வெள்ளி, 11 டிசம்பர், 2020

டெல்லியை முற்றுகையிட படையெடுக்கும் வெளிமாநில விவசாயிகள் - எல்லைகளில் பதற்றம்

BBC : இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான குழுவுடன் விவசாயிகள் ஐந்து சுற்று பேச்சுவார்த்தையும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் எந்த பலனையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், ஐந்து சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த வேளையில், திடீரென்று மத்திய உள்துறை அமைச்சர், குறிப்பிட்ட சில விவசாயிகளை அழைத்து சட்ட திருத்தங்கள் செய்வது பற்றிய முன்மொழிவை அனுப்ப ஏன் நடவடிக்கை எடுத்தார் என்று அகில இந்திய கிசான் சபா சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் அனைவரும் போாராட்டத்தை தீவிரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக கூறியுள்ளார். நரேந்திர சிங் தோமர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது நிராகரித்த ஒரு விஷயத்தை ஏன் மீண்டும் உள்துறை அமைச்சர் எழுப்ப முற்பட்டார் என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் அமித் ஷாவும் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்தும் அம்பானி, அதானி ஆகிய கார்பரேட் நிறுவன தலைமைகளின் சார்பாக செயல்படுகிறார்கள் என்று ஹன்னன் மொல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு தொடரும் ஆதரவு

இதற்கிடையே, டிசம்பர் 12ஆம் தேதி டெல்லி - ஜெய்பூர், டெல்லி - ஆக்ரா - டெல்லி உத்தர பிரதேசம் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலைகளை கடந்து தலைநகருக்குள் நுழைந்து போராட வெளி மாநில விவசாயிகளுக்கு விவசாயிகள் சங்கங்கள் வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்தன.

மூன்று தினங்களுக்கு முன்பு விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தைச்சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினரும் டெல்லி புராரி மைதானத்துக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

"இதற்கு முன்பு இவ்வளவு பெரிய போராட்டங்களை நாங்கள் பார்த்தது இல்லை. லட்சக்கணக்கில் விவசாயிகள் இங்கே குழுமியிருக்கிறார்கள். இங்கேயே வீதியில் உறங்கி குளிரைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. இங்கேயே விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து குரல் கொடுப்போம்" என்று அய்யாக்கண்ணு பிபிசி தமிழ் செய்தியாளர் பாலசுப்ரமணியமிடம் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு,

டெல்லி சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்

முன்னதாக, கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் மகாசங்கத்தின் தலைவர் ஷிவகுமார் காக்கா, "'டிசம்பர் 12ஆம் தேதி ஆக்ரா-டெல்லி எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை விவசாயிகள் முடக்குவார்கள். அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

"இது மட்டுமின்றி வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வோம்" என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு,

டெல்லி - உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஸிபூர் எல்லை நெடுஞ்சாலை நடைபாதையில் உறங்கும் விவசாயிகள்

இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் குடும்பங்களுடன் டெல்லிக்குள் தடையை மீறி நுழைய அழைப்பு விடுப்பது பற்றி அறிவிப்போம் என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறினர்.

இந்த நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை டெல்லியை முற்றுகையிடும் நோக்குடன் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைக்கு வர புறப்பட்டிருக்கிறார்கள். டிராக்டர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் அவர்கள் புறப்பட்டுள்ளதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயணத்தின்போது, சுங்கச்சாவடிகளில் எந்த கட்டணத்தையும் செலுத்தாமல் பிரச்னை செய்யவும் அதன் பிறகு தலைநகர் நோக்கி வருவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு,

டெல்லி முற்றுகை போராட்டத்துக்காக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து டிராக்டர்களுடன் புறப்பட்டுள்ள விவசாயிகள்

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மூன்று மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் உத்தர பிரதேசம் செல்லும் காஜிபூர் நெடுஞ்சாலை, நொய்டாவை இணைக்கும் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலை, ஹரியாணாவை இணைக்கும் குருகிராம் நெடுஞ்சாலை ஆகியவற்றில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் வாகனங்கள் வருவது சிக்கலாகியுள்ளது.

அந்த எல்லைகளில் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் குவிந்து வருவதால் நிலைமை பதற்றமாக உள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தங்களின் குறைகளை முறையிடவும் வேளாண் சட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை களையவும் மத்திய அரசு காத்திருப்பதாக வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஆனால், அந்த சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதே தங்களுடைய கோரிக்கை என்றும் அதில் இருந்து பின்வாங்க முடியாது என்றும் விவசாயிகள் சங்கங்கள் உறுதியாக இருப்பதால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள் சங்கங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் பரவலாக அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக