செவ்வாய், 5 ஜனவரி, 2021

அமித்ஷாவிடம் போனில் பேசிய லதா ரஜினிகாந்த்!!! எடப்பாடியை அவசரம் அவசரமாக சந்தித்த முருகன்!

ரஜினிக்கு, அவரது அரசியல் வருகையைச் சொல்லியும் அவரது பெயரைப் பயன்படுத்தியும் தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் சிலர் பேரங்கள் நடத்தியது தெரியவந்துள்ளது. ஏற்கனவே. nakkheeran.in - இரா. இளையசெல்வன் :

 rajini

“இப்போதும் இல்லைன்னா எப்போதும் இல்லை'' என டிசம்பர் 3-ல் சொன்ன ரஜினி, "இப்போதும் இல்லை... எப்போதும் இல்லை'' என டிசம்பர் 29 அன்று அரசியல் என்ட்ரிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். கட்சியைத் தொடங்க முடியாததற்காக ரஜினி தெரிவித்திருக்கும் காரணங்கள் ஏற்புடையாதகவும் நியாயமானதாகவும் இருப்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். இருந்தாலும் அவரது அறிவிப்பில் ஒட்டுமொத்த ரசிகர்களும், ரஜினியை நம்பி அவரது கட்சிக்குத் தாவவிருந்த பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளும் ஆடித்தான் போனார்கள். முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற குரல்களும் கேட்கின்றன.

 இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை வேளச்சேரி தொகுதியின் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ரஜினி பாஸ்கர், "தலைவரிடமிருந்து இந்த அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 1996ல் ஜெயலலிதாவிற்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததிலிருந்து ‘அரசியலுக்கு வா தலைவா' என அழைக்கிறோம். அவர் வரமாட்டார் என மனம் சோர்ந்திருந்த நிலையில்தான், 2017-ல் ‘சிஸ்டம் கெட்டுப் போச்சு' எனச்சொல்லி அரசியலுக்கு எங்களை அழைத்தார். ஒட்டுமொத்த ரசிகர்களும் சுறுசுறுப்பானோம். "சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் களமிறங்குவோம்'' என அடிக்கடி உறுதிப்படுத்தினார். ஆனால், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

 

rajini

 

இந்த நிலையில்தான்... பத்திரிகையாளர்களைச் சந்தித்து, "மக்களிடம் எழுச்சி உருவாகட்டும்; அப்போது நான் வருகிறேன்; அப்படியே வந்தாலும் முதலமைச்சர் நான் இல்லை; கட்சித் தலைமைக்கு ஒருவர்; ஆட்சித் தலைமைக்கு வேறொருவர் என்று சொன்னார் ரஜினி. அப்போதே ரசிகர்மன்ற நிர்வாகிகள் அப்செட்டாகிவிட்டனர். நவம்பர் 30-ம் தேதி மன்றத்தின் மா.செ.க்களை அழைத்து ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்திய ரஜினி, தனது உடல்நிலையைச் சொல்லி உருக்கமாக பேசியபோது, அதனைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டோம். அடுத்த மூன்று நாட்களில் கட்சி தொடங்குவது உறுதி என்று அதிரடி காட்டினார். அதற்கேற்ப, மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும் தேர்தல் பணிகளைத் துவக்கவும் பொறுப்பாளர்களை நியமித்தார். பூத் கமிட்டிகள் உள்ளிட்ட பணிகளும் வேகமெடுத்தன. எல்லாம் நடந்தபிறகு. மீண்டும் உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வரவில்லை என சொல்வதைத்தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

‘கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பிரச்சாரத்தில் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் எனக்கு பிரச்சாரத்தின்போது பாதிப்பு ஏற்பட்டால் பலரும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்' என்று அவர் சொல்லும் நியாயமான காரணங்களை, ராகவேந்திரா மண்டபத்தின் ஆலோசனை கூட்டத்திலேயே சொல்லிவிட்டார். அதன்பின், மீண்டும் அரசியல் வருகை பற்றி அறிவிப்பு, மீண்டும் அதே காரணத்தால் கைவிடுதல் என்பது ரசிகர்களுக்கு அவர் செய்யும் நம்பிக்கைத் துரோகமாக நினைக்கிறோம். ‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு' என்று அவர் சொல்வது உண்மையெனில், தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று ஆவேசப்பட்டார். நாம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் பலரும் ரஜினி பாஸ்கர் டோனிலேயே கருத்துக்களையே முன்வைத்தனர்.

ரஜினியின் நெருக்கமான தரப்பில் நாம் விசாரித்தபோது, "ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவர்களின் பயமுறுத்தல்கள் ரஜினியைவிட அவரது குடும்பத்தினரை மிகவும் பாதித்துவிட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்புகொண்டு, ரஜினியின் மனைவி லதாவே பேச, அமித்ஷா அதிர்ச்சியாயிட்டார். குடும்பத்தினரின் கவலையை ரஜினியாலும் புறம்தள்ள முடியவில்லை” என்றவர்கள், “மன்றத்து நிர்வாகிகளிடம் உருக்கமாக பேசிவிட்டு நவம்பர் 30-ம் தேதி கார்டனுக்குத் திரும்பிய ரஜினி, இப்போது தெரிவித்துள்ள அறிவிப்பை அன்றைக்கே சொல்வதற்குத்தான் தயாரானார். இதனை மோப்பம் பிடித்த பா.ஜ.க. தலைமை கொடுத்த அழுத்தம்தான் அரசியலுக்கு வருவதாக ரஜினியைச் சொல்ல வைத்தது. அவருக்கு உதவியாக அர்ஜுனமூர்த்தியை அனுப்பியும் வைத்தது.

பா.ஜ.க.வை நம்பி கட்சி ஆரம்பிக்கவிருந்த ரஜினிக்கு, அவரது அரசியல் வருகையைச் சொல்லியும் அவரது பெயரைப் பயன்படுத்தியும் தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் சிலர் பேரங்கள் நடத்தியது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பா.ஜ.க.வின் அழுத்தத்தால் மன உளைச்சலில் இருந்த ரஜினிக்கு, இத்தகைய புகார்களெல்லாம் அதிர்ச்சியைத் தந்தது. அதற்கேற்ப ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவ ரிசல்ட்டைப் பயன்படுத்தி கட்சி ஆரம்பிக்காமலே அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டார் ரஜினி'' என்று ரகசியங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ரஜினியை முன்னிறுத்தி அ.தி.மு.க.வை மிரட்டிக்கொண்டிருந்த பா.ஜ.க. தலைமைக்கு ரஜினியின் அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார துவக்க நாள் (டிச-27) கூட்டத்தில் பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பா.ஜ.க. பெயரைச் சொல்லாமல் அக்கட்சியின் நடவடிக்கைகளைக் கடுமையாக வறுத்தெடுத்தார். முனுசாமியின் முழு பேச்சினையும் மொழிமாற்றம் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது மத்திய உளவுத்துறை. கே.பி.முனுசாமியின் பேச்சு பா.ஜ.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து எடப்பாடியை எச்சரிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் 27-ம் தேதி இரவு அமித்ஷாவிடம் ரஜினியின் அரசியலையும் உடல்நிலையையும் பற்றி அவரது குடும்பத்தினர் கவலையோடு ஆதங்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அவசரம் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டார் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்.
 
இந்த சந்திப்பு குறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "அ.தி.மு.க. சீனியர் கே.பி.முனுசாமியின் பேச்சு எங்கள் தலைமையைக் கோபப்படுத்தியிருந்த சூழலில்தான், 27-ம் தேதி இரவு ரஜினி வீட்டிலிருந்து அமித்ஷாவைத் தொடர்புகொண்டு பேசினார்கள். கட்சி ஆரம்பிக்கவில்லை என ரஜினி அறிக்கை கொடுக்கவிருக்கிறார் என்பதையும் சொல்லிவிட்டனர். அதேபோல, அரசியலில் இல்லாத ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் பலரையும் வெளி உலக தகவல்களைச் சேகரித்துச் சொல்ல கட்டமைத்து வைத்திருக்கிறது பா.ஜ.க. அவர்களில் ஒருவர், இந்த முடிவை ரஜினி எடுக்கிறார் என்பதை 28-ம் தேதி காலையில் தெரிவித்திருக்கிறார். இதெல்லாம் அமித்ஷாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. உடனே தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியைத் தொடர்புகொண்டு பேசினார் அமித்ஷா. அவர் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்படி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து விவாதிக்குமாறு முருகனுக்கு உத்தரவிட்டார் ரவி. அதன்படி சந்திப்பு நடந்தது.

ddd

 

அந்தச் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம், கே.பி.முனுசாமியின் பேச்சை மோடியும் அமித்ஷாவும் ரசிக்கவில்லை. அவரது பேச்சு எல்லைமீறிய பேச்சாக இருக்கிறது. முதல்வராக இருந்துகொண்டு உங்களால் பேச முடியாததை அவரை வைத்து பேசவைத்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பா.ஜ.க.வினர் எந்த வகையில் கருங்காலிகள்? அவர் பேச்சில் உங்களுக்கு உடன்பாடில்லையெனில் அங்கேயே அவரை கண்டித்திருக்க வேண்டும். கூட்டத்தில் நீங்கள் பேசும்போதுகூட, "நாடாளுமன்றத்துக்கு ஒரு வகையிலும் சட்டமன்றத்துக்கு ஒரு வகையிலும் சிந்தித்துதான் மக்கள் வாக்களிப்பார்கள்' என்றீர்கள். அதாவது, "இது சட்டமன்ற தேர்தல்; எனக்காகத்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்களே தவிர, மோடிக்காக அல்ல என சொல்லாமல் சொல்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்' என கோபத்தை காட்டிய முருகன், கே.பி.முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க எங்கள் தலைமை விரும்புகிறது'' என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இதனை மறுத்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, "திராவிட அரசியலில் ஊறிப்போனவர் முனுசாமி. அவரது பேச்சுக்கு மேடையில் நாங்கள் மறுப்பு சொல்ல முடியாது. அதேசமயம், கட்சியில் அவர் சீனியர். நடவடிக்கை எடுத்தால் கட்சிக்குள் குழப்பம் வரும். அதனால், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்'' என்றார். மேலும், “அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது” என சொல்லிவிட்டு வந்துள்ளார் முருகன். ரஜினியை வைத்து அ.தி.மு.க.வை வளைத்து வைத்திருந்த பா.ஜ.க.வின் பிடி சற்று தளர்ந்துள்ளது. "ஓரிரு நாட்களில் ஜே.பி.நட்டா சென்னைக்கு வருகிறார். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன'' என்று விவரிக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள்.

முருகனின் சந்திப்பைத் தொடர்ந்து கே.பி.முனுசாமியிடம் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனே பத்திரிகையாளர்களிடம் பேசிய முனுசாமி, "தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் வைத்த விமர்சனம் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை அல்ல'' என்று விளக்கமளித்துள்ளார்.

‘ராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாலும்...’ என அவரது திரைப்பட பாடலைப் போலவே அரசியலுக்குக் கும்பிடு போட்டுவிட்டார் ரஜினி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக