சனி, 2 ஜனவரி, 2021

ஸ்டாலின் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் .. அமைச்சர் வேலுமணி ஆதரவு பெண் தகராறு

BBC :திமுக சார்பில் கோவையில் இன்று நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பேசியபோது தகராறு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக - அதிமுக இரு கட்சிகளும் போட்டியாகப் போராட்டங்களும் நடத்தின. >கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத்தொகுதியில் உள்ள தேவராயபுரம் பகுதியில் திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அமைச்சர் வேலுமணியும் அதிமுக பூங்கொடியும் (மகளிர் அணி)

இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட கோவையில் ஊழல் அதிகமாகவுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களை செய்து வருகின்றனர். அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆவணங்களோடு நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த நான்கு மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி செய்த ஊழல்களை நிரூபித்து தண்டனை பெற்று தருவோம்" என்றார்.

கோவை திமுக கூட்டத்தில் தகராறு செய்த பெண்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அமைச்சர் வேலுமணி குறித்து ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்து குறுக்கிட்டுப் பேச முயன்று தகராறு செய்தார்.

இதனால், கூட்டத்தில் இருந்த திமுகவினர் அந்தப் பெண்ணுக்கு பெண்ணுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மு.க.ஸ்டாலின்
உடனடியாக கூட்டத்திலிருந்து பெண்ணை வெளியேற்றிய திமுகவினர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் பூங்கொடி என்றும், அவர் அதிமுகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கூட்டத்தில் என்ன நடந்தது?

திமுக கூட்டத்தில் முன்வரிசையில், திமுக தொப்பி அணிந்தவாறு அமர்ந்திருந்த பெண், ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்துநின்று பேசத் தொடங்கினார்.

'எந்த தொகுதியை சேர்ந்தவர் நீங்கள்' என ஸ்டாலின் அவரிடம் கேட்டார். அதற்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி என பதிலளித்தவர், அருகில் உள்ள ஊரில் இருந்து வந்ததாக கூறினார்.

அந்த ஊர் எங்கிருக்கிறது என ஸ்டாலின் கேட்டபோது 'எங்கு இருக்கிறது என தெரியாமல், எதற்கு கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்' என கோபமாக கேட்டார் அந்தப் பெண். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின், 'இவர் வேலுமணி அனுப்பி வைத்த நபர், அவரை காவல்துறையினரிடம் ஒப்படையுங்கள்' என கூறினார்.பின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 'திமுகவின் கூட்டத்தில் தகராறு செய்ய அமைச்சர் வேலுமணி இப்படி செய்வார் என்று எனக்கு முன்னரே தெரியும். திமுகவினரும் இப்படி இறங்கினால் அதிமுகவின் எந்த கூட்டமும் நடக்காது.' என பேசினார்.

ஆர்ப்பாட்டம் - மறியல்

திமுக கூட்டத்தில் அதிமுக பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுகவினருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்தவர்களும் அதே பகுதியில் கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


இரு தரப்பையும் தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் சமாதானம் செய்து வருகின்றனர். திமுக கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணையும், அவரோடு இருந்த மற்றொரு நபரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக