புதன், 6 ஜனவரி, 2021

தேவேந்திர குல வேளாளர் சான்றிதழ்: அரசு உத்தரவு!

minnambalam : பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கும் அரசுப்
தேவேந்திர குல வேளாளர் சான்றிதழ்: அரசு அதிரடி உத்தரவு!

பணிகளில் சேர்வதற்கும் குறிப்பாக பட்டியலின மக்கள் தங்களுக்கான சலுகைகளை முழுமையாகப் பெறுவதற்கும் சாதி சான்றிதழ் தேவை. குறிப்பாக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கு தொடக்கத்திலும் சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வருவாய் துறை அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்களிலும் படையெடுப்பது தொடர்ந்து வருகிறது.   தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் அடுத்து வேறு பள்ளிகளில் சேர்வதற்கும் மாற்றுச் சான்றிதழில் தங்கள் சமுதாயத்தை உறுதிப்படுத்துவதற்கும் சாதிச் சான்றிதழ்களை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் பட்டியல் இனத்துக்குள் வரும் பள்ளர் சமுதாய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு கடந்த சில நாட்களாக வருவாய் துறை அலுவலகங்களை அணுகியபோது... "இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு பொதுப் பெயரில் சான்றிதழ் கிடைக்கும். . அதுவரைக்கும் உட்பிரிவுகள் பெயரில் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்களை நிறுத்தி வைக்கச் சொல்லி வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறது.எனவே கொஞ்சம் காத்திருங்கள்” என்று தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலகங்களில் சொல்லியிருக்கிறார்கள்.... இதன் பின்னணி பற்றி விசாரித்தபோது... "குடும்பர், பள்ளர், பண்ணாடி, மூப்பர், காலாடி ஆகிய உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப் பெயரில் மாற்றுமாறு கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன‌ .

சில நாட்களுக்கு முன் பரமக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைப்பதற்கான அரசாணை இன்னும் 30 நாட்களுக்குள் வெளியிடப்படும்’ என்று அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் வரும் தேர்தலில் பெறலாம் என்று அதிமுக அரசு கருதுகிறது. முதல்வரின் வார்த்தை வார்த்தையாகவே இருந்து விடக்கூடாது என்பதால் அதை ஜனவரிக்குள் ஒப்புதல் பெற்று செயல்படுத்திட வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் விளைவாகத்தான் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயர் கேட்கும் உட்பிரிவு மக்களுக்கு சாதி சான்றிதழ் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே விரைவில் கிடைக்கும் என்றும் இப்போதைக்கு அந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் தராமல் நிறுத்தி வைக்குமாறு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது"என்று வருவாய்த் துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

-வேந்தன்

1 கருத்து: