செவ்வாய், 29 டிசம்பர், 2020

ரஜினியின் வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா!

 ரஜினியின் வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா!

Image may contain: 11 people

minnambalam :ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவர் அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.            30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென அழைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், அப்போதெல்லாம் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டை எடுக்காத ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்தார். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக அதுதொடர்பான பணிகள் நடைபெறவில்லை.    

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் கொரோனா பாதிப்பு கருதி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், மக்களுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகத் தெரிவித்தார் ரஜினி.  சமீபத்தில் சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கொரோனா தாக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாதென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த ரஜினிகாந்த், மக்கள் மன்றம் செயல்படும் எனவும் கூறினார்.

இது தமிழகம் முழுவதும் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தை முற்றுகையிட்ட அவரது ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அதற்கு ஒத்துழைக்காத ரசிகர்கள், ரஜினிகாந்த் நேரில் வந்து சொல்ல வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்று கூறி முழக்கம் எழுப்பினர்.

.

இதேபோல ரஜினியின் அரசியல் முடிவில் அதிருப்தியடைந்த திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரமசிவம் ஆண்டாள் வீதியிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ரஜினியின் பேனர்களை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் தக்கலை நீதிமன்றம் எதிரே டீக்கடை நடத்தி வரும் ரஜினி ரசிகரான நாகராஜன், இன்று கறுப்பு தினம் என வீடியோ வெளியிட்டுள்ளார். தன் கடைக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் பேனரையும் அகற்றி அங்கிருந்து தூரமாக வீசிச் சென்றார்.

எழில் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக