செவ்வாய், 22 டிசம்பர், 2020

தமிழக தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணைய குழுவினரிடம் அதிமுக, திமுக வலியுறுத்தல்

hindutamil.in  : சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.படங்கள்: க.ஸ்ரீபரத்.. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய குழுவினரிடம் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

 தமிழக சட்டப்பேரவை தேர்த லுக்கு சில மாதங்களே உள்ளன. இதையடுத்து, தேர்தல் முன்னேற் பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலர் (பொது) உமேஷ் சின்கா தலைமையில், துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஹெச்.ஆர்.வத்சவா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் வத்சவா, தேர் தல் ஆணைய செயலர் மலேய் மாலிக் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் காலை 11 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைய குழுவினர் சந் தித்தனர். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் கருத்துகளை தேர்தல் ஆணைய குழுவினர் கேட்டறிந்தனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தி யாளர்களிடம் கட்சிகளின் தலை வர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 3 அல்லது 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அந்தந்த கிராமங்களி லேயே வாக்குச்சாவடி அமைத்து, பயணம் இன்றி வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள சாவடிகளை இரண்டாக பிரிக்க வேண்டும். குடிபெயர்ந்து சென்ற வர்கள், இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டி யல் வெளியிட்ட பின்னரும் விடுபட்ட வர்கள் பெயர்களை சேர்க்க முகாம்கள் நடத்த வேண்டும் என கூறியுள்ளோம்.

ஆர்.எஸ்.பாரதி (திமுக): திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 11 கோரிக்கைகள் வைக்கப்பட் டன. சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வாக் காளர் பட்டியல் முறைகேடுகளை களைந்து, சரியான பட்டியலை வெளியிட வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கக் கூடாது. பணப் பட்டுவாடாவை தடுக்க தற்போதிலிருந்தே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

வி.பி.துரைசாமி (பாஜக): தேர்தல் விதிமுறைகளை சிறந்த முறையில் அமல்படுத்த வேண்டும். பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்குவதை தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை தடுக்க வேண் டும். தேர்தல் ஆணையம் அறிவிக் கும் தேர்தல் தேதியை ஏற்போம். கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரச்சினை இல்லாமல் தேர்தல் நடத்த வேண்டும்.

ஆர்.தாமோதரன் (காங்கிரஸ்): தமிழகத்தில் சேலம், கரூர் மாவட் டங்களில் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதை ஆய்வு செய்ய வேண்டும். சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். ஏப்ரல், மே மாதத்தில் கரோனா தொற்று, வெயில் அதிகமாக இருக் கும் என கூறப்படுவதால், வாக்குச் சாவடிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

மூர்த்தி (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். மலைப்பகுதி மக்களுக்கு தேர்தல் ஆணையமே வாகன வசதி செய்து தரவேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி வேண்டாம் என்று கூறியுள்ளோம்.

டி.கே.ரங்கராஜன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும். ஆளுங்கட்சியினர் ஏற்கெனவே பணத்தை கொண்டு சேர்த்துள்ளனர். எனவே, பண நடமாட்டத்தை தடுக்க வேண்டும். பெரு முதலாளிகளிடம் ‘எலக்ட்டோரல் பாண்டு’ பெறுவதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித் துள்ளோம்.

நா.பார்த்தசாரதி (தேமுதிக): சட்டப்பேரவை தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும். வாக் காளர்களுக்கு அடையாள ஆவண மாக ஆதார் அட்டை வைத்திருப்ப வர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

அரசியல் கட்சியினரைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் ஆணைய குழுவினர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேஷ்தாஸ், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் பல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, புதுச்சேரி செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக