செவ்வாய், 22 டிசம்பர், 2020

இளையராஜா vs பிரசாத் ஸ்டூடியோ... என்னதான் பிரச்சனை? இளையராஜா வாதம் பலவீனமாக உள்ளது?

nakkheeran.in - இரா.சிவா : >தமிழ் இனத்தின் இசை சொத்தாகக் கருதப்படும் இளையராஜாவிற்கும் இத்தனையாண்டு காலமாக அவர் இசையமைத்து வந்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துவருகிறது. இசைஞானி இளையராஜாவை ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேறக் கூறியது முதல் இன்று வரை என்னதான் நடக்கிறது?Ilaiyaraaja

 பிரசாத் ஸ்டூடியோவானது சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரபல சினிமா ஸ்டூடியோ ஆகும். சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புத் தொடங்கி பின்தயாரிப்பு பணிகளுக்கான வேலையில் ஈடுபடுவது வரையிலான அத்தனை வசதிகளும் இதன் வளாகத்திற்குள் உள்ளடங்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இசைஞானி இளையராஜா இங்குதான் இசையமைத்துவந்தார். இன்று நாம் கொண்டாடும் இசைஞானியின் அத்தனை பாடல்களும் இந்த வளாகத்திற்குள் பிறப்பெடுத்தவையே. பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனரான எல்.வி.பிரசாத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்த அறையே இத்தனையாண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வந்த அறையாகும். இங்கிருந்து தனது இசைப் பணிகளைக் கவனித்து வந்த இளையராஜாவுக்கு இந்த அறை சற்று கூடுதல் சிறப்பு வாய்ந்தது. தனது குடும்பத்தினருடன் செலவழித்த நேரத்தைவிட அதிகப்படியான நேரத்தை இளையராஜா இங்குதான் செலவழிப்பது வழக்கம். "காலை 7 மணிக்கு அவரது கார் பிரசாத் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நுழைந்துவிடும். அவரது கார் உள்ளே நுழைகிறது என்றால், மணி 7 ஆகிவிட்டது என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்" என்கின்றனர் பிரசாத் ஸ்டூடியோவின் அக்கம் பக்கத்துவாசிகள். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில், என்னை தியானம் செய்வதற்காகவாவது உள்ளே அனுமதிக்கக் கூறுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்ததே, பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தை அவர் எவ்வளவு பக்தியுடன் அணுகியுள்ளார் என்பதைக் காட்டுகிறது.
 

இருப்பினும், இசைஞானி தரப்பு நியாத்தை மட்டுமே கருத்தில்கொள்ளாமல், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத் தரப்பின் கருத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நிறுவனர் எல்.வி.பிரசாத்திற்கு பிறகு ஸ்டூடியோவை அவரது மகனான ரமேஷ் பிரசாத் நிர்வகித்து வந்தார். அச்சமயத்தில் இரு தரப்பிற்கான உறவும் சுமுகமாக இருந்தது. "சாதாரண ஸ்டூடியோவாக இருந்த எங்கள் ஸ்டூடியோவை இளையராஜா கோயிலாக மாற்றியுள்ளார்" என்று ஒரு விழா மேடையில் அவர் பேசியது இங்கே நினைவு கூறத்தக்கது. இதனையடுத்து, ஸ்டூடியோ பொறுப்பினை எல்.வி.பிரசாத்தின் பேரனான சாய் பிரசாத் தற்போது நிர்வகித்து வருகிறார்.

 இந்த நிலையில், பிரசாத் ஸ்டூடியோவின் கட்டமைப்பை மாற்றி அமைக்க இருக்கிறோம். ஆகையால் நீங்கள் பயன்படுத்திவரும் அறையைக் காலி செய்யுங்கள் என இளையராஜா தரப்பை அணுகிய சாய்பிரசாத் தரப்பு கூறியுள்ளது. "இத்தனையாண்டு காலமாக இங்குதான் இசையமைத்து வருகிறேன். இந்த இடம் எனக்குக் கோவில் மாதிரி. முறையான வாடகையையும் நான் அளித்துவருகிறேன். திடீரென வெளியேறக் கூறினால் எப்படி" என்று இளையராஜா தரப்பு மறுத்துள்ளது. இங்கிருந்துதான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. அதன்பிறகு, இளையராஜாவை காலி செய்யுமாறு தொடர்ந்து கூறி வந்த பிரசாத் ஸ்டூடியோ தரப்பு, மேசை, கணினிகள், நாற்காலி உள்ளிட்டவற்றை இளையராஜா பயன்படுத்தி வந்த அறைக்குள் கொண்டுவந்து அடுக்கியுள்ளது. இது குறித்து முதலில் காவல் நிலையத்தை அணுகிய இளையராஜா தரப்பு, காவல் துறை இவ்விவகாரத்தில் தீவிரம் காட்டாததால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியது. 

 மேலும், பாரதிராஜா, பாக்யராஜ், சீமான் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இளையராஜாவிற்கு ஆதரவாக பிரசாத் ஸ்டூடியோ வாசலில் திரண்டனர். பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகமோ தொடர்ந்து தனது முடிவில் உறுதியாக உள்ளது. எனது அறையில் இருந்த இசைக்குறிப்புகள் திருடப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்படுகின்றன என இளையராஜா தரப்பு குற்றம் சாட்டியதும், தனக்கு நஷ்ட ஈடாக 50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரியதும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பினை கூடுதல் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இதை அவர்கள் தரப்பின் சமீபத்திய வாதம் அப்பட்டமாகக் காட்டுகிறது. 'இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அந்த ஸ்டூடியோவுக்குச் சென்று, ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அங்கு, தான் கைப்பட எழுதி வைத்துள்ள இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், தனக்குக் கிடைத்த விருதுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு, ஸ்டூடியோ உரிமையாளருக்கு உத்தரவிடக் கோரி, இளையராஜா தரப்பு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இளையராஜாவை உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்துள்ள பிரசாத் ஸ்டூடியோ தரப்பு, வேண்டுமென்றால் அவரின் பிரதிநிதியாக யாராவது வந்து எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆக, இரு தரப்பினருக்கும் இடையேயான இக்கருத்து வேறுபாடானது எப்போதுதான் முடிவுக்கு வருமென பலரும் பெருமூச்சு விடுகின்றனர்.

  சட்ட ரீதியாக இவ்விவகாரத்தை நாம் அணுகினால், இளையராஜா தரப்பின் வாதம் சற்று பலவீனமாக உள்ளதை மறுக்கமுடியாது. அதே நேரத்தில், உலகம் அறிந்த இசை மேதையாகவுள்ள ஒருவரை பிரசாத் ஸ்டூடியோ தரப்பு நடத்திய விதம் இளையராஜா ரசிகர்கள் மற்றும் திரை ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் நான்கு சுவருக்குள் சுமுகமாகப் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை, இவ்வளவு சிக்கலான ஒன்றாக மாற்றியிருக்க வேண்டுமா என்ற எண்ணம் நமக்கும் எழாமல் இல்லை.

 "உலகம் அறிஞ்ச ஒரு கலைஞனை இப்படி நடத்துனா, மத்த நாட்டுக்காரன் நம்மள என்ன நினைப்பான்" என டீக்கடையில் நின்று கொண்டு சுகர் இல்லா டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு முதியவர் கூறிய வார்த்தையில் அர்த்தங்கள் நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக