ஞாயிறு, 20 டிசம்பர், 2020

அதானி சொல்லியிருப்பது கொஞ்சம் உண்மை. நிறைய பொய். .. ஒற்றைப் பயிர் உற்பத்தி என்பது ஒரு இயற்கைப் பேரழிவு

திரு. மருதையன் அவர்கள் : அதானி ரெம்ப நல்லவராம் ! அமித்ஷாவைக் கண்டு அடிமை எடப்பாடி அரசு நடுங்குவதை வைத்து, “அமித் ஷா பெரிய அப்பாடக்கர்” என்று பில்டப் கொடுக்கும் தமிழ் ஊடக 'வைத்தி'கள், நேற்று விவசாயிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை பற்றி என்ன சொல்வார்கள்? “நான் சொன்னபடி புராரி மைதானத்துக்கு வா, 3 ஆம் தேதி பேசுவோம்” என்று தெனாவெட்டாக அறிவித்த அமித் ஷாவின் முகத்தில் சப்பென்று அறைந்திருக்கிறார்க்கள் விவசாயிகள். “அரசு முன்வைத்த தீர்வுகளை நிராகரிக்கிறோம்” என்று மட்டும் அவர்கள் சொல்லவில்லை. “நாங்கள் 3 சட்டங்களையும் திரும்ப பெறு என்று கோருகிறோம்.
அதற்கு பதில் சொல்லாமல், பிரச்சனையை திசை திருப்பி விவசாயிகளை அவமானப்படுத்தியிருக்கிறீர்கள்”என்று சாடியிருக்கிறார்கள்.
ரிலையன்ஸ், அதானி பொருட்கள் புறக்கணிப்பு,
ஜியோ புறக்கணிப்பு,
டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்த மறுப்பு,
பாஜக எம்.எல்.ஏ , எம்.பி, அமைச்சர்களின் வீடுகள் முற்றுகை,
ஜெய்ப்பூர் சாலை மறியல்!
போரராட்ட அறிவிப்புகள் அனைத்தும் இலக்கை நோக்கி கூர்மையாகவும், போர்க்குணத்துடனும், மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்ம ஊரில் மத்திய அரசை எதிர்ப்பதென்றால் தபால் ஆபீசு, மாநில அரசை எதிர்ப்பதென்றால் கலெக்டர் ஆபீசு … இவைதான் நமது இலக்குகளாக இருந்து வருகின்றன.
அங்கேயோ, விவசாயிகள் அடித்த அடியில் அதானி நிறுவனம் ஆடிப்போய் ஒரு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறது. இதுதான் நாம் கவனிக்க வேண்டிய விசயம்.
000
“நாங்கள் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதுமில்லை. அதன் விலை நிர்ணயத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்யும் தானியங்களை எங்கள் கிடங்குகளில் பராமரிக்கிறோம். அவ்வளவுதான். ஒரு பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனமான எங்கள் மீது சேறடித்து, பொது மக்கள் மத்தியில் எங்கள் கவுரவத்தைக்குலைக்கிறார்கள்” என்று இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது அதானி நிறுவனம்.
அதானி நிறுவனம் சொல்லியிருப்பது உண்மையா, பொய்யா?
கொஞ்சம் உண்மை. நிறைய பொய்.
21 Jan 2015 Livemint இணைய இதழில் Adani in slow, strategic bid to stay ahead in agriculture என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் செய்தியைப் பார்ப்போம்.
இந்திய உணவுக்கழகம் பஞ்சாபிலும் அரியானாவிலும் கொள்முதல் செய்யும் தானியங்களை சேமித்து வைக்க பல இடங்களில் அதானியின் கிடங்குகளைத்தான் (WAREHOUSE) பயன்படுத்திக் கொள்கிறது. பஞ்சாபில் மட்டுமல்ல, சென்னை,, கோவை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில அதானிக்கு தானியக் கிடங்குகள் உள்ளன. தானியங்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்ல ஏராளமான வேகன்களும், தனிச்சிறப்பான ரயில்பாதைகளும் இருக்கின்றன. ஏற்றுமதி செய்ய துறைமுகமும் இருக்கிறது. ஆப்பிளை சேமித்து வைத்து ஏற்றுமதி செய்ய இமாச்சல பிரதேசத்தில் குளிரூட்டப்பட்ட கிடங்குகள் உள்ளன.
இவை அனைத்தும் சேர்ந்ததுதான் Adani Agri Logistics.
மேற்கூறியவையெல்லாம் அதானி நிறுவனமே மறுக்கவியலாத உண்மைகள்.
அதானி இன்றுவரை தானியக் கொள்முதலில் இறங்கவில்லை என்பதும் உண்மைதான். அதாவது இன்றுவரை.
ஆனால் நாளை?
“அதானி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளில் சிறுகச்சிறுக உள் கட்டுமானங்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறது. விரைவிலேயே விவசாயத்துறையில் நுழைவதற்கு அரசு அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்கிறார் லைவ் மின்ட் கட்டுரையாளர்.
“இந்திய உணவுக்கழகம் restructure செய்யப்படவிருக்கிறது. தானியக் கொள்முதலில் அரசின் பாத்திரம் குறையப்போகிறது. இந்த இடத்தில் முந்திக் கொண்டு நுழைவதற்கு அதானி தயாராக இருக்கிறார்” என்று லைவ் மின்ட் பத்திரிகையாளரிடம் சொல்கிறார் அகமதாபாத் ஐ.ஐ.எம் இன் விவசாயத்துறை வல்லுநர் சுக்பால் சிங்.
கவனமாகப் பாருங்கள். இந்த செய்தி வெளிவந்தது ஜனவரி 2015 இல்.
சென்ற பதிவில் நான் கூறிப்பிட்டிருக்கும் நிதி ஆயோக் – இன் அறிக்கையோ டிசம்பர் 2015 இல் தான் வெளிவருகிறது.
மோடி 2013 இலிருந்தே தேர்தல் பிரச்சாரத்துக்கு அதானியின் தனி விமானத்தில் பறக்கத் தொடங்கி விட்டார்.
000
மோடி அரசு இந்த 3 அவசரச் சட்டங்களையும் பிறப்பித்த பின்னர் கடந்த ஆகஸ்டு 13 ஆம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள Institute of Rural Management இல் அதானி கிராமப்புற முன்னேற்றம் பற்றிப் உரையாற்றியிருக்கிறார். அதன் சுருக்கத்தைப் பார்ப்போம்.
“பால், பருப்புவகைகள், வாழை, மா, பப்பாளி ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியாதான் உலகிலேயே முதலிடம். அரிசி, கோதுமை, கரும்பு, வேர்க்கடலை, காய்கனிகள், பருத்தி ஆகியவற்றில் இரண்டாவது இடம். ..
பிலிப்பைன்சும் பிரேசிலும் தங்கள் நாட்டில் விளையும் பொருட்களில் 75% பதப்படுத்தி மதிப்புக் கூட்டி ஏற்றுமதி செய்கின்றன. நாமோ 10% கூட செய்வதில்லை.”
“விவசாயத்தில் வெற்றி பெற வேண்டுமானால் பெருவிகித உற்பத்தி தேவை…
இந்தியாவில் 700 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொருமாவட்டத்திலும் உள்ள சிறு, நடுத்தர விவசாயிகளை ஒரு cluster ஆக மாற்றி அவர்களை கார்ப்பரேட்டுகளுடன் இணைப்பதன் மூலம்தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஒவ்வொரு விவசாயியையும் ஒரு தொழில்முனைவராக மாற்ற வேண்டும் என்பதுதான் பிரதமரின் ஆத்ம நிர்பார் திட்டம். அதை இப்படித்தான் நிறைவேற்ற முடியும்” என்கிறார் அதானி.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஒப்பந்த விவசாயத்துக்குள் இழுப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒற்றைப்பயிர் சாகுபடிக்கு (mono culture) மாற்றுவதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம் என்பதுதான் இவர்கள் முன்வைக்கும் திட்டம்.
ஒற்றைப் பயிர் உற்பத்தி என்பது ஒரு இயற்கைப் பேரழிவு. கோதுமை, நெல் பயிரிடும் மாநிலமாக மாற்றப்பட்டதன் விளைவாக மண் மலடாகி, உரம் – பூச்சி மருந்து செலவு அதிகமாகி, கடனாளியாகி, இயற்கைச் சூழலும் அழிந்து, பஞ்சாப் விவசாயிகள் இன்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 700 பஞ்சாப்களை உருவாக்குவதுதான் அதானி கூறும் திட்டம்.
அது மட்டுமல்ல, தேயிலை, ரப்பர், வாழை என்று ஒரு பயிர் உற்பத்திக்கு மாற்றப்பட்ட எந்த நாடும் ஏகாதிபத்திய சார்பு நிலையிலிருந்து தப்ப முடிந்ததில்லை. வாழைப்பழக் குடியரசு (banana republic) என்ற சொற்றொடரே இந்த அடிமை நிலையை குறிப்பதற்காக உருவானதுதான்.
அதானி கூறுகின்ற கார்ப்பரேட் சார்பு ஒப்பந்த விவசாயிகளின் நிலையும் அத்தகையதாகத்தான் இருக்கும்.
000
“நாங்கள் கொள்முதல் செய்யவில்லை” என்று இன்றைக்கு அறிக்கை விடும் யோக்கியரான கவுதம் அதானிதான் ஆகஸ்டு மாதம் இதைப் பேசியிருக்கிறார்.
“கார்ப்பரேட் முதலாளிகள் பொய் சொல்வார்கள் என்பது தெரிந்த விசயம்தானே” என்று சிலர் இதனை அலட்சிப்படுத்தலாம். விசயம் அதுவல்ல.
நாடெங்கும் கோடவுன்கள், ரயில் பெட்டி, கன்டெயினர், துறைமுகம், சில்லறை விற்பனைக் கடைகள், தராசு, படிக்கல் அனைத்தையும் தயார் செய்து கொண்டு மோடியின் சட்டத்துக்காக காத்திருக்கிறார் அதானி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?
இந்த விசயம் தெரிந்த காரணத்தினால்தான் அந்த விவசாயிகள் தபால் ஆபீசை மறிக்காமல் அதானியையும் அம்பானியையும் மறிக்கிறார்கள்.
விவசாயிகள் மறித்து நிற்பது டில்லி செல்லும் சாலைகளை மட்டுமல்ல, இந்திய கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பல்லாயிரம் கோடி கனவை மறித்து நிற்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் கையாட்களான இந்துத்துவ பாசிஸ்டுகளின் கனவையும் மறித்து நிற்கிறார்க்ள.
நம் அனைவருக்கும் வரவிருக்கும் பேரழிவைத் தடுத்து நிற்கிறார்கள். இதைத் தமிழக விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நாம் புரிய வைக்க வேண்டும்.
- திரு. மருதையன் அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக