வெள்ளி, 4 டிசம்பர், 2020

Dev Anand நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதையும் தாண்டி சினிமாவை நேசித்த இந்திய டாப் ஸ்டா

                   Ezhumalai Venkatesan :இந்திராகாந்தியை பதறவைத்த எவர்கிரீன் ஹீரோ..   ..உண்மையிலேயே பெயரை உச்சரிக்க உச்சரிக்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.. தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த இளம்பெண்ணை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி முன்னணி நடிகையாக நிலை நிறுத்தியவர். அவர் வேறு யாருமல்ல இப்போது அனில் அம்பானியின் மனைவியாக இருக்கும் டினா முனீம். ஜீனத் அமன் என்ற கவர்ச்சி புயலை உருவாக்கி இந்தித் திரையுலகம் என்ற கரையை கடக்க விட்டு அதிரச் செய்தவர் தேவானந்த். ரையில் மட்டுமல்ல திரைக்கு எதிராக நடந்த அரசியல் நிகழ்வுகளையும் கண்டு கொதித்தெழுந்து அதிரச் செய்தவர் அவர் .
1975ல் மிசா என்ற நெருக்கடி நிலையை இந்திராகாந்தி அமல் படுத்தியபோது பல்வேறு மாநிலங்களில் திரைத்துறையினர் பலரும் அவரது ஆட்சிக்கு எதிராக பம்மினர், தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாயே திறக்காமல் மௌனப்புரட்சி செய்து சாந்த சொரூபமாக காட்சி அளித்தார்.
ஆனால் இந்தித் திரையுலகில் பலர் மிசாவை எதிர்க்கும் படைக்கு தளபதியாக திகழ்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு பின்பலமாய் திகழ்ந்தனர்.
அவர்கள் அனைவரும் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டனர். படங்கள் வெளியாகதபடி முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆல் இன்டியோ ரேடியா, மிசா எதிர்ப்பாளர்கள் ஒரு லிஸ்ட் போட்டு அந்த நட்சத்திரங்கள் படங்களின் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திக்கொண்டது.
காங்கிரஸ் மேடையேறி சஞ்சய் காந்தியை புகழவேண்டும் என்று நிர்ப்பதிக்கப்பட்ட அன்றைய டாப் ஸ்டார் தேவ் ஆனந்த், கடுமையான விளைவுகளை சந்தித்தார். நொந்துபோய் தனிக்கட்சியே உருவாக்கி, திரை நட்சத்திரங்களை ஒன்று திரட்டி மிசாவுக்கு எதிராக அரசியல் கும்மாங்குத்து குத்தினார்.
மிசா முடிந்து 1977ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது இந்திரா காந்திக்கு எதிராக பிரச்சாரத்தில் தீவிரத்தை காட்டியவர் தேவ் ஆனந்த்..
அப்படிப்பட்ட தேவ்ஆனந்த், திரையுலகின் எவர் கிரீன் ஹீரோ.. அவரின் திரையுலகப்பயணம் அலாதியானது
நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதையும் தாண்டி சினிமாவை நேசித்த இந்திய டாப் ஸ்டார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருந்தது..
அது, வசூல் சக்ரவர்த்தியாக திகழும் காலகட்டத்திலேயே, மனதுக்குள் கனவு படமாக திகழ்வதை எப்படியாவது திரைக்கு கொண்டுவந்துவிடுவது..
எம்ஜிஆருக்கு ஒரு நாடோடி மன்னன் மாதிரி
..
ராஜ்கபூர் இப்படித்தான் வெகுநாள் காத்திருந்து சங்கம் படத்தை தயாரித்து 1964ல் வெளியிட்டு, முக்கோண காதலால் ஒட்டு மொத்த தேசத்தையே சலிக்கவே சலிக்காத பாடல்களால் உருக வைத்தார்..
இதேபோல தன்னுடைய கனவும் நினைவாக பெரும்பாடுபட்டார், ஷோ மேன் ராஜ்கபூர், திலீப்குமார் என்ற மாபெரும் ஜாம்பவான்களுக்கு இணையாக இடம்பிடித்து இந்தி திரையுலக மூவேந்தர்களில் ஒருவராக திகழ்ந்த தேவ் ஆனந்த்..
1940களிலும் 50 களிலும் கறுப்பு வெள்ளையில் கலக்கிய ஸ்டைல் மன்னனுக்கு தனது நவ்கேதன் சார்பில் முதன்முதலாய் கலர்ஃபுல் காவியம் ஒன்றை கொடுக்க விரும்பினார் ..அதுதான் கைடு ( #GUIDE )படம்.
புரிதல் இல்லாத கணவனை விட்டு வெளியேறும் நாட்டியத்தாரகை மனைவி, அவளை மனதால் வசீகரித்து நட்சத்திரமாக்கும் காதல் இளைஞன்..
பின்னாளில் அவனை அவளை பணம் உள்பட அனைத்திலும் ஏமாற்றி மோசடியாளனாக மாறுவது. கடைசியில் வறண்ட பூமிக்கு மழை கொண்டு வந்ததாக கிராமத்தாரால் தூக்கி கொண்டாடப்படும் மகானாகி கரைந்துபோவது என வித்தியாச கதை..
இங்கிலீஷ் எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் பிரபல கதையை படமெடுக்க தேவ்ஆனந்த் லொகேஷன்களை தேடி கார்களில் அலைந்தது பல்லாயிம் கிலோ மீட்டர்.. காரணம் நாயகி ரோஸியின் நடனக்கால் பாய்ச்சலுக்கு அவ்வளவு இடங்கள் தேவைப்பட்டன.
காட்சியமைப்பு, இசை, பாடல்கள் எல்லாமே தேவ் ஆனந்த் நினைத்தபடி அப்படியே வந்தது.. அதனால்தான் இன்றைக்கும் சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் பெருமையை பேசவைக்கும் படங்களில் முக்கியமானதாக திகழ்கிறது கைடு படம்..
சினிமாவில் தன் விருப்பத்தை ஒரு சிற்பிபோல் செதுக்கும் குணம்கொண்ட படைப்பாளிகளில் நடிகர் கம் தயாரிப்பாளரான தேவ் ஆனந்த் டாப் ஃபைவில் ஒருவர்.. மெனக்கெடுதல் என்பார்களே அந்த சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர்...
அதனால்தான் அவரது நவ்கேதன் பேனர் திரையில் தோன்றும்போதெல்லாம் திரையரங்குகளில் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் பிடித்தது.. அத்தனை காவியங்களை வாரிக் கொடுத்ததால் கிடைத்த பரிசு அது..
சினிமாவில் காதல் மன்னன்களாக கமல், ஜெமினி, ராஜ்கபூர் போன்றோர் நாயகர்களாக திகழலாம்.
ஆனால் ‘காதல் ஸ்டைல் மன்னன்’ என்றால் அது எவர்கிரீன் ஹீரோ தேவ் ஆனந்த்தான்.
70களில் யதார்த்த சினிமாக்களோடு போராடி கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு வர்த்தக சினிமாவில் காலுன்ற இவரின் ஸ்கீரீன் மேனரிசங்களே உதவின.
1946-ல் தேவின் முதல் கதாநாயகி கமலா கோட்னீஸ். நம்மூர் உரிமைகுரல் லதாவின் பெரியம்மா..
1946- 2011 வரை 65 ஆண்டு காலம் கதாநாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் கலக்கிய சாதனையாளர்.
பொதுவாக, நடிகர்களுக்கு ரசிகைகள் பட்டாளம் இருக்கும். ஆனால் நடிகைகளே பார்த்து ஏக்கப்படும் அளவுக்கு அழகான தோற்றத்தால் அலை பாயச்செய்தவர் தேவ்.
இப்படி மயங்கிப்போனவர்களில் ஒருவர் தான் அழகு தேவதை சுரையா. அந்த காலத்து சூப்பர் ஸ்டாரினி.. இன்றைய நயன்தாராக்களைவிட பல மடங்கு அதிகமாக கொடி கட்டி பறந்தவர்..
தேவ் ஆனந்தின் ஆரம்பகாலத்தில் அவரைவிட அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிக்கொடி நாட்டின.
ஏற்கனவே மணமான தேவ் ஆனந்தை காதலிக்க ஆரம்பித்த சுரையா காதலை கை விடவேயில்லை.. தேவுடன் தனியாக காதல் வாழ்க்கையையே நடத்தினார்.
ஆனால் தேவானந்தோ, சூர்யாவைப் போலவே தன்னுடன் பல படங்களில் தொடர்ந்து நடித்து ஹிட் கொடுத்த கல்பனா கார்த்திக்கை மணந்துகொண்டு அமைதியான மணவாழ்க்கைக்கு போய்விட்டார்..
தேவின் படங்களில் அற்புதமானவை என பிரிதெடுப்பது அவ்வளவு கடினமான காரியம், காதல் காட்சிகள், திகட்டவே திகட்டாத பாடல்கள், ஸ்டைல் காட்சிகள் என கலந்து வடிக்கப்பட்டவை அந்த காவியங்கள்,,,
பாஸி, காலா பாணி, காலா பஸார், சிஐடி, ஹம் தோனோ, அஸ்லி நக்லி, சாயா, தேரே கர்கே சாம்னே, ஹீரா பண்ணா, ஜானி மேரா நாம், தேரே மேரே சப்னே என பட்டியல் நீண்டு போய்க்கொண்டே இருக்கும்.
வைஜெயந்திமாலா கதாநாயகியாக நடிக்க வந்து 18 ஆண்டுகள் ஆனபிறகும் ஜுவல் தீஃப் படத்தில் அவரை ஜொலிஜொலிக்கும் நாயகியாக காட்டி 9 நிமிட, மிக நீண்ட பாடலுக்கு ஆடவைத்தார் தேவ் ஆனந்த்.. வைஜெயந்தியின் ஆற்றலை அவருக்கு உணர்த்திக் காட்டிய படம் தேவின் ஜுவல் தீஃப்தான்..
அந்த ஆற்றல் மங்காமல் அண்மையில் 86 வயதிலும் வைஜெயந்திமாலா பரத நாட்டியம் ஆடி அதிசயிக்க வைத்தார் என்பது இங்கே நினைவுக்கு வந்துபோகிறது
இந்தியாவின் எவர் கிரீன் ஹீரோ கம் என்னுடைய பேவரைட் நெம்பர் ஒன் இந்தி ஹீரோவான தேவ் ஆனந்த்தின் நினைவு நாள் இன்று..
( Sep 26, 1923 - Dec 3, 2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக