வெள்ளி, 1 ஜனவரி, 2021

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கோவிஷீல்டு?

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கோவிஷீல்டு?
minnambalam : இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டுக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சமீப நாட்களாகக் குறைந்து வருகிறது. அதேசமயத்தில் 3 தடுப்பூசி நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஒப்புதல் கேட்டு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.     மாடர்னா, பிஃபைசர், கோவிஷீல்டு என மூன்று தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கேட்டு அந்தந்த மருந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தியாவில் உள்ள குளிர் கிடங்குகளில் சேமிக்க வசதியாக இருப்பதாகக் கூறி கோவிஷீல்டுக்கு முதலில் ஒப்புதல் வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

அந்தவகையில் இம்மருந்தை எப்படி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது என நாளை அனைத்து மாநிலங்களிலும் ஒத்திகை நடைபெற இருக்கிறது. இதனிடையே, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்பாடு தரவுகள் தொடர்பான தகவல்கள் நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இக்குழு இன்று ஆலோசனை நடத்தியது. சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என 3 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இக்குழு பரிந்துரை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையின் அடிப்படையில் விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2/3ஆம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக 1,600 தன்னார்வலர்களை சீரம் நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தியது. ஆயினும், இந்த சோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக