வியாழன், 21 ஜனவரி, 2021

மலையக ஜாதி அமைப்பில் அருந்ததியருக்கு இழைக்கப்பட்ட அநீதி

அருந்ததியர் சமூகத்தின் ஆவணப் பெட்டகம்.  .namathumalayagam.com - நிலாந்தி சசிகுமார் :இலங்கையின் வரலாற்றில் அருந்ததியினர் சமூகம் பற்றி வெளிவரும் முதல் நூல் இதுவாகும்...


           90 களில் சரிநிகரில் வெளிவந்த தொடர் பத்தி தலித்தின் குறிப்புகளாக நூல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
உரிமைகள் மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் வரலாற்றில் எப்போதுமே பேசாப் பொருளாகவே வைக்கப்படுகின்றன. ஆனால் சரவணன் அவர்கள் எப்போதும் பேசாப் பொருளை பேச விழைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். 

அதே போல் அவர் எழுதும் கட்டுரைகளையும் நூல்களையும் தேடி வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாக நான் இருப்பதன் காரணம் அவரது கட்டுரைகளில் உள்ள உண்மைத் தன்மைகள் மற்றும் ஆதாரங்களின் வலு என்பனவேயாகும்.
வர்க்கப் போராட்டம், தமிழ் தேசியப் போராட்டம், பெண்ணியம், சூழலியல், சாதியத்திற்கு எதிரான போராட்டம் என பல தளங்களில் பணியாற்றி வரும் இவரின் எழுத்துப் பணியும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதே.
 எப்போதுமே சாதியம் சார்ந்த நூல்களை எழுதுவதிலும் அது குறித்துப் பேசுவதிலும் பின் நிற்கும் மக்களின் முன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதோடு மட்டுமன்றி முகத்திற்கு நேராகக் கேள்விக் கணைகளை அள்ளி வீசிச் சென்றிருக்கிறார். யாரும் பதில் சொல்ல முடியாது திக்கித் திணறிக் கொண்டிருக்கையில் தான் அவர் வெற்றி காண்கிறார்.

 .அருந்ததியருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்ததுடன் ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தவர்களின் நிலைக்காகவும் பேசுகிறார். அவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அடிப்படை வசதி வாய்ப்புகள் என அவர் அடுக்கிக் கொண்டு போகும் போது மனது வலிக்கத்தான் செய்தது. மொத்தத்தில் 32 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் அருந்ததியர் சமூகத்தின் வாழ்க்கையை கூறும் ஓர் ஆவணப் பெட்டகம்....... 

தலித்தின் குறிப்புகள்இலங்கைச் சூழலில் தலித்_ தலித்தியம் என்ற சொல்லாடலைக் கூட அறிமுகம் செய்து வைத்த பெருமையைக் கொண்டது இந்நூல் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும். அதேவேளை அருந்ததியர் சமூகத்தவர்கள் மட்டுமே தலித்துக்கள் என்பதில் அடங்கவில்லை என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய தேவையை உணர்ந்தவராக இந்நூலை வடிவமைத்துள்ளார்.உண்மையில் புரட்சிகர சமூக மாற்றமானது தலித் விடுதலையிலும் தங்கியுள்ளதை மறுக்க முடியாது .... 

 இந்திய வம்சாவளி மக்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் தலித் மக்களாவர். அங்கிருந்து வந்தது மக்கள் மட்டுமல்ல சாதிக் கட்டமைப்பும் தான். 1965 இல் ஆரம்பிக்கப்பட்ட நகரசபைகள் மூலம் நகர சுத்திக்கென தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களே அருந்ததியர் சமூகத்தவர்கள். இந்திய வம்சாவளியினரான மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் கூட மறுக்கப்பட்டவர்களாகவும் அவர்களுடன் எந்தவொரு சம்பந்தமும் வைத்துக் கொள்ள முடியாது ஒதுக்கப்பட்டவர்களாகவும் அருந்ததியினர் இருந்தார்கள். இதனாலேயே அகமணமுறை மூலமாக தமது சமூகத்திற்குள் சுழன்று கொண்டு இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்....... 

அவர்கள் கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருந்தமையால் யார் வேண்டுமானாலும் அவர்களை ஆள முடியும் என்றானது. இவர்கள் வசித்த பிரதேசங்கள் கூட இவர்களுக்கு சொந்தமில்லை என்றானது அதேவேளை அவ்விடத்தில் இருந்து வேறு பிரதேசங்களுக்கோ வீடுகள் வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்ளவோ உரிமையற்றவர்களாக வைக்கப்பட்டிருந்தனர். இந்திய வம்சாவளியினர் எனப் பொதுவாக அழைப்பதில் அருந்ததியினரும் அடங்கி விடக் கூடும் என்ற அச்சத்தில் "மலையக மக்கள் " பதம் உருவாக்கப்பட்டிருக்கலாம்........ 

சுத்திகரிப்புத் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள்;அத்தொழிலை விட்டால் பறிக்கப்படும் அச்சுறுத்தல் இருந்தமையால் இத்தொழிலை விடவோ, வேறு தொழிலுக்குச் செல்லவோ முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வாழ வேண்டியவர்களானார்கள். "நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம்…." என்ற பெரியாரின் கருத்து எவ்வளவு உண்மை. அத்தகைய போதையிலே தம்மை நிலைப்படுத்திக் கொண்டு வன்முறைக்கும் அடக்குமுறைகளுக்கும் துணை போகும் சமூகங்களுக்கு மத்தியில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிக்க சமூகக் கட்டமைப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதியத்தின் இருப்பு தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது........ 

ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமெனில் உச்ச ஆயுதமாக சாதிய வசவுகள் இருக்கின்றன. மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை அல்லது பெண்பாலுறவைச் சாடுகின்ற தூசணத்தையும் சாதிய வசவுடன் இணைத்துக் கூறுகையில் மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. இதுவே ஒரு ஆணைத் திட்டுவதாக இருப்பினும் அவனைச் சார்ந்த குடும்ப பெண் உறுப்பினர்களை இழுத்து வசவு பாடல் இடம் பெறுவதைக் காணலாம். நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடும் சரவணன் சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்து கொள்பவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக சாதியத்தின் கோரப் பிடியில் இருந்து விடுபட முடியும் என ஆணித்தரமாக கூறுகிறார்....... 

"கற்பழிப்பு"எனும் பதம் பாலியல் வல்லுறவு என மாற்றப்பட்டது போல சாதிய வசவை உரையாடல் களத்திற்கு கொண்டு வந்து அதற்கெதிராக மனித உரிமை மீறல் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையுடன் கை கோர்க்கலாம் என்றே தோன்றுகிறது. ஒருவரை திட்டும் போது சாதிய வசவு கூறப்படுவதை தவறு என யாரும் சொல்வதில்லை அந்தச் சாதியைச் சொல்லி என்னை ஏன் திட்டினாய்? நானும் அவனும் ஒன்றா என்ற கருத்திலேயே வாய்த்தர்க்கம் எழுகிறது என்பதைத் தான் சகிக்க முடியவில்லை. ...... 

வர்க்கத்தில் சமமாய் அல்லது உயர்வாய் ஒருவர் வருகையில் அங்கே சாதியம் தலை தூக்குவதை மிக இலகுவாக இனங்காண முடியும்.ஆதிக்க சாதியினர் தமது சாதியத் தூய்மைவாதப் பெருமிதத்திற்காக இந்த அகமணமுறையைப் பேணுகின்றனர் என்றும் அதேவேளை தலித் சமூகம் அதே அர்த்தத்தில் அகமணமுறையைப் பேணவில்லை என்பதையும் தெளிவு படுத்துகிறார். இவ்வாறான  திருமணங்களால் பரம்பரை நோய்கள் வந்து அதிகம் பாதிக்கப்படுபவர்களாகவும் தலித் சமூகமே இருப்பது தான் கொடுமை. ...... 

சாதியத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் கூட திருமணத்தில் சாதியைப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். சாதி மாற்றித் திருமணம் செய்பவர்கள் தமது உறவுகளை விட்டு விலகி விடுவதும் உண்டு. எது எப்படியோ அவர்கள் இழப்பதற்கென்றே இருப்பவர்கள் போலவே இவ்வாதிக்க சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றனர்....... 

இன்று மனு சாஸ்திரத்தை எரிப்போம் எனக் குரல் கொடுக்கின்றனர். குறிப்பாக பெண்களை அடிமைப்படுத்தும் விதமாக அதில் இருப்பது மட்டுமன்றி சாதியம் பற்றிய குறிப்புகளும் ஒரு காரணம். "சாதி" என்பது வெறும் சொல் மட்டுமல்ல அடக்குமுறை வடிவத்தின் "பொருள்" , பாரபட்சத்தினதும் ,சமூக அநீதியினதும்,அநியாயத்தினதும் குறியீடு. நமது மொழிவழக்கிலிருந்தும் சாதியைச் சுயநீக்கம் செய்ய வேண்டும் என நம்மை இந்நூலினூடே அழைக்கிறார் சரவணன்....... 

தலித்தியம் பற்றிப் பேசுபவர்களைக் கூட பேச விடாது வெவ்வேறு வழிகளில் தாக்கி, ஒதுக்கி, அவமானப்படுத்தி, தனிமைப்படுத்தும் கைங்கரியங்களும் நடைபெறாமல் இல்லை. இதனாலேயே பலர் அது குறித்துப் பேச பின் நிற்பதும்,அதே போல் ஆதிக்க சாதியப் பிண்ணனி கொண்டவர்களும் சாதியம் பற்றிப் பேசினால் தம்மையும் தலித்தாகப் பார்ப்பார்களோ எனப் பயம் கொள்வதும் உண்டு.இதுவும் ஒருவித அரசியல் தானே...... 

இலங்கையில் வர்க்க, பாலின, சாதியப் போராட்டங்களை பின்தள்ளி விட்டு இனத்துவ தேசப் போராட்டம் முன்னிலையில் நிற்பதாக குற்றம் சாட்டுகின்றார். அதுவே உண்மையாகவும் இருக்கின்றதை உணரக் கூடியதாகவும் உள்ளது.உயர்த்திக் கொண்ட சாதியினர் தமது வர்க்க மற்றும் ஒடுக்கும் நலனுக்காகத் தம்மை நிறுவனப்படுத்திக் கொள்கையில் ஒடுக்கப்பட்ட சாதியினரோ தம் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தம்மை நிறுவனப்படுத்திக் கொண்டனர். இது எவ்வளவு பெரிய வேறுபாடு. ......ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் தமக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் வசதி வாய்ப்புக்களை பெறுவதற்காக தமது சாதிய அடையாளங்களை மறைக்க எத்தனித்தனர். 

இதனை "அடையாளங்களை தற்கொலை செய்தல்" என்ற கட்டுரை மூலமாக விளக்கம் அளித்துள்ளார். உதாரணமாக, உறவினர்களுடனான உறவைத் துண்டிப்பது, தனித்து வாழ்வது, சிங்கள முஸ்லிம் மக்களுடன் திருமண உறவைப் பேணல் போன்றவை இவற்றுள் அடக்கம். அதாவது சுயத்தை இழத்தல் அல்லது மறைத்தல் என்றும் அர்த்தப்படுத்தலாம். குறிப்பாக தமக்குரிய குலதெய்வ வழிபாடுகளைக் கூட இதற்காகத் தியாகம் செய்து விடும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அத்துடன் அதிக மதமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட சமூகமாகவும் இந்த அருந்ததியர் சமூகம் இருந்தது......... 

அடையாளங்களை மறைப்பதில் நியாயம் கற்பிப்போரை ஏற்க மறுக்கும் சரவணன் அதனை எதிர் கொண்டு விடுதலைக்கான வழியைக் காண்பதே சிறந்த பணி என்கிறார். இந்நூலில் தலித் பெண்கள் பற்றிய கட்டுரை மிக முக்கியமானது. பெண்கள் என வரும்போது உயர்த்திக் கொண்ட சாதிப் பெண்கள் அவர்களின் சாதியைச் சேர்ந்த ஆண்களால் ஒடுக்கப்படுகின்றனர். அதே ஒரு பெண் தாழ்த்தப்பட்ட சாதியாக, கறுப்பு நிறத்தவளாக, கல்வியறிவு அற்றவளாக இருந்து விட்டாள் அவளது நிலை குறித்து நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்....... சாதியின் பெயரால் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளக் கூடிய அல்லது அதற்கு துணை போகக் கூடிய அனைவரையும் நிற்க வைத்து உச்சியில் குட்டு வைத்திருக்கிறது இந்த தலித்தின் குறிப்புகள் என்றால் மிகையல்ல. அதற்கு சிறந்த உதாரணம் "வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும்" எனும் கட்டுரையைக் குறிப்பிடலாம்......... 

இந்நூலில் ஒருசில கட்டுரைகளில் தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும், அனுபவக் குறிப்புகளையும் இணைத்திருப்பதால் மிகவும் உணர்வு ரீதியில் பாதிப்பை ஏற்படுத்திய நூலாகவும் இது அமைந்திருந்தது. அதேவேளை தனது அனுபவங்களின் மூலமாக அருந்ததியர் சமூகம் படும் சொல்லொனாத் துன்பியல் வாழ்வைக் குறிப்பிடவும் அது ஏதோவொரு விதத்தில் தலித் விடுதலைக்கு வழிகோலும் என்ற நப்பாசையிலுமே தவிர எந்தவொரு அனுதாபத்தையும் எதிர்பார்த்தல்ல என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்....... 

ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்டது போல, மனமானது "பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என் மீது சுமத்திய அழுக்கு மூட்டைகளை இறக்கித் தொலையுங்கடா பாவிகளே" எனக் கூக்குரல் எழுப்பி ஓலமிடுகிறது. மேலும், சாதி சார்ந்த தொழில்,தொழில் சார்ந்த இழிவு, இழிவு சார்ந்த சமூகப் புறக்கணிப்பு, சமூகப் புறக்கணிப்பால் ஆளுமைச் சிதைவு, உள ரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொடர் பாதிப்புக்கள், சமகால வாழ்வை எட்டிப் பிடிப்பதில் உள்ள இடர்ப்பாடுகள், வாய்ப்புகளில் பாரபட்சம் என்று சரவணன் காட்டிச் செல்லும் அருந்ததியர் வாழ்வின் பொருட்டு தமிழ்சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்கிறார்...... அனைவரும் அறிய வேண்டியதும், பேச வேண்டியதும், சிந்திக்க வேண்டியதுமான விடயங்களை உள்ளடக்கிய இக்கட்டுரைத் தொகுப்பைத் தந்த சரவணன் அவர்களிற்கு நன்றியும் பாராட்டுக்களும்........ நிலாந்தி சசிகுமார்.... நன்றி - ... .arayampathy.lk ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக