செவ்வாய், 5 ஜனவரி, 2021

ரஜினி, தேர்தலை தவிர்ப்பது தோல்வி பயத்தில். ஆம், முழுக்க முழுக்க தோல்வி பயத்தில் மட்டுமே!

velveerasamy.medium.com : ரஜினியை கடந்துவிடலாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால், ஒரு சமூகவலைதள பக்கத்தில் ’ரஜினி ஒரு மனிதப்புனிதர்’ என்ற வார்த்தையை பார்த்தபிறகு, கடந்துசெல்ல மனம் விரும்பவில்லை. ரஜினி மனிதப்புனிதர் என்றால், புத்தர், இயேசு, அன்னை தெரஸாவையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது?! ஆகவே, ரஜினியை சில சிறப்பான செய்கைகளுடன் வழியனுப்ப முடிவெடுத்தேன்!    Let’s start…

Image for post

டிசம்பர் 3ம் தேதி, ‘ஜனவரியில் கட்சி அறிவிப்பு… டிசம்பர் 31ல் கட்ி ஆரம்பிக்கும் தேதி அறிவிப்பு…’ என்று ரஜினி அறிவித்தபோதே, எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஏனென்றால், அரசியலின் மீதும் மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருப்பவன், நாள், நேரமெல்லாம் பார்த்து கட்சி ஆரம்பிக்க மாட்டான். ‘மக்களுக்காக களத்தில் இறங்க வேண்டும்’ என்று முடிவெடுத்த அடுத்த நொடி, அவன் அதற்கான வேலைகளில் இறங்கிவிடுவான். அண்ணாவை எடுத்துக்கொள்வோம். அவர், திராவிடர் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்க முடிவெடுத்த போது, தேதி, இடமெல்லாம் அவர் மனதிலேயே இல்லை. 1949 செப்டம்பர் மாதத்தின் ஏதோ ஒரு நாள் மிகக்குறைந்த நபர்களை மட்டும் கூட்டி, ராபின்சன் பூங்காவில் வைத்து கட்சியைத் தொடங்கினார், 

அண்ணா. கட்சி அறிவிப்பு, கொள்கை அறிவிப்பு போன்ற செய்திகள் எல்லாம் கூட்டம் முடிந்தபிறகு தான், பத்திரிகைகளுக்கே அனுப்பப்பட்டன. ஆகவே, தில்லாக அதே டிசம்பர் 3ம் தேதி, ‘கட்சி ஆரம்பிக்கும் தெளிவும் துணிவும் இருப்பவன் தேதிகளின் பின்னால் திரியமாட்டான். குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த புலி வராது’ என்று உறுதியாகவே, என் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். இதோ, டிசம்பர் 3 ஆரம்பித்து டிசம்பர் 30 வரைகூட வந்துசேரவில்லை, அதற்குள் ‘அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை’ என்று பின்வாங்கிவிட்டார், ரஜினி.

அவர் பின்வாங்கட்டும். அது என் பிரச்சனையில்லை. ஆனால், பின்வாங்குவதற்காக அவர் வெளியிட்ட கடிதம் இருக்கிறதே, அது என்னை நிறையவே கடுப்பேற்றியது. என்னமோ சுதந்திரத்திற்காக 30 ஆண்டுகள் போராடி களைத்துப்போன காந்தியின் சீடரைப் போல, ‘மக்கள் என் மகத்தான முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று, கடிதம் முழுவதும் ‘தியாக’ வார்த்தைகளை அள்ளி இரைத்திருக்கிறார், ரஜினி. ஆனால் பாருங்கள்… கட்சி ஆரம்பிக்கும் ஆசை வந்ததில் இருந்து இதுவரை மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டதில்லை, இந்த மகான். இருந்தாலும், இப்போது வந்து ’மக்களின் நலன் கருதியே ஓய்வு முடிவை எடுத்திருக்கிறேன்’ என்று பாசத்தைப் பிழிகிறார். சத்தியமாக, தாங்க முடியவில்லை! 

 

தானே புயல் எல்லோருக்கும் நினைவு இருக்குமென நினைக்கிறேன். அப்போது, பெரிய நடிகையாக வளர்ந்திராத நயன்தாராவே, 10 லட்சங்கள் நிதியுதவி அளித்து அசத்தினார். ஆனால், 40 ஆண்டுகளாக தமிழ்த் திரையில் உச்சநட்சத்திரமாக திகழும் மகா அவதார் ரஜினியோ, கூட ஒரு 5 லட்சத்தை போட்டு, 15 லட்சம் அளித்து கதவை சாத்திக் கொண்டார். மகளின் திருமணத்தின் போது ரசிகர்களுக்கு வைப்பதாக அறிவித்த விருந்தும் இதுவரை வைக்கவில்லை. காவிரிக்காக அளிப்பதாக உறுதியளித்த ஒரு கோடியும் இன்னும் வந்தபாடில்லை. தானே புயலுக்கே நயன்தாரா இன்னும் 5 லட்சம் குறைவாக அளித்திருந்தால், ரஜினியும் ஒரு ஏழு அல்லது எட்டு லட்சத்திற்குள் நிதியுதவியை சுருக்கியிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. 

தானேவுக்குப் பிறகு ரஜினியிடம் இருந்து வந்த நிதியுதவிகளும் கூட, கட்டாயப்படுத்தி பாக்கெட்டிற்குள் கையைவிட்டு எடுப்பதுபோல தான் வந்து சேர்ந்தது. இப்படியிருக்கையில், எந்த உரிமையில் ‘தமிழக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்’ என்ற வார்த்தையை கடிதத்தில் ரஜினி உச்சரிக்கிறார், என்று தெரியவில்லை.

அதுவும் இல்லாமல், இத்தனை நாளும் யாருக்கும் தெரியாமல் திரை மறைவில் சங்க ஆட்களுடன் உறவு வைத்திருக்கவில்லை, ரஜினியார் அவர்கள். நேரடியாக, வடிகட்டிய நீரைப் போல பட்டவர்த்தனமாக அவர் சங்க ஆட்களுடன் புழங்கினார். தெரியும் தானே! குருமூர்த்தி, ‘ஆன்மீகத்துக்கு இங்கே ஸ்கோப் இருக்கு ரஜினி…’ என்று ஆலோசனைகள் சொன்னபோதெல்லாம் , ‘மார்வலெஸ் ஆடிட்டரே’ என்று வியந்து பாராட்டியவர் வேறு யாருமல்ல, இதே ரஜினி தான். மாரிதாஸ் ‘ரேஷன் கார்டு இருக்கா… இந்தா 25,000… ரஜினியின் அதிரடி திட்டம்…’ என்று பீலா வுடும்போது, ‘என்னமா கூவுறான்யா…’ என்று அமைதியாக ரசித்து கைதட்டியரும் கூட, இதே ரஜினி தான். பாஜகவில் இருந்து விலகிய அர்ஜூனமூர்த்தியை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘வாட் போஸ்ட் யூ ஆர்?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கொஞ்சிக் குலாவியதும், இதே மனிதப்புனிதர் தான். இப்படி வெட்கமே இல்லாமல், ‘சங்கித்தனமே சரணம்’ என்று கும்மியடித்துவிட்டு, திடீரென்று மக்கள் சேவகனாகி, ‘நான் சங்கி அல்ல, சங்கி மாதிரி நடிச்சேன். நான் சொன்ன அரசியல் எழுச்சி வேறு…’ என்று கடிதம் எழுதினால் எவன் ஏற்பான்? இந்த மாதிரியான உருப்படாத உல்டாவெல்லாம், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாட்டு மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடக்கூடும். ஆனால், தமிழ்நாட்டு இளைஞர்கள் தேன்கூட்டை ரதமாக்கி, தேனீயை குதிரையாக்கி, தேனை புல்லாக முன்னால் காட்டிக்கொண்டே வண்டியோட்டும் கலை தெரிந்தவர்கள். அவர்களிடம் வந்து, ‘நான் தியாகிப்பா. நீ நம்பணும்…’ என்று சொன்னால், ‘போறியா… இல்ல, சுடுதண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்தவா…’ என்றே திருப்பிக் கேட்பான்.

நானும் அதையே செய்யப்போகிறேன். அகிலம் அறிக… ரஜினி, தேர்தலை தவிர்ப்பது உடல்நலக்குறைவாலோ அல்லது மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணாத்தாலோ அல்ல. அவர் விலகுவது, தோல்வி பயத்தில். ஆம், முழுக்க முழுக்க தோல்வி பயத்தில் மட்டுமே! ரஜினி இயல்பாகவே தோல்விக்கு அஞ்சும் ஃபோபியா கொண்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ‘என்னுடைய அந்தஸ்துக்கு 130, 140வது ஜெயிச்சு ஆட்சியில் அமர்ந்தா தான் நல்லாயிருக்கும். இல்லனா, என்னையும் சிரஞ்சீவி லிஸ்ட்ல சேர்த்திருவாங்க…’ என்றே, அவர் அர்ஜூன மூர்த்தியிடமும் தமிழருவி மணியனிடமும் புலம்பியிருக்கிறார். ஆனால், எந்த கொம்பனாலும் ‘நீங்க இத்தனை தொகுதிகளில் கட்டாயம் ஜெயிப்பீங்க…’ என்று, ரஜினியிடம் உறுதியளிக்க முடியவில்லை. சில தமிழக ஊர்களில், ‘ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார்..’ என்று சொல்லும்போது, ‘எந்தப் படத்துல…’ என்றே மக்கள் கேட்டிருக்கிறார்கள். துக்ளக் இதயாவை உங்களுக்கு தெரியுமா? 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் கருத்துக்கணிப்புத் துறையில் இயங்குபவர், துக்ளக் இதயா. அவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், ’ரஜினிக்கு 5 சதவிகிதம் கூட செல்வாக்கு இல்லை’ என்று தடலாடியாக போட்டு உடைத்தார். ரஜினிக்கு முதல்பீதி அப்போதே ஏற்பட்டிருக்க வேண்டும். ‘ஆஹா… ஒத்தைத் தொகுதி கூட கிடைக்காது போலயே…’ என்று, உறுதியாகவே உணர்ந்திருக்க வேண்டும். ஆகவே தான், முப்பதாண்டுகளாக பொத்தி பொத்தி வளர்த்த முதலமைச்சர் ஆசையை, ‘நீங்க கேட்கிறதால சாப்பிடுறேன்…’ என்பவனைப் போல, ‘உடல்நலக் குறைவால் விலகுகிறேன்…’ என்று விட்டுக்கொடுத்திருக்கிறார். இப்போதும், அதிமுக சார்பாக முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு ஏது ரஜினிக்கு வரட்டும், ‘என்ன தான் இருந்தாலும் நீங்க என்னை வாழ வைச்ச தெய்வம். உங்களுக்கு நல்லது பண்றதுக்காக இந்தப் பதவியை ஏத்துக்கிறேன்…’ என்று வந்துநிற்பார், ரஜினி! ஆக, ‘ரஜினிக்கு தீரா பதவி ஆசை இருந்தது. தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் விலகுகிறார்’ என்ற வார்த்தைகளை, எதிர்கால தலைமுறையினர் ‘மோடியின் பதினைந்து லட்சம்’ போல நீங்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைவில் வைக்க தவறினால், ‘ஜெயலலிதா எங்கப்பா ஊழல் செஞ்சார்… எல்லாம் சசிகலா குடும்பத்தோட கைங்கரியம்…’ என்ற பெயர் ஏற்பட்டதைப் போல, ‘ரஜினி உத்தமருய்யா. பிஜேபி அவரை மிஸ்யூஸ் பண்ணப் பார்த்தாங்க. அவர் ‘பீபி’ன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டார்’ என்ற பெயர் ஏற்பட்டு விடும். ஆகவே, உஷார்!

அடுத்து, ரஜினி ரசிகர்கள்! இவர்களைப் போன்ற பாவப்பட்ட ஆத்மாக்கள் தமிழ்நாட்டில் வேறு எவரும் இல்லையென்றே நினைக்கிறேன். இங்கே ஒரு சம்பவத்தை சொல்கிறேன். அப்போது என்னுடைய ‘போதும் ரஜினி… இதுக்கு மேல பொறுமையில்லை…’ என்ற கட்டுரை, விகடனில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு மூத்தப் பத்திரிகையாளர் என்னை அழைத்து, ’பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் மனசுல இருக்கிறதை அப்படியே எழுதியிருக்கீங்க தம்பி… அதுவும் காவிரி மேட்டர் நூறு சதவிகிதம் உண்மை…’ என்று சொன்னார். நான், ‘நிறைய தடுத்துட்டாங்க சார்… இல்லைன்னா, இன்னும் செமிச்சு விட்ருப்பேன்…’ என்றேன். அவர், ‘இருந்தாலும் இவ்வளவு கொலைவெறி ஆகாதுப்பா…’ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார். பிறகு, ஒரு பத்துநிமிடம் இருவரும் துறைரீதியாக சிலதை பேசினோம். முடிக்கும்போது, ‘உங்களுக்கு ஒண்ணு சொல்லணும் தம்பி…’ என்றார். நான் கவனமானேன். எப்படியும், என்னுடைய எதிர்காலத்தை பற்றி ஏதாவது சொல்வார் என்று நினைத்தேன். ஆனால், அவர் சொன்னது ரஜினியின் மோசடியைப் பற்றி! அவருக்கு தெரிந்த சில ரஜினி ரசிகர்கள் ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற வீணாப்போன மன்றத்துக்கு செலவு செய்த பண விவரங்களை விரிவாகவே எடுத்துச்சொன்னார், 

 

அவர். எனக்கு தலைசுற்றியது. ஆயிரங்களும், லட்சங்களும் இரண்டுவார்த்தைக்கு ஒருவார்த்தை என்ற முறையில் வந்துபோயின. ‘இவ்வளவா சார்…’ என்றேன். அவர், ‘இதெல்லாம் கம்மி சக்தி. எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல ஊழல் வழக்குல முதல்ல ஒருத்தரை கைது செய்யணும்னா, இந்த ரஜினியைத் தான் செய்யணும்…’ என்றார். நான், ‘இது ஊழல் இல்ல சார். திருட்டு. அப்பாவி ரசிகர்களை ஏமாத்தி அடிச்ச அப்பட்டமான திருட்டு…’ என்றேன். ‘அதுவும் சரி தான்…’ என்றார் அவர். நீங்களே யோசியுங்கள். ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக ஆசைகாட்டியது, 1990களில். இப்போது வருடம் 2020. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஒரு மனிதர், ‘இந்தா ஜனவரியில வர்றேன்… இந்தா மே மாசம் வர்றேன்… கண்ணா, பாட்ஷா முடிஞ்சதும் கட்சி தான்… பாபா ரிலீஸாகட்டும், என்ன அவசரம்…’ என்று சொல்லியே, லட்சக்கணக்கான மக்களை சொந்தக்காசை செலவழிக்க வைத்து, ஏமாற்றியிருக்கிறார். ஆம், மக்கள் தான். ரஜினி ரசிகர்கள் என்ன தமிழ்நாட்டுக்குள் தனித்தீவு எடுத்தா வாழ்கிறார்கள்? என் சித்தப்பன், உங்கள் பெரியப்பன் என எல்லோரும் தான், இங்கே ரஜினி ரசிகர்கள்.

உண்மையாகவே, ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானோர் சாமானியர்களே. குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பேரேனும், பிள்ளைகளின் படிப்புக்காக, மனைவியின் பிரசவத்துக்காக, பெற்றோரின் மருத்துவத்துக்காக என, வங்கியில் கடன்வாங்கி வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள். இப்போது , ‘ரஜினி அரசியலுக்கு வரவில்லை’ என்று அறிவித்ததும், அவர் வீட்டு முன்னால் நின்று கதறியவர்கள் எல்லோரும் அவர்களே. இணையத்தில் வீடியோ கிடைக்கும். எடுத்துப் பாருங்கள். அவர்களின் முகத்தில், ஃபைனான்ஸ் கம்பெனி வாசலில் நின்று ’எல்லாம் போச்சே…’ என்று கதறும் மக்களின் முகச்சாயலை உங்களால் பார்க்கமுடியும். ஆக, சத்தமே இல்லாமல், லட்சகணக்கானவர்களின் குடியை கெடுத்து ஏமாற்றியிருக்கிறார், மனிதப்புனிதர் ரஜினி. ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் வேலை முடிந்ததும் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடுவதைப் போலவே, ரஜினியும் மக்கள் மன்ற இணையதளத்தை பூட்டிவிட்டு ஓடியிருக்கிறார். www.rajinimakkalmandram.org இணையதளத்துக்கு சென்று பாருங்கள். 502 உங்களை 111 வடிவில் வரவேற்கும்! ஃபைனான்ஸ் கம்பெனிக்காவது ஒரு சட்டவிடிவு உண்டு. ஆனால், ரஜினியின் மோசடிக்கு எந்த விடிவுமே இல்லை என்பது இன்னும் சோகம். ஆக, ரஜினி ரசிகர்கள் செய்வதற்கு ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. அது, இழப்பீடு கேட்பது! நான் அன்று அந்த மூத்தப் பத்திரிகையாளரிடமும், ’அடுத்த முறை உங்க அன்புக்குரிய ரஜினி ரசிகர்களை பார்க்கும்போது, அவங்க தலைவன்கிட்டே இழப்பீடு கேட்கச்சொல்லுங்க சார்…’ என்றே சொன்னேன். சரி… எப்படி கேட்கலாம்? அது ரஜினி ரசிகர்களின் சுதந்திரம். அதில் நான் தலையிடுவது முறையாக இருக்காது! வேண்டுமானால் ரூட் சொல்கிறேன். ரஜினியை மிரட்டிக் கேட்கலாம், அடித்துக் கேட்கலாம், ரஜினியின் திரைப்படத்தை புறக்கணித்து கேட்கலாம், அல்லது நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு கூட கேட்கலாம்.

ஆனால், ஒன்றை மறக்காதீர்கள். ’நான் உடல்நிலை சரியில்லை என்று சொன்னபோது, நீங்கள் அதை ஏற்றீர்கள்’ என்ற வார்த்தையை வெகு கவனமாக கடிதத்தில் பயன்படுத்தியிருக்கிறார், ரஜினி. அதோடு, ‘இந்த செலவுகள் வீண்போகாது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்றும் சொல்லிவைத்திருக்கிறார். ஆகவே, ‘இவன் சொல்லும் புண்ணியம் யாருக்கு வேணும்? எங்க புள்ளைங்களுக்கு கூட எந்தப்பொருளும் வாங்கிக் கொடுக்காம, இந்த வீணாப்போனவனுக்காக செலவு செஞ்சோம் சார்…’ என்ற வார்த்தையை, எல்லா இடத்திலும் முடிந்தவரை பயன்படுத்துங்கள். ஆயிரம் ஆதாரங்களை விட, சில நேரங்களில் ஆறு சொட்டு கண்ணீர் அதிகம் உதவும்! அப்படியே, நடவடிக்கையில் வென்று இழப்பீட்டுத் தொகையுடன் வீட்டிற்கு செல்லும் வழியில், ‘எந்த திரை நாயகனுக்கும் அவனது ரசிகர்கள் உசுப்பேற்றாமல் அரசியல் ஆசை எழுவதே இல்லை. ’எப்ப வருவேன்… எப்டி வருவேன்…’ன்னு முத்துவில் பேசத் தொடங்கும்போதே, ’நீ வரவே வேணாம்’ன்னு நாம அவன் முகத்துல துப்பியிருக்கணும்’ என்ற வரிகளை, மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள்! ஓட்டிப்பார்த்துவிட்டு, அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ, அக்காவுக்கோ, தம்பிக்கோ, தங்கைக்கோ, மகனுக்கோ, மகளுக்கோ என எவரோ ஒருவருக்கு, அவர்கள் ஆசைப்பட்டு கேட்டு நீங்கள் வாங்கிக்கொடுக்க தவறிய பொருளை வாங்கிக் கொடுக்கவும்! அதற்குப் பிறகேனும், வாழ்க்கை ரஜினியை விட, ரஜினி குடும்பத்தைவிட , ரஜினியின் திரைப்படங்களை விட பெருசு என்பதை உணர்ந்து, வாழப்பழகவும்!

இப்போது, ரஜினி! ரஜினியார், அவருக்கு வாழ்வளித்த தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு நல்லதை செய்ய துடிக்கிறார் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால், பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்காமல், ஒரு பாக்கெட் சீப்பைக் கூட இங்கே ஆர்டர் செய்யமுடியாது! அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்திருந்தாலேனும், அரசுப்பணம் கிடைத்திருக்கும். அதில், தனுஷூக்கு, ஐஸ்வர்யாவுக்கு, செளந்தர்யாவுக்கு, லதாவுக்கு, பள்ளி வாடகைக்கு, ராகவேந்திரா மண்டப கரண்ட் பில்லுக்கு என எல்லாம் போக, மீதியாகும் பணத்தை வைத்து மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்திருக்கலாம். இப்போது அதுவும் இல்லை. ஆக, அவர் பயணிக்க இரண்டு வழிகளே இருக்கின்றன. ஒன்று, வடக்கே இருக்கும் சோனு சூட்டின் வழி. சந்திரமுகி படத்தில் இரண்டு காட்சிகளுக்கு மட்டுமே வந்துபோன ஒரு துணைநடிகர், அவர். அவர், கடந்த சில மாதங்களில், ஆயிரம் பேருக்கும் மேல் உதவிகளை செய்திருக்கிறார். மாணவர்களும், நோயாளிகளும், ஆதரவற்றவர்களும் அவரை அணுகிய ஒருநாளுக்குள், உதவி வந்து சேர்கிறது. ஆக, சோனு சூட்டைப் போல ரஜினியும் சமூகவலைதளங்களை உபயோகித்து மக்களின் குறைகளைக் கேட்டு, உதவி புரியத் தொடங்கலாம். இரண்டு, தெற்கே இருக்கும் சூர்யாவின் வழி. உண்மையில், சூர்யாவின் தந்தை சிவக்குமார், ரஜினியின் பேட்ஜை சேர்ந்தவர். ஆனாலும், பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே ‘அகரம்’ அறக்கட்டளையை தொடங்கி, இதுவரை 4000க்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை பட்டதாரிகளாக உருமாற்றியிருக்கிறார், சூர்யா. இன்று மாலையே ரஜினியும் சூர்யாவும் ஒரு விழாவில் கலந்துகொண்டால், சூர்யாவிடம் அதிகம் பேர் ஆட்டோகிராஃப் வாங்குவார்கள் என்பதை நான் திடமாகவே நம்புகிறேன். ஆக, ரஜினியும் ’அகரத்தைப்’ போல ஒரு அறக்கட்டளை தொடங்கலாம். அதற்கு, ‘ஆன்மீகம் அறக்கட்டளை’ என்றே கூட பெயர் வைக்கலாம். ஏனென்றால், அரசியலைத் தவிர, மற்ற எல்லா இடத்திலும் ஆன்மீகத்தை ரசிப்பான், ஏற்பான், அனுமதிப்பான் தமிழன்! இரண்டுமே முடியவில்லையா, எல்லாவற்றையும் மூடிக்கொண்டு, ‘கண்ணா, நீங்க தான் என் உசிரு. உங்களுக்கு என் மனசுல கோயில் கட்டி வைச்சிருக்கேன்…’ என்று வாயில் வடை சுடுவதை மட்டுமாவது ரஜினி நிறுத்தலாம். மக்களும் தயவுசாட்சண்யம் பார்த்து, ‘கிடக்கிறான், விடுங்கடா/டி… என்ன இருந்தாலும் சூப்பர்ஸ்டாரா போயிட்டான்…’ என்று மன்னிக்க வாய்ப்பிருக்கிறது!

நீங்கா துயரத்துடன், நீங்கள் வராமலேயே விலகிவிட்டதாக ராஜினாமா கடிதம் கொடுத்த அரசியல் வாழ்வுக்கு விடையளிக்கிறேன், ரஜினி சார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக