செவ்வாய், 29 டிசம்பர், 2020

இரும்புக் கடையில் பாடப்புத்தகங்கள்: கல்வித் துறை ஊழியர் கைது!

 இரும்புக் கடையில் பாடப்புத்தகங்கள்: கல்வித் துறை ஊழியர் கைது!

miinambalam :தமிழக பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்த விவகாரத்தில் பள்ளிக்கல்வி ஊழியர் மற்றும் இரும்பு கடை உரிமையாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மயிலாடுதுறை அருகே முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்குச் சொந்தமாகப் பழைய இரும்பு கடை உள்ளது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

மூட்டை மூட்டையாகப் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான குழு இரும்புக் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது.    இதில் அங்கு 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்குரிய, 6-12 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரம் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இரும்பு கடை உரிமையாளர் பெருமாள்சாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாவட்ட கல்வி இளநிலை உதவியாளர் மேகநாதன் புத்தகங்களை விற்றது தெரியவந்தது. இதனடிப்படையில், அரசு பொருட்களை முறைகேடாக விற்றது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை போலீசார் கைது செய்தனர். அதுபோன்று கடை உரிமையாளர் பெருமாள் சாமியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பழைய இரும்பு கடையில் அரசின் பாடப் புத்தகங்கள் விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக