புதன், 6 ஜனவரி, 2021

புதுச்சேரி: திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்?

minnambalam :ுதுச்சேரி என்றாலே தெளிவில்லாமல்தான் இருக்கும் என்று சிலேடையாய் சொல்லுவார் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர். ஆனால், இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலினோ, புதுச்சேரியில் தெளிவற்ற சூழலைக் கருத்தில் கொண்டு ஒரு தெளிவான முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்,
புதுச்சேரி:  திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்?

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் அதிகமாகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் காங்கிரசின் பலவீனத்தால் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கிடைத்த தகவல்களால்... புதுச்சேரியில் தனித்தே நிற்கலாமென்ற முடிவுக்கு வந்திருக்கிறது திமுக.இதுகுறித்து, திமுக காங்கிரஸ் உறவு முறிவு என்ற தலைப்பில் டிசம்பர் 16 ஆம் தேதியன்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “தமிழகத்தில் திமுக காட்டும் அரசியல் ஆர்வத்தை, கடந்த இருபது ஆண்டுகளாக புதுச்சேரியில் காட்டவில்லை. கடைசியாக 1996 இல் திமுக சார்பில் ஆர்.வி. ஜானகிராமன் முதல்வராக பதவியேற்று 2000 வரை பதவி வகித்தார். அதற்குப் பின் கடந்த இருபது வருடங்களாக புதுச்சேரியில் திமுக ஆட்சியில் இல்லை. தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சிதான் புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்த முறையாவது திமுக ஆட்சி மலரவேண்டும். உங்கள் தலைமையில் தமிழ்நாடு, புதுச்சேரி என இரு மாநிலங்களிலும் திமுக ஆட்சியில் அமரவேண்டும். அது தேசிய அளவில் உங்களை கவனிக்க வைக்கும் என்று புதுச்சேரி திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதற்குக் காரணமாக அவர்கள் காங்கிரஸ் உட்கட்சிப் பூசலை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக தனியாகவே நிற்கலாமா என்ற ஆலோசனையை தீவிரமாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட புதுச்சேரியில் தனியாக நிற்கலாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் புதுச்சேரி திமுக வட்டாரத்தில்”என்று அச்செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

புதுச்சேரி காங்கிரஸ், திமுக கட்சிகளுக்குள் நடக்கும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், முதல்வர் நாராயணசாமியின் திட்டங்களுக்கு பாஜக பிரதிநிதியாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார். அதனால் காங்கிரஸ் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மக்கள் வெறுப்பையும், சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர்களின் எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருகிறார் முதல்வர் நாராயணசாமி. தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை, சம்பாதிக்கவும் முடியவில்லை என்ற கோபத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ,க்கள் பலர், திமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரோடு நெருக்கம் காட்டிவருகிறார்கள்.

உதாரணமாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்தபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் அவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி பேசிட்டு வந்தார். அந்த சந்திப்புப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “என் தொகுதியை முதல்வர் நாராயணசாமிக்கு விட்டுக் கொடுத்தபோது பல வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதில் எதுவும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்றாத பட்சத்தில் மாற்றுக் கட்சிக்குப் போவேன்” என்றார், அவருக்குப் பதில் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், “ ஜான்குமார் மீது அமலாக்கப் பிரிவில் வழக்கு உள்ளது. அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவர் முயற்சிக்கிறார்”என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஜனவரி 8ஆம் தேதி, துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்ட காங்கிரஸ், அதற்காக மக்களைத் திரட்ட தெருமுனை பிரச்சாரம் கூட்டங்கள் நடத்திவருகிறது. இந்த வகையில் மூத்த அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் தெருமுனை பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.

மூத்த அமைச்சரான நமச்சிவாயம் ஆரம்பகாலத்தில் உழவர்கரையில் திமுக இளைஞரணி நிர்வாகியாக இருந்தவர். அதனால், அவரை மீண்டும் திமுகவுக்கு கொண்டு வர சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் நமச்சிவாயத்தை தன் பக்கம் இழுத்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜகவும் பலத்த முயற்சி செய்து வருகிறது.

இதே நேரம் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிவருவதை சில சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைப் புதுச்சேரியில் திமுகவும், காங்கிரசும் தனித்தனியாக நடத்தினார்கள். துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் திமுக கலந்துகொள்ளவில்லை

இந்த நிலையில் தனியாக நிற்க முடிவு செய்துவிட்ட திமுக புதுசேரிக்கான முதல்வர் வேட்பாளரையும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

“புதுச்சேரியில் வன்னியர் அரசியல் எடுபடும் என்பதால்தான் பாமகவும் அங்கே குறிப்பிடத் தக்க கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனை புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று திமுகவின் மாநில பொறுப்பாளர்கள் சிவா, நாஜிம், எஸ்.பி.எஸ் ஆகியோர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளார்கள். இதுபற்றி ஜனவரி 5 ஆம் தேதி ஸ்டாலினை சந்தித்த புதுச்சேரி திமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்கள். இதன் அடிப்படையில் தற்போது ஜெகத்ரட்சகனும் புதுச்சேரி அரசியலில் தீவிரமாகக் கவனம் செலுத்திவருகிறார்.

ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநில திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற தகவல் முன்கூட்டியே புதுச்சேரி அரசியல் தலைவர்களிடையே கசிய, காங்கிரஸ் பதற்றமாகியிருக்கிறது.

கூட்டணியை விட்டு விலக வேண்டாம் என்று முதல்வர் நாராயணசாமியும் மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிவருகின்றனர். தேவைப்பட்டால் புதுச்சேரி, சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இடங்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஜெகத்ரட்சகனிடமே காங்கிரஸார் பேசுகின்றனர். திமுக புதுச்சேரியில் தனியாக நின்றால் தமிழகத்தில் என்ன நிலை என்றும் ஒரு கேள்வி எழுகிறது.

ஆனால் புதுச்சேரியில் திமுக தனித்து நிற்கலாம் என்றும், முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை அறிவித்தால் நிச்சயம் ஜெயிப்போம், ஒரே தேர்தலில் இரு மாநிலங்களில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஸ்டாலினிடம் அறிவாலய ஆலோசனையில் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்” என்கிறார்கள்.

-எம்.பி.காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக