வியாழன், 3 டிசம்பர், 2020

RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்

Image may contain: 6 people, including Krish Marudhu, text
  madrasradicals.com : இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போன்று வேறு எந்த அமைப்பாலும் கலச்சாரம், மதம், பண்பாடு, குடும்பம் என்று மக்களின் தனிப்பட்ட வாழ்கைக்குள் வெகுவிரைவாக சென்றுசேர முடிவது கிடையாது. எவ்வளவுதான் முற்போக்கான கட்சியாக இருந்தாலும், தன் மக்களின் மீது அக்கறை கொண்ட மாநில கட்சியாக இருந்தாலும், இடைவிடாது மக்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் கட்சியாக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் போன்று தனிமனித வாழ்விற்குள் எளிமையாக நுழைய முடிவதில்லை. 

மதம் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக வைக்கப்பட்டதால் மட்டுமே இந்தியத் துணைக்கண்டத்தில் சாதி எனும் மிகக் கொடுமையான முறை பாதுகாக்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் பொருளாதார சுரண்டலை மையமாக வைத்து சாதிய அமைப்பு இயங்கினாலும் அது வெகுமக்களிடம் ஒரு புனிதமாக, கடமையாக, ஒரு நெறிமுறையாக கட்டாயம் உணரவேண்டிய விழுமியமாக பாதுகாக்கப்பட்டது. 

பாஜகவின் வெற்றிகளில் ஆர்.எஸ்.எஸ்-சின் கண்ணுக்கு தெரியாத கை

இதுபோன்ற ஒரு உளவியலைத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எளிய மக்களைச் சென்றடைய பயன்படுத்துகிறது. இது மக்களுக்கு ஒரு கலாச்சார நம்பகத்தன்மை கொண்ட அடையாளத்தை வழங்குகிறது. அதன் நுட்பங்கள் அடிப்படையில் சாதி, சமூக வலைப்பின்னல்களை உடையது. இந்த வலைப்பின்னல் பாரதிய ஜனதா கட்சியால் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நடந்த பொதுத் தேர்தலைகளை ஆய்வு செய்யும்போது பாஜக-வின் கரங்கள் வலுப்பெற்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தனித்துவமான வேலைத்திட்டத்துடன் களமிறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்தான பகுப்பாய்வு செய்யும்போது,  தேர்தல் முடிவுகளை விளக்கக் கூடிய அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நேரடியான காரணிகள் மற்றும் மறைமுகமாக பின்னிருந்து உந்தப்படும் போக்குகள் என அனைத்தும் ஒரு தேர்தல் வெற்றியை தீர்மானிக்கிறது.  பாஜக-வின் வெற்றிகளில் தேர்தல்களுக்கு முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ்-சின் “கண்ணுக்கு தெரியாத கை” எவ்வாறு செயல்படுகிறது என்பது மிகமுக்கியம்.

ஆர்.எஸ்.எஸ் எனும் அரை-ரகசிய அமைப்பு

ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு அரை-ரகசிய அமைப்பாகும். அது ஒரு முழுமையான ஜனநாயக அமைப்பு கிடையாது. ஒருபோதும் தனது செய்திட்டத்தில் வெளிப்படையாக இருந்தது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அது கூறுவது போல் ஒரு கலாச்சார அமைப்பாக வெளியே பொதுமக்களிடம் அடையாளப்படுத்துகிறது. இப்படி பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத ஒரு அரை ரகசிய “கலாச்சார அமைப்பு” தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

2019 பாராளுமன்றத் தேர்தலில் துவங்கி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி துபாக்கா சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் தோற்றது வரை பல்வேறு கூறுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேர்தல் வேலைத்திட்டம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஏன் பீகார் தேர்தலில் கூட ஆர்.எஸ்.எஸ் ஒரு முக்கியமான ஆனால் கண்ணுக்கு தெரியாத பாத்திரத்தை வகித்தது. 

கலாச்சாரவாதிகளாக தேர்தல் வேலையில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள்

பீகாரில் பாரதிய ஜனதாவுக்காக பிரச்சாரம் செய்யும்போது அதன் உறுப்பினர்கள் வெறும் அரசியல் நபர்களாக மட்டுமல்லாமல், தங்களை ஒரு கலாச்சாரவாதிகளாக காட்டிக் கொள்கிறார்கள். அடிப்படையில் தேர்தல் களத்தில் இறக்கி விடப்படும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் தேர்தலை தங்களது இலக்காக வைத்து செயல்படவில்லை. தேசிய பிரச்சினைகள் மற்றும் இந்துக்களின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒரு நீண்டகால திட்டத்தில் மக்களை இணைத்துக்கொள்ள செயல்படுகின்றனர். அத்தோடு அவர்களின் இலக்கு வாக்கைப் பெறுவதல்ல, உறுப்பினர்களைப் பெறுவது. இந்த போக்கு பாஜகவுக்கு தேர்தல் களத்திலும் பல பலன்களைத் தருகின்றன.

தமிழ்நாட்டில் நடத்தி வரும் பிரச்சாரம்

தேர்தகளின் போது ​​எந்தவொரு பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்யாமல், ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் துண்டறிக்கையுடன் பல மாதங்களாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாட்டில்  சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் ”தேசியம் காக்க, தமிழகம் காக்க 10 நிமிடங்கள் தாருங்கள்” என்ற 14 பக்க பிரச்சார புத்தகத்துடன் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் தமிழ் மக்களை வீடு வீடாக சந்தித்து வருகின்றனர். 

இதில் தமிழகம் ஏன் இப்படி இருக்கிறது? நான் எனது குடும்பம் குழுந்தை என்று வாழ்வது போதுமா? தமிழின் அருமை, தாய்மொழியின் பெருமை, மதமாற்றம் தேசிய அபாயம், கோவில்கள் அன்று இன்று, இடது சாரிகள், ஊடகங்கள், சமூதாய ஒற்றுமையே வலிமை என்ற பல்வேறு தலைப்புகளில் தங்களது இந்துத்துவா கருத்தை மக்களிடம் பரப்பி வருகின்றனர். 

அவர்கள் முழுக்க முழுக்க தேர்தல் வெற்றியை மட்டும் மனதில் வைத்து களத்தில் இறங்கவில்லை. அவர்களின் நெடுநாள் திட்டமான இந்துத்துவா சிந்தனையை தமிழர்களிடம் விதைப்பது, மக்களிடன் ஒரு நெடுநாள் உரையாடலை உருவாக்குவதற்காகவும், அத்தோடு தனது அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்காகவும் களத்தில் செயல்பட்டு வருகின்றனர். 

C:\Users\Admin\Desktop\126903695_130843282159216_2011999044031738706_n.jpg

வீடு வீடாக பெண்களுடனான ஆன்மீக உரையாடல்

பாஜக வேட்பாளர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பிரச்சாரத் திட்டத்தை வடிவமைத்து பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மக்களிடம் பேசுகின்றனர். அத்தோடு பெண்களின் கால்களைத் தொட்டு அவர்களின் ஆசீர்வாதங்களை வாங்குகின்றனர். பின் அவர்களுக்கு குங்குமத்தையும், மஞ்சளையும் வழங்குகின்றனர். இது அவர்களின் கணவர்களுக்கு செழிப்பு, பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளைத் தரும் என்ற கருத்தோடு, குடும்பநலன் என்ற போர்வையில் ஒரு ஆழமான கலாச்சார அடையாளத்தினுடாக மக்களிடம் உளவியலாக ஒட்டும் வேலையில் ஈடுபடுகின்றனர்.

தெலுங்கானா துபாகா இடைத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் செய்த வேலை 

கடந்த மாதம் தெலுங்கானாவில் நடந்த துபாகா இடைத்தேர்தலில், டி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி இருப்பதாக ஆரம்பத்தில் நம்பப்பட்டது. அதேநேரத்தில் பாஜக எங்கும் போட்டியிடவில்லை. ஆனால் இடைத்தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரச்சாரகர்கள் டெல்லியில் இருந்து தெலுஙகானாவிற்கு இறக்கப்பட்டனர். பின் அவர்கள் பாஜக வேட்பாளருக்கான ஒரு விமரிசையான பிரச்சாரத்தைத் தொடங்கினர். 

தெலுங்கானா மக்களிடம் தாங்கள் பயன்பெற்று வரும் பெரும்பாலான திட்டங்கள் மத்திய பாஜக அரசால் உங்களுக்காக கொண்டுவரப்பட்டு நிதியளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் டி.ஆர்.எஸ் உங்களுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து உங்களின் வாக்குகளைப் பெற முயற்சிக்கிறது என்று ஒரு தவறான தகவலை மையமாக வைத்து பிரச்சாரம் செய்தனர். 

இந்த ஒருங்கிணைந்த பிரச்சாரம் பல மாதங்களாக நீடித்தது. மாநில கட்சியான  டி.ஆர்.எஸ் குறித்து மக்கள் நம்புவதை முறியடிக்க ஒரு வகையான பொய்க்கதைகள் களத்திலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக உருவாக்கப்பட்டது. பாஜக பலவீனமானது என்று நம்பிவந்த போதிலும் அதன் வேட்பாளர் 1,079 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இது இடைத்தேர்தலுக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு குறுகிய கால செயல்திட்டத்தின் வெளிப்பாடு. மாநிலத்திற்கு ஏற்ப, தொகுதிக்கு ஏற்றார்போல் அங்கு வாழும் பெரும்பான்மை சாதிக்கு உகந்தவகையில் பல்வேறு திட்டங்களை சோதனை செய்து பார்த்து வருகிறது.

ஓட்டு வங்கியை மட்டுமே மையப்படுத்தியதல்ல ஆர்.எஸ்.எஸ்-சின் பிரச்சாரம்

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்களின் களப்பணி என்பது மற்ற கட்சிகளைப்போல் வெறும் ஓட்டு வங்கியை மையமாக வைத்து, கட்சி பதவிகளுக்காக நடத்தப்படவில்லை. அவர்கள் களத்தில்  விடாமுயற்சியுடன் அமைதியாக தன்னலமின்றி பணிபுரிகிறார்கள். இந்த அர்பணிப்பு அவர்களை குறிப்பிட்ட பகுதிகளில் பலப்படுத்தியவுடன் அவர்களின் அமைதியற்ற வன்முறை முகத்தை வெளிப்படுத்தி மேலும் தங்களை உறுதியானவர்களாகக் காட்ட பிறரிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தேர்தல் யுத்திகளுக்கான தனி திட்டத்திற்கு அப்பாற்பட்டு, இந்துத்துவ  கலாச்சார வரலாறு, தேசிய நலன் மற்றும் மதம் பற்றிய விவாதங்களை தேர்தல் களத்தில் அறிமுகப்படுத்தி விவாதப் பொருளாக மாற்றுகின்றனர். இளைஞர்கள் மற்ற அரசியல் கட்சிகளின் பாரம்பரிய தேர்தல் பணிகளில் வெறுமனே தொலைந்து போவதைக் காட்டிலும், ஒரு பெரிய சித்தாந்த பொறுப்பின் ஆக்கப்பூர்வமான பாத்திரத்தை வகிப்பதாக ஈர்க்கப்படுகின்றனர். இது ஆர்.எஸ்.எஸ் இளைஞர்களை சுற்றி உருவாக்கும் ஒரு பிற்போக்கு உளவியல். 

பொதுக்கூட்டங்களே இல்லாத கொள்கைப் பிரச்சாரம்

ஆர்.எஸ்.எஸ்-சின் செயல் யுக்தியானது குடும்பமாக, ஒரு சிறு சமூகமாக அடிப்படையில் கலாச்சாரப் பண்பாட்டை மையமாக வைத்து செயல்படுவதே தவிர, பெரிய பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து தனது கொள்கை விளக்கத்தைக் கொடுப்பதல்ல. பிரச்சாரகர்கள் குடும்பம், சமூகம், மதம் மற்றும் தேசத்தின் பிரச்சினைகளுடன் உரையாடலைத் தொடங்குகிறார்கள். அது அவர்களுக்கு மிக எளிமையாக மக்களிடம் அணுக அனுமதிக்கிறது.

வதந்திகளை மையப்படுத்திய தொடர் உரையாடல் 

வெளிமாநிலத்தில் இருந்து  வந்தாலும், பிராந்திய மொழியைப் பேசத் தெரியவில்லை என்றாலும், அவர்கள் நுழைய இந்த யுக்தி ஒரு புள்ளியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த வலைப்பின்னல் முதலில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், பின்னர் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதற்கும் பயன்படுகிறது. 

குடும்பங்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் வலைப்பின்னல்

பொதுவாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையில் ஒரு வகையான வரையறுக்கப்பட்ட இடத்தை இந்துத்துவா சக்திகள் ஆக்கிரமிக்கிறது. அது ஒரு தொடர் உரையாடலை ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட குடும்ப உரையாடல்களை தவிர்த்துவிட்டு இதுவே மையவிவாதமாக மாறுகிறது. பின் குடும்ப வட்டங்களுக்குள் பகிரப்படுகின்றன. இந்த பொய் பரப்புரைத் தகவல்கள் நம்பகமானதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றன. மேலும் அதன் உண்மைத் தன்மை குறித்த எந்த கேள்விகளும் எதிர்க்கப்படுகின்றன. வடஇந்தியாவில் நரேந்திர மோடி இன்னும் நம்பிக்கையையும் புகழையும் பெறுவதற்கு இதுபேன்ற யுக்திகளே காரணம். இங்கு பொய் தகவல்களின் ஊடாகக் கட்டப்படும் நம்பிக்கை என்பது தேர்தல் வேற்றிக்கு அடிப்படை.

எந்தவொரு தேர்தல் முன்னிலையும் இல்லாத மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாஜக வேகமாக காலூன்றுவதற்கான சாத்தியம் உருவானது பாஜக களத்தில் இறங்குவதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் இறங்கியதுதான்.

சாதி அடிப்படையில் பிராந்திய தகவல்களை சேகரிக்கும் பிரச்சாரகர்கள்

பிராந்திய உணர்வுகள், கலாச்சாரம், சிக்கல்கள் குறித்தான தகவல்களை சேகரித்து பாஜக-விற்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் கொடுக்கின்றனர். குறிப்பாக இடத்திற்கு தகுந்தார் போலான ஒரு செயல்திட்டத்தைத் தருகின்றனர். பின் பாஜக-வின் தேர்தல் வடிவமைப்பாளர்கள்  இந்த தகவல்களை வைத்துக்கொண்டு கடைசி நிமிட சாதிக் கணக்கீடுகளைச் செய்து NUMERICAL WIN அதாவது எண்ணிக்கை அடிப்படையிலான வெற்றி பெறுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மைக்ரோ களப்பணி பாஜகவின் மேக்ரோ பிரச்சாரங்களுக்கு அடிப்படையாக அமைகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஆளுமை இல்லாத, தனிமனித வழிபாட்டை  மையப்படுத்தாத செயல்திட்டத்தனுடாக முன்னெடுக்கப்படும் யுக்தி ஒரு கட்சியால் அடைய முடியாத ஆற்றலையும், நெருக்கத்தையும் மக்களிடம் கொண்டுவருகின்றது. இது உடனடி அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக அடிப்படைகளை குறிவைப்பது. இந்த யுக்திகள் பாஜக-வின் பிரச்சாரத்திற்கு வேகத்தைக் கொடுக்கிறது. 

ஆளும்கட்சியாக இருக்கம் பாஜக-வின் அரசியல் தோல்விகளும், மோசமான தன்மைகளும், ஆர்.எஸ்.எஸ்-சின் கலாச்சார உணர்ச்சி, தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சாரங்களால் சரிசெய்யப்படுகிறது. பாஜக-வுக்கு எதிரான தேர்தல்களுக்கான உத்திகளை வடிவமைப்பவர்கள் யாராக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் எனும் அரை ரகசியக் குழுவின் செயதிட்டத்தை உடைக்காமல் அவர்களுக்கு வெற்றி சாத்தியபடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக