சனி, 9 ஜனவரி, 2021

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் தொழிலாளி தற்கொலை

maalaimalar : டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பெருமாள் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் தொழிலாளி தற்கொலை
கோப்பு படம்
சென்னை: சென்னை அசோக்நகர் 10வது அவென்யூ பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பெருமாள்(வயது 72). இவர் மரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பெருமாள், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது, பெருமாளின் சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இரண்டு பக்க அளவில் நீண்ட அந்த கடிதத்தில், தனது சொந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தற்கொலை செய்து கொள்வதாகவும் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வகையில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தொழிலாளி பெருமாளின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் 45-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக