வியாழன், 21 ஜனவரி, 2021

பாசிச பாசகவை எதிர்க்கும் லட்சணம். ! தப்பித்தவறி அதிமுகவை எதிர்த்துவிடக்கூடாது

Image may contain: 5 people, people smiling
Aazhi Senthil Nathan : · பாசிச பாசகவை எதிர்க்கும் லட்சணம். நேற்று சென்னையில் சில அரசியல் குழுக்கள் இணைந்து பாசிச பாசகவை வீழ்த்துவதற்காக ஒரு தேர்தல் வியூகத்தை வகுத்திருக்கின்றன. 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாசிச பாசகவை தோற்கடிப்போம் என்கிற தலைப்பில் ஒரு கலந்தாலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாகவே எங்கள் தன்னாட்சி்த் தமிழகத்தைப் புறக்கணிக்கும் இந்தக் குழுக்கள் இந்த முறை எங்களையும் அழைத்திருந்ததால், நானும் தோழர் தங்கபாண்டியனும் வியப்பும் எதிர்ப்பார்ப்பும் ஒன்று சேர அங்கே சென்றிருந்தோம். ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றுகூடி எதிர்வரும் தேர்தலில் பாசிச பாசகவைத் தோற்கடிக்கத் திட்டம் தீட்டியிருந்தன.
இதை முதலில் கலந்தாலோசனைக் கூட்டம் என்றுதான் நானும் நினைத்தேன். பிறகுதான் அவர்கள் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தீட்டி தயாராக வைத்திருந்தார்கள் என்பதும் ஒரு ஐம்பது அறுபது அமைப்புகளைக் கூட்டி அவர்கள் மத்தியில் இதை அறிவிப்பதற்குத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. சரி, இது என்ன புதிய விஷயமா நமக்கு என்று அமைதியாக இருந்தோம்.
தொடக்கத்திலிருந்தே அனைவரும் பாசிச பாசகவுக்கு எதிராகப் பொங்கியெழுந்து பேசத்தொடங்கினர். ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாசிச பாசகவைத் தோற்கடிப்பதுதான் இலக்கு என்று கூறப்பட்டதால், அது குறித்து குறிப்பாக என்ன கூறப்படுகிறது என்பதுதான் எங்கள் ஆவலாக இருந்தது.
இறுதியில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த புரட்சிகர அமைப்பினரின் கருத்துகள் வரும்வரை காத்திருந்துதான் அதைப்புரிந்துகொள்ளமுடிந்தது. மேட்டர் இதுதான்: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பாசிச பாசக நிற்குமோ அங்கெல்லாம் அதற்கு எதிராக வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்யவேண்டும் என்று புரட்சிகர அமைப்புகளின் இந்தக் குழு முடிவுசெய்திருக்கிறது.
பாசக எதிர்ப்பு என்றால் துல்லியமான பாசக எதிர்ப்புதான்! தப்பித்தவறி அதிமுகவை எதிர்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாசகவை எதிர்ப்பது என்றால் பாசகவை உள்ளடக்கிய கூட்டணியை எதிர்ப்பது என்றுதானே அர்த்தம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பாசக எதிர்ப்பில் துல்லியமாக இருந்தால் பாசகவைத்தான் எதிர்க்கவேண்டும். அதிமுக எதிர்ப்பு அது இது என்று கவனம் சிதறக்கூடாது புரட்சியாளர்களே என்று அவர்கள் எங்களுக்குச் சொல்லாமல் சொல்லி அறிவுறுத்தினார்கள்.
பாசகவுக்கு அல்லது அது இடம் பெறும் கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணியை ஆதரிக்கலாமா என்று கேட்டால் அது சாத்தியமில்லை என்று கைவிரித்துவிட்டார்கள். பல புரட்சிகர, முற்போக்கு, தமிழ்த்தேசியக் கட்சிகள் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க இயலாது என்பதால், பாசக எதிர்ப்பு என்கிற குறைந்தபட்ச முடிவை எடுத்திருக்கிறோம் என்று விளக்கப்பட்டது.
ஆனால் என்னுடைய கேள்வியே 2021 இல் பாசகவைத் தோற்கடிப்போம் என்பதுதான் இந்தக் கூட்டமைப்பின் பொது முழக்கமாக இருக்கிறது என்றால் எப்படித் தோற்கடிப்பீர்கள் என்பதுதான்.
நான் பேசும் போது கீழ்கண்ட கருத்துகளைச் சுருக்கமாக எடுத்துரைத்தேன்:
1. அகிம்சைப் போராட்டக் களத்திலிருந்து ஆயுதப் போராட்டக் களம் வரை பல்வேறு அரசியல் களங்கள் உள்ளன. பெருந்திரள் போராட்டம் தொடங்கி ஊடகப் போராட்டம் வரை பல செயற்களங்கள் உளளன. தேர்தல் என்பது அப்படிப்பட்ட ஒரு போராட்டக்களம்தான். ஒவ்வொரு போராட்டக்களத்துக்கும் தனித்தனி விதிமுறைகள், நியதிகள், வியூகங்கள், உத்திகள், தர்க்கங்கள் உண்டு. தேர்தலை தேர்தலாகப் பார்க்கவேண்டும். அந்தத் தேர்தல் போராட்டக்களத்துக்கான நியதிகளைப் புரிந்துகொண்டுதான் செயல்படமுடியும்.
2. இந்தியாவிலுள்ள முதலில் வருபவரே வெல்பவர் என்கிற first past the post முறையில் ஒரு வாக்கைக் கூடுதலாகப் பெறுபவர்கூட முழு வெற்றி பெறுகிறார், ஒரு வாக்கை குறைவாகப் பெறுகிறவர்கூட முழு தோல்வி அடைகிறார். இங்கே விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இல்லை.
3. எனவே, யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொல்கிற அதே நேரம், யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதையும் சொல்லவேண்டும். வாக்குகள் சிதறினால் எதிரி வெற்றிபெறுவான். இதை இந்தியா முழுக்க பார்த்திருக்கிறோம். சமீபத்தில் பிஹாரிலும் பார்த்தோம்.
4. எனவே பாசக இடம்பெறும் கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணியை ஆதரிக்கவேண்டும்.
5. திமுக கூட்டணியை ஆதரிப்பதால், திமுகவின் மீதான நமது விமர்சனங்களோ மதிப்பீடுகளோ மாறிவிடுவதில்லை. தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி ஒரு தவறான முடிவை எடுக்குமானால் அதை எதிர்க்கக்கூடியவர்களாகவும் நாமே இருப்போம். 2009 ஈழ இனப்படுகொலை சமயத்தில் (அப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை) நானும் திமுக - காங்கிரசுக்கு எதிராக அதிமுகவுக்கே வாக்களித்திருக்கிறேன். இன்றைய நிலையில் பாசக - அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கு வாக்களிக்கலாம் என்று கூறுகிறேன். அதாவது இந்த முடிவுகள் தேர்தல் களத்தின் தர்க்க, நியதிகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
- இதுதான் நான் பேசியதன் சாராம்சம். இதற்கு பெரிய அளவுக்கு ஆதரவு கிடைக்காது என்றுதான் நினைத்தேன். வழக்கம்போல நம்மை திமுக சொம்பு முத்திரைக் குத்துவதைத் தவிர வேறென்ன நடக்கப்போகிறது என்பதும் என் எதிர்ப்பார்ப்பு. ஆனால் அதையும் மீறி சிலர் என் கருத்துக்கு ஆதரவுத் தெரிவித்தும் பேசினார்கள். ஆனால் நம் பாசிச எதிர்ப்பு ஜனநாயகவாதிகள் ஏற்கனவே தங்கள் முடிவுகளை எழுதிவைத்துவிட்டு எங்களை ஒப்புக்குச் சப்பாணியாக நடத்தினார்கள் என்பதுதான் உண்மை என்பதால், அதெல்லாம் விவாதிக்கப்படவோ மாற்றங்கள் செய்யப்படவோ இல்லை.
உண்மையில், நான் இதுபோன்ற குழுக்களோடு முப்பது ஆண்டுகாலமாக தொடர்பில் இருக்கிறேன். இப்போது இந்தக் குழுக்களில் இருக்கும் சிலருக்கு வயதே முப்பதாக இருக்கலாம். இவர்களுக்கு இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம், தேர்தல் குறித்து எந்த உருப்படியான சிந்தனையோ வியூகமோ இருந்ததில்லை.
நான் முன்பெல்லாம் இவர்கள் தூய்மைவாதிகள், அகவயவாதிகள், எனவேதான் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் இவர்களிடம் உறைந்திருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதற்கு எனக்கும் கனகாலம் பிடித்தது. இவர்களில் பலர் அடிப்படையில் வெறுமனே திமுக எதிர்ப்பாளர்கள். "நுண்ணிய நூல்பல கற்பினும்", கடைசியில் வெளிப்படுவது அது ஒன்றுதான்.
பாசக கூட்டணியைத் தோற்கடிப்போம் என்று சொல்வதற்குக்கூட முடியவில்லை பாருங்கள். அந்த அளவுக்கு அடிமை அதிமுகவுக்கும்கூட சேவகம் செய்யத்தயாராக இருக்கிறார்கள். எனவே எச் ராஜாவையும் வானதி சீனிவாசனையும்தான் எதிர்க்கவேண்டும், ஈபிஎஸ், ஓபிஎஸ், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜனெல்லாம் தோற்கடிக்கப்படுவது குறித்து எந்த "நிலைப்பாடும்" இல்லை. இப்படிப்பட்ட ஒரு பாசிச எதிர்ப்பு வியூகத்தை நீங்கள் கற்பனைசெய்துகூட பார்க்கமுடியாது!
தமிழ்நாட்டில் பாசக தனியாக நின்று ஜெயிக்கப்போவதில்லை. அதன் செயல்பாடுகள் அதிமுக மூலமாகவே இதுவரை நடந்தேறிவருகின்றன. இனிமேலும் நடந்தேறும். இது பச்சைப் புள்ளைக்கும் தெரியும். ஆனால் புரட்சியாளர்களுக்குத் தெரியாது.
"திமுகவை ஆதரிக்கவேண்டும் என்று சொல்கிறீர்களே. நாளைக்கு அவர்கள் பாசகவை ஆதரித்தால் என்ன செய்வீர்கள்?" - ஒரு புரட்சியாளர்.
"அப்போது எதிர்க்கவேண்டியதுதான்!" - நான்
"அதனால்தான் இப்போதே எதிர்க்கிறோம்!" - அவர்.
ஆக, நாளை திமுக பாசக பக்கம் போய்விடக்கூடும் என்பதால், இப்போது பாசக பக்கம் இருக்கிற அதிமுகவை எதிர்க்கமாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்!
இதற்குமேல் கேட்டால், உடனே 2009 நினைவுபடுத்துவார்கள். திமுகவின் பி டீம் என்பார்கள். தாங்கள் யாருடைய பி டீமாக இருக்கிறோம் அல்லது ஆகிக்கொண்டிருக்கிறோம் என்பது குறித்து எந்தக் கவலையும் கிடையாது!
தேர்தல் என்கிற களத்தில் எதிரியைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தைப் பற்றி பேசவே மாட்டார்கள். பேசவேமாட்டார்கள். ஆயிரம் அமித்ஷாக்களும் குருமூர்த்திகளும் சொல்லிக்கொடுக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேமாட்டார்கள். இந்தியாவில் இந்த தருணத்தில், தேர்தல் என்பது இருமைசார்ந்த (binary) ஆட்டம்தான், அதில் ஒரு தரப்பின் தீர்மானகரமான தோல்விக்கு இன்னொரு தரப்பின் தீர்மானகரமான வெற்றி அவசியம் என்பதை உணர்ந்துகொள்ளமுடியாத அளவுக்கு அந்த திமுக எதிர்ப்பு மனநிலை ஆட்டிப்படைக்கிறது.
தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கும்படி கோருவதென்பது திமுகவுக்கான நிபந்தனை அற்ற ஆதரவோ அல்லது என்றென்றைக்கும் திமுகவை ஆதரித்துக்கொண்டிருப்பதோ அல்ல. ஒரு பெரியக் கட்சியின் கூட்டணிக்கட்சிகளே கூட அப்படி பிளாங்க் செக் தருவது கிடையாது. இன்று தேர்தலில் ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறோம் அல்லது ஒரு கட்சியோடு ஆதரவுத்தளத்தில் செயல்படுகிறோம் என்பதெல்லாம் முழுக்க முழுக்க வியூகம் சார்ந்த செயல்பாடுகள்தான்.
இதைப் புரிந்துகொள்வது சிரமமில்லை. ஆனால் காலம் காலமாக ஊறிப்போயுள்ள சில நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் அவ்வாறு புரிந்துகொள்வதைத் தடுக்கின்றன. மக்கள் முக்கியமில்லை, தாங்கள்தான் முக்கியம். மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுத்தால் போதும் என்கிற நிலையில்தான் இவர்கள் இருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு வேறு ஒரு உரையாடல் நடந்தது. இந்தியாவில் பாசிச பாசகவுக்கு எதிராக பல கட்சிகளை அணி திரட்டும் முயற்சி குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள் சில இளைஞர்கள். பிஹார் தேர்தல் முடிந்த நிலையில் அது நடந்தது. அந்த இளைஞர்கள் தேஜஸ்வி யாதவைப் புகழ்ந்தும் ஓவைசியைத் திட்டியும் பேசிக்கொண்டிருந்தார்கள். போகிற போக்கில், மமதா, ஏன் உத்தவ் தாக்கரேவைக்கூட அங்கீகரித்துப் பேசினார்கள். ஜெகன் மோகன் ரெட்டி பாசிச எதிர்ப்பணிக்கு வரத் தயாராக இருப்பாரா என்றும் என்னைக் கேட்டார்கள்.
நான் சிரித்துக்கொண்டே, "எல்லாம் சரி, வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படலாம், வருகிறீர்களா?" என்று கேட்டேன்.
பதில்: கிட்டத்தட்ட மெளனம்.
இவர்களுக்கு மமதா பிரச்சினையில்லை, நேற்றுவரை பாசக அணியிருந்த இந்துத்துவக்கட்சியான சிவசேனா கூட பிரச்சினையில்லை, வாரிசு அரசியல்வாதி தேஜஸ்வி யாதவ் கூட கதாநாயகன்தான். ஆனால் திமுக என்றால் மட்டும், பிரச்சினைதான்!
"அது எப்படீங்க! எல்லோரும் ஒத்துக்கமாட்டாங்க".
இந்த மனநிலையை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் நம்மூரில் புரட்சிகர மனநிலை. ஆனால் பிஹார் தேர்தலில் சிபிஐ எம்எல் எடுத்த முடிவுக்கும் ஓவைசிகள் எடுத்த முடிவுக்கும் இடையிலான வித்தியாசத்தில் இருக்கிறது உங்கள் பாசிச எதிர்ப்பு வியூகம்.
கடைசியாக ஒரு கருத்து. நேற்று இரவு அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி அமர்த்தம் குறித்து செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஜாகோபின் என்கிற அமெரிக்க இடதுசாரி இதழின் இணையதளத்துக்குச் சென்றேன். (இணைப்பு கமென்ட் பகுதியில்)
தலைப்பு இதுதான்: Get Ready to Fight Joe Biden. இந்த தலைப்பைப் பார்த்தவுடன் கொஞ்சம் சிரிப்பும் வந்துவிட்டது. "ஆரம்பிச்சுட்டாங்கய்யா!" ஆனால் இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இடதுசாரிகள் எப்போதுமே இப்படித்தானே! அவர்கள் நிரந்தர எதிர்க்கட்சிகளாகவே தங்களைப் பாவித்துக்கொள்கிறார்கள். அது தேவையும்கூட. ஆனால் இந்தக் கட்டுரையின் முதல் வரி இவ்வாறு இருந்தது: I voted for Joe Biden last November in the swing state of Michigan.
கட்டுரையாளர் பென் பர்கிஸ் ஒரு தத்துவவியல் துறை பேராசிரியர். பெர்னீ சாண்டர்ஸின் ஆதரவாளர். அவர் தொடர்ந்து எழுதுகிறார்: If time were rewound, I’d do it again. Biden was clearly the lesser evil, and there were both strategic and harm reduction reasons for the Left to prefer spending the next four years fighting him rather than Trump.
பாசிசத்தைப் புரிந்துகொள்பவர்கள். பாசிச எதிர்ப்பு என்றால் என்ன என்பதையும் புரிந்தகொள்வார்கள். டிரம்ப்பை எதிர்க்கவேண்டும் என்பதால் பைடனுக்கு ஆதரளித்த அமெரிக்க இடதுசாரிகள் தங்கள் சொந்தத் திட்டங்களை கைவிட்டுவிடவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் நிலைக்கு வந்திருக்கவேண்டிய பெர்னீ சாண்டர்ஸை தோற்கடித்த பைடனுக்கே அவர்கள் வாக்களிக்கவும் செய்தார்கள். தங்கள் நாட்டின் தேர்தல் என்னும் போராட்டக்களத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.
மார்க்சியம் படித்தவர்கள் பொதுவாக தெளிவாக இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக