புதன், 23 டிசம்பர், 2020

மனுநீதி சோழனே ஒரு கற்பனை தான்! – ‘படைவீடு’ தமிழ்மகன்

பீட்டர் துரைராஜ்- aramonline.in: ஒரு பத்திரிகையாளன் பார்வையில் வரலாற்றை உள்வாங்கி, கடந்த கால வரலாற்றை சமகால அரசியலோடு தொடர்புபடுத்தும் கண்ணிகளைக் கண்டறிந்து வரலாற்று புதினங்களை படைப்பதில் வல்லவர் தமிழ்மகன்! மறைக்கட்ட வரலாறுகளை, திரிக்கப்பட்ட வரலாறுகளின் உண்மைத் தன்மையை நாவல் வழியே சொல்வதன் மூலம் ஒரு மிகச் சிறப்பான வரலாற்று பங்களிப்பை செய்து வருகிறார்!

பொதுவாக வரலாற்று நாவல் என்றால் சேர,சோழ,பாண்டியன் கதைகளைத்தான் நாம் படித்து இருப்போம். அதில் சண்டை இருக்கும்; காதல் இருக்கும்; வருணனை இருக்கும். ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட , போரை விரும்பாத மன்னனின் கதையை இந்த நாவல் பேசுகிறது.அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான நாவல்

14 ம் நூற்றாண்டின் கடைசி தமிழ் மன்னனின் கதையை ‘படைவீடு’ என்ற வரலாற்று நாவல் மூலம் தமிழ்மகன் தந்துள்ளார். தமிழ்நாட்டில் சாதி எப்படி நிலைபெற்றது, இடங்கை- வலங்கை மோதலின் அடிப்படை என்ன ? ஆடி மாதங்களில் படவேட்டம்மன் கோவில் திருவிழா வட தமிழகத்தில் பரவலாக ஏன்  நடைபெறுகிறது, களப்பிரர் காலம் “இருண்ட காலமாக” மாற்றப்பட்டது எப்படி என்பது போன்ற செய்திகளை இந்த நாவல் மூலம்  விளங்கிக்கொள்ள இயலும்.

தொண்ட மண்டலத்தில் ஆட்சி செய்த சம்புவராயர்கள் கதையை தமிழ்மகன் கதைக்களனாக தேர்ந்தெடுத்து உள்ளார். இவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள். போர் மீது நாட்டமில்லாத வேளிர்குடி மனப்பாங்கு கொண்டவர்கள். படைவீட்டு அம்மன்தான் (ரேணுகா தேவி) இவர்களுடைய குலதெய்வம். இவர்களுடைய ‘ராச கம்பீர குளிகை’ நாணயம் தமிழகம் முழுவதும் புழக்கத்தில் இருந்திருக்கிறது. மூன்றுதலைமுறையைச் சார்ந்த மன்னர்களின் வாழ்வு இதில் சொல்லப்பட்டுள்ளது.

“14 ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சாதிக் கட்டுமானம் இறுகத் தொடங்கி இருக்கிறது. இராசராசன் காலத்தில் வலங்கை, இடங்கை என்ற பிரிவு இருந்திருக்கிறது. அதாவது  விவசாயம் செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், கைவினைஞர்கள் ஒரு பிரிவாகவும் இருந்திருக்கின்றனர். ஒருவன்  விரும்பினால் விவசாயம் செய்வதில் இருந்து படைவீரனாக மாறிக் கொள்ளலாம். அதாவது சாதி மாறிக் கொள்ளலாம்.இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதி வருகிறேன்” என்று என்னிடம்  தனது நேர்காணலில்(காக்கைச் சிறகினிலே அக்2019) தமிழ்மகன் தெரிவித்து இருந்தார். உண்மைதான்.சமண,புத்த மதங்களை விழுங்கிய அந்தணர்களைப் பேசுகிறது. 700 அக்கிஹாரங்கள்; ஒரு அக்கிரஹாரத்திற்கு 15 குடும்பங்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறும் கதையை சொல்லுகிறது.

மனுஸ்மிருதியை தடைசெய்ய வேண்டும் என்று திருமாவளவன் சொன்னதை பலர் எதிர்த்து வருகின்றனர். இந்த சமயத்தில்  “மனுநீதிச் சோழன் என்று ஒரு  மன்னனே இல்லை”  என்று இந்த நாவல்  சொல்லுகிறது “சோழர்கள் மனுதர்மம் போற்றியதற்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதை அது. மனுதர்மத்தைப் போற்றுவது உங்கள் கடமை என்பதை திணிப்பதற்காக உருவாக்கப்பட்டது” என்று இந்த நாவலில் மன்னர் சொல்லுகிறார். சாதியை எதிர்த்த குரல் எப்போதுமே மன்னர் வாயிலாகவே வருகிறது.(மற்றவர்களுக்கு இதில் பங்கே இல்லையா என்ன ? )

தமிழ்மகன் பெரியார் விருது பெற்ற எழுத்தாளர். ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்க வரலாற்றை ‘ வெட்டுப்புலி’ நாவலில் செங்கல்பட்டு, சென்னையை கதைக்களனாகக் கொண்டு வந்தவர். ஒரு பத்திரிகையாளருக்கு உரிய வகையில் எளிய வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். இதனையொட்டிய  கல்வெட்டுகள், செவிவழிகதைகள், நூல்கள் ஏகாம்பரநாதர் உலா, மதுரா விஜயம்,கலிங்கத்துப்பரணி,செப்பேடுகள்,வரலாற்று குறிப்புகள் போன்றவைகளை தன்வயமாக்கிக் கொண்டு, இயல்பான சுவாசம் போல  கதையை கொண்டு செல்கிறார். வரலாற்றை சரியான புரிதலோடு பார்க்கிறார்.’இருண்ட காலம்’ என்று முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்த களப்பிரர் காலத்தை சொல்லுவது சதி என்கிறார்.இந்த நாவலில் வழக்கமாக தென்படும் தமிழ்மகனின் மெல்லிய அங்கதம் இல்லை.

படைவீட்டை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த சம்புராயர்கள் தமிழ் மன்றங்களை வைத்து இருக்கின்றனர்.கலைகளை வளர்த்து இருக்கின்றனர். ஓலைச்சுவடிகளை படியெடுத்து இருக்கின்றனர். ஊர்ப்பொது குளத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு என்று உத்தரவு போட்டிருக்கின்றனர். மதுரையில் சுல்தான்களில் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது அபயம் தேடி வந்தவர்களுக்கு ‘அஞ்சினான் புகலிடங்கள்’ அமைத்து இருக்கின்றனர்;அவைகளை சமணர்கள் நடத்தி வந்தனர். நிலவரியை குறைத்து இருக்கின்றனர். நூலாயம் (நூலகம்) அமைத்து இருக்கின்றனர்.சைவம், வைணவம், சமணம் என எல்லாக்  கோவில்களுக்கும் ஆதரவு அளித்துள்ளனர்.இதுதான் இந்த நாவல் சொல்லும் சேதி.

மதுரையில் சுல்தான்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. (‘இவர்கள் நம்மை ஆள்கின்றனர் என்று மக்களுக்கும் தெரியவில்லை. நாம் இந்த மக்களை ஆண்டு கொண்டிருக்கிறோம் என அவர்களுக்கும் தெரியவில்லை’) டெல்லியில் இருந்து வந்த மாலிக் கபூர் மதுரை கோவில்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று மன்னர் வீரசம்புவர், இளவரசர் ஏகாம்பரநாதர், அமைச்சர் திருநம்பியோடு ஆலோசனை செய்வதில் கதை தொடங்குகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் சிற்றரசர்களைச் சந்தித்து போருக்கு ஆதரவு கேட்க இளவரசர் செல்கிறார். இப்படிச்  சென்றதை ‘ஏகாம்பர உலா’ என்ற பெயரில் பாடலாக  இளஞ்சூரியர், முது சூரியர் என்ற இரட்டைப் புலவர்கள் (முடவர்& குருடர்) பாடலாக வடிக்கிறார்கள். நாவல் போக்கில் காளமேகப் புலவரும் வருகிறார்.பிறகு ஆடிப் பௌர்ணமி திருவிழாவின் போது மன்னனாக  முடிசூடி, திருமணம் செய்து கொண்டு, இரண்டு புதல்வர்களைப் பெற்று ஆட்சி நடத்துகிறார்.இறுதியில் விஜயநகரப் பேரரசை எதிர் கொள்ளுகிறார். இதனூடாக  மக்களின் வாழ்வியல் சித்தரிக்கப்பட்டுள்ளது; தமிழக நீர்நிலைகளின் இயல்புகள்;அரசபதவிகளின் பெயர்கள் வரிவகைகளின் எண்ணற்ற பிரிவுகள் (வரிக்கு எதிரான குரல் இந்த நாவல் நெடுகிலும் வரவில்லை. எப்படி எழாமல் இருந்திருக்கும் ? காணத் தவறிவிட்டாரோ நூல் ஆசிரியர் ?) வாசகனை ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன.

திருட்டுப் பட்டம் கட்டப்பெற்ற கோவில் தேவரடியார் ராசமல்லி மீது நடைபெறும் விசாரணை, போரை  எதிர்பார்த்து இருந்த நேரத்தில் படைவீரர்களைக் கொண்டு கட்டப்பட்ட வீராணம் ஏரி (வீரநாராயணர் ஏரி), குடிபடையை திரட்டும் முறை (அரச படை நிரந்தரமானது), ஆயுதங்களின் வகைகள், ஆயுதப் பட்டறை போன்றவைகள் நாவல் சமகாலத்தில் நடப்பது போன்று உள்ளன. பெண்ணுக்கு பரிசம் போட்டு திருமணம் செய்யும் முறை மாற்றப்படுகிறது.

இதில் புழங்கப்பட்டுள்ள பெயர்களைப் பற்றி பேச தனியாக  ஒரு கருத்தரங்கமே ஏற்பாடு செய்யலாம். சிராப்பள்ளி (இப்போதைய திருச்சி ! சமணர்களோடு தொடர்புடையதோ! ), வல்லபுரி (பெல்லாரி), பெரும்புலியூர் (பெரம்பலூர்), வடிவழகிய பெருமாள்,  (சுந்தரராஜ பெருமாள்), இன்னல் நீக்கி நாயனார் (ஆபத் சகாய ஈஸ்வரன்) வழித்துறை நாதர் (மார்க்க பந்தீஸ்வரர் – விஜயநகர ஆட்சியில் மாற்றப்பட்ட பெயர்கள்) போன்றவை வாசகனுடைய அறிவுக்கேற்ப விரிந்த பொருளைத் தரக்கூடும்.

விஜயநகரப் பேரரசு தமிழ்நாட்டின் மீது  படையெடுப்பு நடத்த அந்தணர்களின் மடம் அவர்களுக்கு  நிதி தருகிறது. அந்தணர்களை  எதிர்த்த சோழ மன்னனான ஆதித்த கரிகாலன் எரிக்கப்பட்ட கதையும் வருகிறது.

அந்தணர்களுக்கு போர்ப்பயிற்சியும், நிர்வாகப் பயிற்சியும் அளித்த நிறுவனத்தின் பெயர் காந்தளூர்ச் சாலை. இதனை இராசராசன் அழித்தான் (கலமறுத்த காந்தளூர்ச் சாலை) என்கிறது இக்கதை. மாரியம்மன், சோலையம்மன்எல்லையம்மன், சுடலைமாடன் ,கொற்றவை, ஐயனார் என இருந்த கோவில்களில் சாந்தம் செய்கிறோம் என்று சொல்லு பலியிடல் நிறுத்தப்பட்டது எப்படி ? எளிய வழிபாடு அப்புறப்படுத்தப்பட்டு  பிரமாண்டமான வழிபாடு, யாகம் போன்றவைகளால் பலன் அடைந்தது யார் ?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 14 ம் நூற்றாண்டில் சம்புராயர்கள்  அமைதியான ஆட்சியை, மதப் பூசல் இல்லாத ஆட்சியை, தமிழை காக்கும் ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். இதனைப் படிப்பதன் மூலம் ‘சாதிப்பெருமையை’ 184 சாதிகளும் (92 இடங்கை + 92 வலங்கை) பெற்றது எப்படி  என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ‘எல்லா உண்மைகளும் ஒருவகையில் கதைகளாகவும், எல்லாக் கதைகளும் ஒருவகையில் உண்மைகளாகவும்’ உள்ளன.இது தமிழ்மகன் தமிழுக்கு கொடுத்துள்ள கொடை.

தழல் வெளியீடு,    35, அண்ணா நகர் பிளாசா,சி;  47, 2 – வது நிழற்சாலை,                                            அண்ணா நகர்,   சென்னை  600040.  தொலைபேசி;  7824049160  – ரூ.600

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக