர்கள் மற்றும் தொழில்முனைவோராகவும் உள்ளனர்."

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழகத்தை சேர்ந்தவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக துபையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டடக் கலைஞராக பணியாற்றி வருபவருமான சற்குணராஜ் நவீன், வளைகுடா நாடுகளில் முன்னெப்போதுமில்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்று கூறினார்.

"வளைகுடா நாடுகளில் 30 - 40 ஆண்டுகளாக வசிக்கும் தமிழர்கள் பலர் உள்ளனர். தங்களது வாழ்வின் பெரும்பாலான காலத்தை இங்கு செலவிடும் அவர்கள் ஓய்வு காலத்திற்கு பிறகு, இங்கேயே வசிப்பது என்பது சிரமம் நிறைந்த விடயமாக உள்ளது. மேலும், இங்கேயே பிறந்து, வளர்ந்த அவர்களது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் ஒரு கட்டத்திற்கு பிறகு தள்ளாட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே, திறன்மிகு பணியாளர்கள் தங்களது அனுபவம் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தி இந்த நாட்டின் குடியுரிமையை பெற வழி ஏற்பட்டுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியே" என்று கூறுகிறார்.

இருப்பினும், குறைந்த ஊதியம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்யும் வகையில் அரசு சிறப்புத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.

சற்குணராஜ் நவீன்
படக்குறிப்பு,

சற்குணராஜ் நவீன்

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, 10 - 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழர்களை பெரும்பாலும் உடலுழைப்பு தொழிலாளர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த நிலைமை தலை கீழாக மாறியுள்ளதாக கூறும் நவீன், "தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய அரசுத்துறைகளில் தமிழர்களின் பலர் பணியாற்றுவதை வெகு எளிதாக காண முடிகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப துறையிலும், கட்டுமானத்துறையில் பொறியாளர் உள்ளிட்ட உயர் பதவிகளிலும் தமிழர்களின் பங்கு அதிகம் காணப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

சமீப ஆண்டுகளில் அயல்நாட்டு பணி என்பது சாதாரண விடயமாக மாறி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தமிழர்கள் இன்னமும் சார்ந்திருப்பதன் காரணம் என்னவென்று கேட்டபோது, "மேற்குலக நாடுகளில் பணிவாய்ப்பு அதிகரித்து வந்தாலும், அது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. ஆனால், வளைகுடா நாடுகளை பொறுத்தவரை, ஓரளவு கல்வியறிவு உள்ளவர்கள் கூட, தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது சுற்றுலா நுழைவு இசைவிலோ (விசா) இங்கு வந்து சில மாதங்களில் பணிவாய்ப்பு பெற்று, பிறகு வேலைவாய்ப்புக்கு உரிய அனுமதியை பெற்றுவிட முடியும்" என்று நவீன் கூறுகிறார்.

வேலைவாய்ப்பு சார்ந்த அச்சத்தின் காரணமாக தாய்நாட்டுக்கு திரும்பும் திறன்மிகு பணியாளர்களை தக்க வைப்பதற்காக மட்டுமின்றி தங்களது வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டு பணியாற்றுபவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த குடியுரிமை வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதே ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அயல்நாட்டு பணியாளர்களின் கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக