புதன், 23 டிசம்பர், 2020

கனடாவில் பலுசிஸ்தான் விடுதலை செயல்பாட்டாளர் பலூச் மர்ம மரணம் .. பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் விடுதலை

கரீமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

BBC :கனடாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரீமா பலூச் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  37 வயதான கரீமா மேற்கு பாகிஸ்தானில் உள்ள பதற்றம் மிகுந்த பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்.    பாகிஸ்தான் அரசு, ராணுவம் ஆகியவை குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துவந்த இவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன், அங்கிருந்து தப்பி வந்து கடந்த 5 ஆண்டுகளாக கனடாவில் தங்கியிருந்தார்.   கனடாவில் இருந்தபடியே சமூக ஊடகம் வழியாகவும், நேரடியாகவும் பலுசிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்தார்.    அவர் காணாமல் போனதாக டொரன்டோ நகர போலீஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.   ஆனால், "சந்தேகப்படுவதற்கு உரிய சூழ்நிலை ஏதும் இல்லை" என்று போலீசார் கூறினர்.

பிபிசி ஆண்டுதோறும் வெளியிடும் ஊக்கமளிக்கும் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் 2016-ம் ஆண்டு இடம் பெற்றவர் கரீமா பலூச். கனடாவில் தங்கி மனித உரிமை செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த கரீமாவுக்கு மிரட்டல்கள் தொடர்ந்துவந்துகொண்டிருந்ததாக அவரது நெருங்கிய நண்பரும், சக செயற்பாட்டாளருமான லத்தீப் ஜோஹர் பலூச் தெரிவித்தார். இவரும் டொரண்டோவில்தான் வசிக்கிறார். 

யாரோ ஒருவர் அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பி, அவருக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள் என்று பெயர் தெரியாத ஒரு நபரிடம் இருந்து கரீமாவுக்கு சமீபத்தில் மிரட்டல் வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் லத்தீப்.

கரீமாவின் இறப்பு குறித்து பிபிசி உருது சேவையிடம் பேசிய கரீமாவின் சகோதரி மஹ்கஞ்ஜ் பலோச், அவரது இறப்பு "எங்கள் குடும்பத்துக்கு மட்டும் அல்ல பலுசிஸ்தான் தேசிய இயக்கத்துக்கே பெரிய துயரம். விருப்பத்தின் பேரில் அவர் வெளிநாடு செல்லவில்லை. வெளிப்படையான மனித உரிமை செயல்பாடுகள் பாகிஸ்தானில் சாத்தியம் இல்லாததாக ஆகிவிட்டது" என்று தெரிவித்தார்.

பலுசிஸ்தான் பிரிவினைவாதம்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு பிரிவினைவாத தீவிரவாதம் நீண்டகாலமாக நடந்துவருகிறது.

இந்த மாகாணத்தில் கரீமா மிகப் பிரபலமான செயற்பாட்டாளர். பலூச் மாணவர் அமைப்பு (பலூச் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேஷன் - BSO) என்ற தடை செய்யப்பட்ட மாணவர் அமைப்பின் முதல் பெண் தலைவராக இருந்தவர் இவர்.

செயற்பாட்டாளராக அவர் பொதுத் தளத்தில் வெளிப்படத் தொடங்கியது 2005ம் ஆண்டு. பலுசிஸ்தான் துர்பத் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தில் அவர் கலந்துகொண்டு, காணாமல் போன தமது உறவினர் ஒருவரின் படத்தை ஏந்தினார்.

பல்லாயிரக்கணக்கான பிரசாரகர்கள் சமீப ஆண்டுகளில் காணாமல் போனதாக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் தன்னாட்சிக்கான தாகத்தை கொடூரமாக நசுக்குவதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் மறுக்கிறது.

கரீமாவின் குடும்பம்

கரீமாவின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர் பலர் பலோச் எதிர்ப்பியக்கத்தோடு பல ஆண்டுகளாக தொடர்புபடுத்தப்படுகின்றனர். அவரது மாமா ஒருவரும், அப்பாவின் சகோதரர் ஒருவரும் காணாமல் போய், பிணமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

பலூச் மாணவர் அமைப்பில் அவர் 2006ல் சேர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல பொறுப்புகளை வகித்தார். 2013ல் இந்த அமைப்பை அரசாங்கம் தடை செய்தது. ஆனால், அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுவந்தது. 2015ல் அதன் தலைவரானார் கரீமா.

அதன் பிறகு சில மாதங்களில் அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்றார். டொரன்டோவில் சக செயற்பாட்டாளர் ஹமால் பலூச் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கனடாவிலும், ஐரோப்பாவிலும் மனித உரிமை செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்ததுடன், சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

கரீமா மரணத்துக்கு 40 நாள்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று பலுசிஸ்தான் தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

பலுசிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்த இன்னொருவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்து கிடந்தார். கரீமாவின் உறவினரான அவரது பெயர் சஜ்ஜித் உசேன் பலூச். பத்திரிகையாளரான இவர் ஸ்வீடனில் தங்கியிருந்தார். இவரது மரணம் பற்றி குறிப்பிட்ட ஸ்வீடன் போலீஸ், தவறாக எதுவும் நடந்ததாக வெளிப்படையாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டது. அவரது இறப்புக்கு காரணம் நீரில் மூழ்கியது என்று தெரிவிக்கப்பட்டது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக