புதன், 23 டிசம்பர், 2020

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை படுகொலை ... கொன்ற கணவன் சரவணன் மடக்கி பிடிப்பு

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை படுகொலை!  minnambalam :ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கந்தியான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (35). தனியார் வாகன ஓட்டுநரான இவர் பரமக்குடியில் வசித்து வருகிறார். இவரது மனைவி சிவபாலா (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. சிவபாலா ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சரவணன் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் சிவபாலா சரவணனிடம் விவாகரத்து கேட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணைக்காக நேற்று காலை நீதிமன்றத்தில் சிவபாலா ஆஜராகியுள்ளார். சரவணன் விசாரணைக்கு ஆஜராகாததால் ஜனவரி 5ஆம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து, தான் வேலை செய்து வந்த பள்ளிக்கு சிவபாலா நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆனால், சிவபாலாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியிலிருந்தவர்கள் தப்பியோடிய சரவணனை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸார் சரவணனை கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து சிவபாலாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளதுரை உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

சம்பவ இடத்தின் அருகிலேயே டிஐஜி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் அமைந்துள்ளன. நீதிமன்றத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சரவணனிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் உள்ளதால் பிரச்சினையைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியும் அதை ஏற்காமல் சிவபாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டு கொலை செய்ததாகக் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக