வியாழன், 21 ஜனவரி, 2021

புதிய வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்வந்துள்ள அரசு

tamilmurasu.com.: இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ஒன்றரை ஆண்டுகாலம் வரை நிறுத்தி வைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்து இருக்கிறது. தலைநகர் புதுடெல்லியில் நேற்று விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதனைத் தெரிவித்தார். இடைப்பட்ட காலத்தில், புதிய சட்டங்கள் தொடர்பில் நீண்டகாலத் தீர்வை எட்டும் விதமாக வேளாண் குழுக்களின் தலைவர்களும் அரசாங்கமும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று வேளாண் அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஆயினும், வேளாண் குழுக்கள் அரசின் இந்த அறிவிப்பையும் ஏற்பதாகத் தெரியவில்லை.

“விவசாயிகள் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையே இது. உண்மையில், பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கவில்லை. புதிய சட்டங்களை இடைக்காலமாக நிறுத்தி வைக்கச் செய்வது என்பது விவசாயிகள் போராட்டத்தின் நோக்கமல்ல,” என்றார் அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்புச் செயலாளர் அவிக் சாஹா.

அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்பதற்காக வேளாண் குழுக்கள் இன்று விவாதிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக