வியாழன், 21 ஜனவரி, 2021

துரைமுருகனுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்குமா?

துரைமுருகனுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்குமா?
minniambalam : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னையில் இருந்தாலும், தனது சொந்த ஊரான காட்பாடியில் இருந்தாலும் தினம் தினம் அவரை பலரும் வந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், நண்பர்களின் மகன்கள், மாற்றுக் கட்சியினர் என்று அவரை தினம் தினம் பலரும் வந்து சந்தித்து அரசியல் பேசுகிறார்கள்,கோரிக்கைகள் வைக்கிறார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் துரைமுருகனை பொதுச் செயலாளர் என்ற முறையில் சந்தித்து தேர்தலில் சீட் வாங்கும் முயற்சியிலும் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். தன்னிடம் சட்டமன்றத் தேர்தல் வாய்ப்பு கேட்பவர்களிடமெல்லாம், தான் தேர்தலில் நின்ற வரலாறையெல்லாம் சொல்லி, ‘நானெல்லாம் 25 ஆயிரம் ரூபாய்க்குள்ள தேர்தலை முடிச்சிருக்கேன். இப்ப என்னடான்னா கோடிகோடியா கொட்டிக்கிட்டிருக்காங்க. சரி பாத்துக்கலாம்யா’என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினே இன்று காலை துரைமுருகனுக்கு போன் பண்ணி, ‘என்னண்ணே... உடம்பு பரவாயில்லையா...’என நலம் விசாரித்துவிட்டு, ‘இன்னிக்கு டாக்டர் சாந்தாவுக்கு அஞ்சலி செலுத்த போறேன். நீங்க வர்றீங்களா. உடம்பு ஒத்துழைச்சா வாங்க. இல்லேன்னா ஓய்வெடுங்க’என்று கேட்டிருக்கிறார். துரைமுருகனோ, ‘நான் வந்துர்றேன்”என்று சொல்லியிருக்கிறார்.

துரைமுருகனுக்கு போன் பண்ணிவிட்டு வைத்த பின் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய ஸ்டாலின், “துரைமுருகன் அண்ணனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது. வயசும் எண்பதுக்கு மேல ஆயிட்டுது. கொஞ்ச நாளுக்குள்ளயே ரெண்டு முறை ஆஸ்பத்திரி போயிட்டு வந்துருக்காரு. உடம்பைப் பாத்துக்கணும். இப்ப கூட கால்ல அடிபட்டிருக்குனு சொன்னாரு. அண்ணனுக்கு தேர்தல்ல சீட் கொடுத்தா பிரச்சாரத்துக்கெல்லாம் அலைய முடியுமா... இல்லே அறிவாலயத்துல உட்கார்ந்து தேர்தல் பணிகளை எல்லாம் பாக்கச் சொல்லலாமா?” என்று விவாதித்திருக்கிறார்.

”அடுத்து வரும் தேர்தலில் வெற்றிபெற்று துணை முதல்வராவார் அண்ணன் துரைமுருகன்”என்று அவருக்கு நெருக்கமானவர்கள் வேலூரில் சொல்லிக் கொண்டிருக்க, சென்னையில் ஸ்டாலினோ, “அண்ணனால் தேர்தலில் நிற்க முடியுமா?” என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக