திங்கள், 14 டிசம்பர், 2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் முஸ்லீம் பெண் குற்றவியல் வழக்குரைஞர் திருமதி . ஷபானா

 நேசமுரசு ஹமீத்கான் : சென்னை உயர்நீதிமன்றத்தின் 126வது ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடந்து முடிந்தது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆரம்பித்து இத்தனை ஆண்டு கால வரலாற்றில் ( Madras High Court -Estd : 1892 ), குற்றவியல் பிரிவில் அரசு சார்பாக ஆஜரான முதல் பெண் வழக்குரைஞர் ஷபானா ஆவார். ஆறு ஆண்டுகள் வரையிலும் அவர் அரசு தரப்பிற்காக வாதாடியுள்ளார். அதிலும் அவர் ஒரு முஸ்லிம் பெண் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சட்டத்துறை என்பது எத்தனை கடின சூழ்நிலைகளை உருவாக்கவல்லது, எத்தனை நெருக்கடிகள் எத்தனை போராட்டங்களை உடையது என நம்மில் அனைவரும் அறிந்த ஒன்று. அத்தகைய ஒரு சிக்கலான துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதோடு மாத்திரமல்லாமல்...அதில் தமது சேவையையும் தொடரும் ஒரு முஸ்லிம் சாதனை பெண்ணை பற்றிய பதிவு.  1986ல் சென்னையில், முஹம்மது ஃபர்ஹத் மற்றும் சித்தி பதுரியா ஆகிய பெற்றோருக்கு மகளாக பிறந்த திருமதி.ஷபானா, படித்தது வளர்த்தது அனைத்தும் சென்னையில் தான். அவருடைய கணவர் ஸமீ ஜூல்பிகார் ஆவார், இவர்களுக்கு குட்டி குட்டியாக இருமகள்களும் உண்டு. கணவர் மற்றும் அவரது தந்தை (மாமனார்) அவர்களின் உதவியும் ஊக்கமும் பெற்ற ஷபானா அவர்களுக்கு மென்மேலும் உறுதுணையாய் இருந்தது அவரது மாமனார் என பெருமிதம் கொள்கிறார். வழக்குகளில் பிராக்டீஸ் செய்ய அவரது மாமனார் அவர்கள் பெரிதும் உதவியுள்ளார்கள்.

திருமதி.ஷபானா அவர்கள் பற்றிய மற்றொரு வியத்தகு விஷயம் என்னவெனில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இவர் இலவச சட்ட வழிகாட்டலும், இலவசமாக வழக்காடுதலையும் சேவையாக செய்து வருகிறார். ஆதரவற்ற பெண்களுக்காகவும் இலவச வழக்காடுதலில் சேவையாற்றும் இவர், இதுவரை அத்தகையோரிடமிருந்து ஒரு பைசா கூட வக்கீல் ஃபீஸாக பெற்றுக்கொள்ளவில்லை. இவர் உதவிபுரிந்த மனிதர்கள் எத்தனை பேரென்றும் இதுவரை கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை.
இத்தகு சேவையானது கணவருடைய பூரண அனுமதியில் ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் சேவையாற்றி வரும் திருமதி.ஷபானா, அவரது இரு மகள்களையும் தம்மைப்போல ஒரு வழக்குரைஞராக உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவு என்கிறார்.
சிறுவயதில் அவரது குடும்ப நண்பரான திரு.ஜோசப் என்பவருடைய வீட்டில் இருந்த சகோதர சகோதரிகளில் 6 பேர் , காது கேளாத வாய் பேச இயலாதவர்களாக இருந்தார்களாம், அவர்களுடைய வீட்டிலேயே அதிகமாக விளையாடி வளர்ந்த ஷபானா அவர்களுக்கு சைகை பாஷை அத்துப்படியாகிவிட்டது. அவர்களை கண்டு இன்ஸ்பையரான ஷபானா, சட்டம் படித்த முடித்த பிறகு இவர்களை போலுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என தீர்மானித்து தமது அரும்சேவையை தொடர்ந்து வருகிறார்.
முகநூலில் சற்று நாட்களாக சுற்றிவந்த அவர்களது சேவைகள் பற்றிய பதிவை கண்டு, மேலும் தகவல் அறிய முற்பட்டபோது...இணையதளத்தில் எங்குமே இவர் பற்றிய விபரங்கள் கிட்டவில்லை ஆகவே பெரும் முயற்சிகளுக்கு பிறகு அவரை தொடர்புகொண்டோம், அப்போது இரு குழந்தைகளின் தாயாகி, அவர் குடும்பத்தையும், தொழிலையும் ஒருசேர கவனித்து வரும் ஷபானா அவர்கள் கூறியதாவது, " முஸ்லிம் சமூகம் இன்னும் இருளில் தான் வீழ்ந்துகிடக்கிறது, யாரும் கல்வி கற்க முன்வருவதில்லை அப்படியே கற்றாலும் அதற்குரிய தொழில்த்துறைகளில் ஈடுபடுவதில்லை. குறிப்பாக பெண்கள் இன்னும் நமக்கெதற்கு படிப்பு, நாம் என்ன வேலையா பார்க்க போகிறோம் என்கிற பின்தங்கிய எண்ணத்திலேயே இருக்கிறார்கள், அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் இட ஒதுக்கீட்டையும் கூட நம்மில் யாரும் சரிவர பயன்படுத்திக்கொள்வதில்லை. வசதி வாய்ப்புகள் அமையப்பெற்றிருந்தும் யாரும் Administration service , police department, Advocate போன்ற துறைகளில் யாரும் கவனம் செலுத்தி பணியாற்ற முற்படுவதில்லை.
நம்மை யாரும் அடையாளப்படுத்த தேவையில்லை.. நமக்கு நாமே சில காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டுமெனில் அரசாங்கம் சார்ந்த துறைகளில் நமக்கிருக்கும் இட ஒதுக்கீட்டு பணியிடங்களை நாம் நிரப்பினால் தானே நமக்கான வேலைகளை சாதமாக்கிக்கொள்ள இயலும்" என மிகத்துடிப்புடன் பேசினார் அந்த இளம் வழக்குரைஞர். அதுபோல மேலும் நம் சமூகத்தில் இருக்கும் சாதனை பெண்களை அடையாளப்படுத்தி வரும் நம் பணிக்கு மனதார வாழ்த்துகள் தெரிவித்தார். அவரது பேச்சில் சிறந்ததொரு ஈமானை காண முடிந்தது. தாம் கற்ற கல்வியை சேவை மனப்பான்மையுடன் பிறருக்காக உபயோகிக்கும் நல் உள்ளம் ஷபானா போன்றவர்கள் நம்மில் எத்தனை பேர்.
வாழ்த்துகள் திருமதி.ஷபானா அவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக