வியாழன், 21 ஜனவரி, 2021

எடப்பாடியை அவமதித்தாரா மோடி? சசிகலாவையும், தினகரனையும் அவர்கள் முற்றிலுமாக கைவிடுவதாக இல்லை.

 சசிகலாவுக்காக எடப்பாடியை அவமதித்தாரா மோடி?

minnambalam : 2021 பிறந்ததுமே 20:20 மேட்ச் வேகத்தில் தேர்தல் களத்துக்குத் தயாராகிவிட்டது தமிழகம். கொரோனா அச்சத்தைத் தாண்டி, தலைவர்களைக் காணக் குவிகிறது கூட்டம். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பம்பரமாகச் சுழல ஆரம்பித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. புத்தாண்டு பிறந்ததும் அவருடைய நடவடிக்கைகளில் புத்துணர்வையும் புதிய வேகத்தையும் பார்க்க முடிகிறது. ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்திப்பது, திட்டங்களைத் தொடங்கி வைப்பது, ஸ்டாலினுக்கு சவால் விடுவது என்று எத்தனை கோணத்தில் எப்படி பந்து போட்டாலும் அடித்து ஆடத் தொடங்கிவிட்டார் எடப்பாடி.

அதேவேகத்தில்தான் அவருடைய டெல்லி பயணமும் தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, கூட்டணியை முடிவு செய்துவிடுவதோடு, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா வாயால் ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ என்று அறிவிப்பதற்கான உத்தரவாதத்தையும் பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கில்தான் அவருடைய டெல்லி பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் தலைவராக நட்டா இருந்தாலும் உள் துறை அமைச்சர் அமித் ஷா எடுப்பதுதான் அங்கு முடிவு என்ற நிலையில், அவருடனான சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது.

வெற்றிநடை போடும் தமிழகம்அதற்கேற்ப அமித் ஷாவைச் சந்திப்பதற்குதான் அவருக்கு முதலில் அப்பாயின்ட்மென்ட்டும் தரப்பட்டிருந்தது. அவரும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும்தான் உள்ளே சென்றார்கள். அங்கே உற்சாகத்தோடு சென்ற முதல்வர் வாடிய முகத்தோடு திரும்பியிருக்கிறார். அடுத்த நாள் பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னும் அவருடைய முகத்தில் உற்சாகமில்லை. இருவருடனான சந்திப்பிலும் அவர் நினைத்தது நடக்கவில்லை என்கிற ஏமாற்றம் அவரிடம் அப்பட்டமாகத் தெரிந்திருக்கிறது.

டெல்லியில் அப்படி என்னதான் நடந்தது...

உள் துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தைச் சேர்ந்த சோர்ஸ்களிடமும், பிரதமர் அலுவலக அதிகாரிகள் சிலரிடமும் பேசினோம்...

‘‘பிரதமரிடமும் அமித் ஷாவிடமும் எடப்பாடி என்ன பேச வந்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில்லை; அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் என்ற தகவல் மட்டும் ஏற்கெனவே தெரிந்திருந்தது. அதை பாரதீய ஜனதா தலைமையிடம் தெளிவுபடுத்துவதோடு கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்துவிட்டு, தேர்தல் வேலையை வேகமாக்குவோம் என்ற நம்பிக்கையில்தான் டெல்லி வந்தார் எடப்பாடி.

உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் வைத்து அவரும், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் சந்தித்தார்கள்.

பரஸ்பர விசாரிப்புகள் முடிந்ததும், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவத்திடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பான அறிக்கையும் முறைப்படி அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை ஏழெட்டு நிமிடங்களில் முடிந்துவிட்டது. அதற்குப் பின் அரசியல்பக்கம் பேச்சு திரும்பியிருக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேகமாக தேர்தல் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய முதல்வர், நாமும் விரைவாகக் கூட்டணியை முடிவு செய்து அதை முறைப்படி அறிவிக்க வேண்டும், சீட் ஒதுக்கீட்டையும் சீக்கிரமே முடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அதைக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, ‘தேர்தலுக்குதான் இன்னும் நாள்கள் இருக்கிறதே... இதுபற்றி நான் நட்டாவிடம் பேசுகிறேன்!’ என்று பேச்சைத் தொடர மறுப்பது போல பேசியிருக்கிறார். மீண்டும் சசிகலா விஷயத்தை எடப்பாடி ஆரம்பித்திருக்கிறார். அப்போதும் உடனே குறுக்கிட்ட அமித் ஷா, ‘அதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். இப்போது ஒன்றும் அவசரமில்லை’ என்று கூறி பேச்சை முடித்துள்ளார். அதிகபட்சமாக இந்தப் பேச்சுவார்த்தை பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கவேயில்லை. சென்னைக்கு அமித் ஷா வந்தபோது, லீலா பேலஸ் ஓட்டலில் முதல்வரும் துணை முதல்வரும் சென்று அவரைச் சந்தித்தார்கள். அப்போது அமித் ஷா காட்டிய இணக்கமும் நட்பும் இப்போது சுத்தமாக இல்லை என்பதை அந்தக் கணத்திலேயே எடப்பாடி உணர்ந்து விட்டார். அங்கிருந்து ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கிறார்.

மறுநாள் பிரதமரின் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார் தமிழக முதல்வர். அவர் செல்வதற்கு சில நிமிடங்கள் முன்பே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகமும் சென்றிருக்கிறார். ஆனால் தலைமைச் செயலாளர் சண்முகம் சென்ற காரை உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு, ‘அலுவலக ரீதியாகப் பல விஷயங்களை பிரதமரிடம் விளக்குவதற்கு தலைமைச் செயலாளர் போக வேண்டியிருக்கிறது, அதற்காக முன்கூட்டிய அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது’ என்று விளக்கம் கொடுத்த பின்புதான், அவருடைய கார் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமரைச் சந்தித்ததும், தமிழக அரசின் முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் விளக்கியிருக்கிறார். கங்கை – காவிரி இணைப்புத் திட்டத்தை நீங்கள் தேர்தலுக்கு முன் அறிவித்து, பணியைத் தொடங்கி வைத்தால் அதற்கு ரெஸ்பான்ஸ் நன்றாயிருக்கும். அதற்கு தமிழக அரசின் பங்களிப்பைத் தரத் தயாராயிருக்கிறோம் என்பதைத்தான் முதலில் சொன்னார் முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி விளக்கி, அதுதொடர்பான கோப்பினை கொடுத்து நிதியைக் கோரியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, தமிழகத்திலுள்ள பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசிடமிருந்து தர வேண்டிய பங்களிப்பு நிதி பல ஆயிரம் கோடி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கெனவே தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும், நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வமும் இரண்டு முறை டெல்லிக்கு வந்து கோரிக்கை வைத்துவிட்டுப் போனார்கள். அந்த நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதனால் அந்த நிதியையும் விரைவாகத் தர வேண்டுமென்று கூறி, அந்த கோப்பும் தரப்பட்டிருக்கிறது. இதேபோல ஐந்தாறு கோப்புகளைக் கொடுத்து, கோரிக்கைகளை முதல்வரும் தலைமைச் செயலாளரும் விளக்கினார்கள். அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி.

கோரிக்கை மனுக்கள், கோப்புகள் ஒப்படைக்கப்பட்டதும் பிரதமர் மோடியின் கண்ணசைவைப் பார்த்து, பிரதமர் அலுவலக அதிகாரிகள் வெளியேற.... அவர்களைப் பின் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட தமிழக அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதற்குப் பின்பு பிரதமருடன் எடப்பாடியும் ஜெயக்குமாரும் மட்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவுக்கான அழைப்பிதழைக் கொடுத்து, அதில் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார் எடப்பாடி. இந்த அழைப்பிதழை முதல்வர் கொடுக்கவிருப்பது குறித்து முன்கூட்டியே பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் வந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளி ஜெயலலிதா என்பதால், அவருடைய மணி மண்டபத்தைத் திறந்து வைப்பது, அலுவலக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரிய சர்ச்சையை உருவாக்கும் என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் அதைச் சொல்லி மறுக்க முடியாது என்பதால், ‘இப்போது கொரோனா காலமாக இருப்பதால் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இயலாது; மற்றொரு முறை சென்னைக்கு வரும்போது, கண்டிப்பாக ஜெயலலிதா மணி மண்டபத்தைப் பார்வையிடுகிறேன்’ என்று மறுத்துவிட்டார் பிரதமர்.

அழைப்பு கொடுத்தாலும் பிரதமர் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற விவரமும், முதல்வருக்கு ஏற்கெனவே தமிழக உளவுத் துறையினரால் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அழைக்கவில்லை என்று பின்னால் சொல்லக் கூடாது என்பதற்காகத்தான் அந்த அழைப்பிதழை முதல்வர் கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் மெதுவாக தேர்தல் கூட்டணி குறித்த பேச்சை எடப்பாடி ஆரம்பித்திருக்கிறார். அவர் பேச்சை ஆரம்பித்த சில விநாடிகளிலேயே அமித் ஷாவைப் போலவே பிரதமரும் குறுக்கிட்டு, ‘நீங்கள் இதைப்பற்றிப் பேசியதாக அமித் ஷா என்னிடம் சொன்னார். அதற்குதான் இன்னும் நாட்கள் இருக்கிறதே. இப்போது அதுபற்றி ஒன்றும் பேச வேண்டாம். பின்னால் பேசிக்கொள்வோம். தேர்தலுக்கான மற்ற வேலைகளை நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள் என்று சொல்லி பேச்சை முடித்துவிட்டார் பிரதமர் மோடி.

அதிகாரிகள் வெளியேறிய பின்பு, மொத்தம் நான்கைந்து நிமிடங்கள்தான் மூவரும் தனியாகப் பேசியிருக்கின்றனர். அங்கிருந்து வெளியில் வரும்போது முதல்வரின் முகத்தில் உற்சாகமே இல்லை. உண்மையைச் சொல்வதானால், பிரதமருக்கு அவர் சால்வை அணிவிக்கும்போதே சில விஷயங்களை முதல்வர் புரிந்துகொண்டுவிட்டார். வழக்கமாக தலைவர்களுக்குத் தலைவர்கள் சால்வை அணிவிக்கும்போது, பெயருக்குச் சற்று தோள்களைக் குனிந்து அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி சால்வை அணிவித்தபோது நிமிர்ந்த நிலையிலேயே இருந்திருக்கிறார் பிரதமர் மோடி. கைகுலுக்கிய போதும் உடனடியாக கைகளைக் கொடுக்காமல் தயக்கத்துடனே கொடுத்திருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் அவருடைய முகத்தில் ஏமாற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

டெல்லியில் கட்டப்படும் அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட அவர் சென்றபோது, உற்சாகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயன்றாலும் அதையும் தாண்டி ஏமாற்ற உணர்வை அவரிடம் பார்க்க முடிந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முதல்வர் எடப்பாடியின் இந்த முறை டெல்லி பயணம் அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்’’ என்றார்கள்.

அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளை அதிமுகவின் டெல்லி புள்ளி ஒருவர் விளக்கினார்...

‘‘அதிமுக மூன்றாம் முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்குமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெறும் வாய் வார்த்தையில் பேசவில்லை. அது கண்டிப்பாக நடக்குமென்று நம்புகிறார். அதற்கு டெல்லியின் ஆதரவும் தேவையென்று எதிர்பார்க்கிறார். அதேநேரத்தில், சசிகலாவையோ, தினகரனையோ மீண்டும் கட்சியில் சேர்ப்பதில்லை என்பதில் முதல்வர் எடப்பாடி உட்பட கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் அனைவருமே ஒருமித்த கருத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், சசிகலா வெளியில் வந்தபின்பு, அவருக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு பாரதீய ஜனதா காத்திருக்கிறது. ஒருவேளை அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்து, தொண்டர்களிடம் புதிய எழுச்சி ஏற்பட்டால் அவரைக் கட்சியில் சேர்க்கவும், அமமுகவை அதிமுகவுடன் இணைக்கவும் அதிமுக தலைமையை பாரதீய ஜனதா நிர்பந்தப்படுத்தும்.

இதற்காகத்தான் இப்போது தேர்தல் பேச்சுவார்த்தை வேண்டாமென்று மோடியும் அமித் ஷாவும் சொல்லியிருக்கின்றனர். இதை முதல்வரும் நன்கு புரிந்து கொண்டார். அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் டெல்லியிலேயே தடாலடியாகப் பேட்டி கொடுத்து, ‘சசிகலாவைச் சேர்க்க வாய்ப்பேயில்லை’ என்று அடித்துச் சொல்லிவிட்டு வந்துவிட்டார். இதன் மூலமாக சசிகலாவின் சர்ச்சைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி.

தன்னுடைய ஸ்டேட்மென்ட் பாரதீய ஜனதா தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். சசிகலா விடுதலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான், அவர் வெளியில் வரும் அதேநாளில் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழாவை அவர் வைத்திருக்கிறார். அன்றிலிருந்து அவருடைய அதிரடி ஆட்டம் ஆரம்பமாகும்!’’ என்றார் அந்த சீனியர்.

வரும் தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்ற மத்திய உளவுத் துறையின் அறிக்கைதான், பாரதீய ஜனதாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணமாகத் தெரிகிறது. தற்போதுள்ள அதிமுக தலைமையில் திமுக கூட்டணியை எதிர்த்து பெரியளவில் ஜெயிக்க முடியாது என்பதால் சசிகலா, தினகரனை இணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டுமென்று மோடியும் அமித் ஷாவும் நினைக்கின்றனர்.

சசிகலாவையும், தினகரனையும் அவர்கள் முற்றிலுமாக கைவிடுவதாக இல்லை. அதேபோன்று சீட் பங்கீட்டை முதல்வர் பழனிசாமி முடிவு செய்வதற்கான சுதந்திரத்தையும் அவர்கள் தருவதற்குத் தயாராக இல்லை. நான்காண்டுகளாக தங்களுடைய கைப்பிடியில் இருந்ததுபோல தேர்தலின்போது தங்களுடைய பிடி இருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டதற்கான காரணம் அதுவாகத்தான் இருக்கும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைக்கிறார் எடப்பாடி. ஆனால் அந்த வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதும் அவருக்குத் தெரிகிறது.

குறைவான பந்துகள்தான் இருக்கின்றன... அடித்து ஆடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி!

–பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக