வெள்ளி, 4 டிசம்பர், 2020

யார் ஆட்சியில் ஊழல்? நேரில் விவாதிக்க வருமாறு முதல்வருக்கு ஆ. ராசா சவால்

BBC " 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் தி.மு.க ஊழல் செய்ததாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக விவாதத்திற்கு வரும்படி தி.மு.கவின் சார்பில் சவால் விடப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் செய்யப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வியாழக்கிழமையன்று ஆய்வுசெய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.                       அப்போது, தி.மு.க. தேவையில்லாமல் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தங்கள் மீது தெரிவிப்பதாகக் கூறினார்.          “எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். அவருக்கு அறிக்கை நாயகன் என்றே பெயர் சூட்டலாம். மக்களைப் பார்த்து மனு வாங்காமல், நான்கைந்து மாதமாக வீட்டிலேயே இருந்துகொண்டு இந்த ஆட்சியில் ஊழல் நடப்பதாக பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.

 2 ஜி ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டு பட்ஜெட் அளவுக்கு பெரிய ஊழல். 1.76 ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்த கட்சி தி.மு.க. அவர்கள் மத்திய ஆட்சியில் இடம்பெற்றபோது 1.76 ஆயிரம் கோடி ஊழல் செய்தார்கள். காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி செய்தபோது இந்த ஊழல் நடைபெற்றது. 

அப்போது காங்கிரஸ் ஆட்சியே இதில் நடவடிக்கை எடுத்தது. சிறையில் அடைத்தார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். >மேலும், “13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஜி ஸ்பெக்டரமை ஆயிரத்து ஐநூறு கோடிக்கு கொடுத்தார்கள். இப்போது நீதிமன்றத்தில் வழக்கு மேல் முறையீட்டில் இருக்கிறது. இது தவிர கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் பணம் கைமாறியது. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். அவரே மாட்டப்போகிறார்” என்று தெரிவித்தார்.

முதலமைச்சரின் பேச்சை அடுத்து, மாலையில் தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.கவில் இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்றும் அ.தி.மு.கவில்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

முதல்வரின் குற்றச்சாட்டும் ஆ. ராசாவின் பதிலும்

“எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. அந்தக் கட்சியில் ஏற்பட்ட ஒரு இடைவெளியால் பதவிக்கு வந்தவர். தி.மு.க. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனில் குறிப்பிட்டிருப்பதாக அவரும் அவரது கட்சியினரும் தொடர்ந்து சொல்கிறார்கள். 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்குமானால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2 ஜி, சர்க்காரியா ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க அவர் தயாரா? ஜெயலலிதா நீதிமன்றம் ஏன் சென்றார், தண்டனை அனுபவித்தார் என்பதை பற்றி விவாதிக்க அவர் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார் ஆ. ராசா.

இதற்குப் பிறகு, கடுமையான வார்த்தைகளில் முதல்வரைச் சாடிய ஆ. ராசா, அ.தி.மு.க. தங்கள் மீதான வழக்கை சந்திக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

“ஜெயலலிதா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டது மட்டுமல்லாமல், 100 கோடி ரூபாயை அவரது சொத்திலிருந்து வசூலிக்க வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2 ஜி வழக்கில் ஆ. ராசா மேல் முறையீட்டிற்குச் செல்லவில்லை. பல ஆண்டு காலம் நீதிமன்றத்தில் நின்று வாதிட்டேன். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எந்த அமைச்சரும் தான் செய்தது சரி என சொன்னதில்லை. ஆனால், நானே கூண்டேறி 14 நாட்கள் வாதிட்டேன்.”

“2 ஜி வழக்கில் 7 ஆண்டு காலம் காத்திருந்தேன். யாரும் சாட்சிகளை கொண்டு வரவில்லை என நீதிபதியே குறிப்பிட்டார். அந்த வழக்கு சிஏஜியையும் நீதிமன்றத்தையும் தவறாக வழி நடத்திவிட்டது. மேல் முறையீட்டிற்கு இன்னும் எண் கூட அளிக்கவில்லை. அம்மாதிரி ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு முதல்வர் பேசுகிறார்” என ஆ. ராசா குற்றம்சாட்டினார்

இந்தியாவின் டாப் 10 காவல் நிலையத்தில் சேலம் சூரமங்கம் காவல் நிலையத்துக்கு இரண்டாவது இடம்</>2020ஆம் ஆண்டில், இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்களை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதில் மணிப்பூரின் தோபல் மாவட்டத்தில் நாங்போக் செக்மாய் காவல் நிலையம் முதலிடத்தையும், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரமங்கலம் காவல் நிலையம் இரண்டாவது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

இந்த டாப் 10 காவல் நிலையங்களில், தென் இந்தியாவின் ஐந்து பெரிய மாநிலங்களில் இருந்து, இரண்டு காவல் நிலையங்கள் மட்டுமே இடம் பிடித்து இருக்கின்றன. மேலே சொன்னது போல 2-வது இடத்தில் சேலத்தின் சூராங்களமும், 10-வது இடத்தில் தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டத்தில் இருக்கும் ஜம்மிகுண்டா டவுன் காவல் நிலையமும் இடம் பிடித்து இருக்கிறது.

உத்தர பிரதேசத்தின், மொராதாபாத் கந்த் காவல் நிலையம் இந்த பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

எப்படித் தேர்வு செய்கிறார்கள்?

இந்தியாவில் மொத்தம் 16,671 காவல் நிலையங்கள் இருக்கின்றன. இதில் தரவுகள் அடிப்படையிலும், நேரடி கண்காணிப்பு மற்றும் பொது மக்களின் கருத்து போன்றவைகளின் அடிப்படையில், இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்களைப் பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

சொத்து தொடர்பான குற்றம், பெண்களுக்கு எதிரான குற்றம், பலவீனமான பெரிய பிடிப்பு இல்லாத இன மக்களுக்கு எதிராக நடந்த குற்றம், காணாமல் போனவர், கண்டு பிடிக்க முடியாத நபர்கள் வழக்குகள் மற்றும் அடையாளம் காணப்ப்டாத பிரேதங்களைக் கையாள்வது போன்றவைகள் அடிப்படையில், டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

750-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களைக் கொண்ட மாநிலங்களிலிருந்து 3 காவல் நிலையங்களும், மற்ற மாநிலங்கள் மற்றும் டெல்லியில் இருந்து தலா இரு காவல் நிலையங்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா ஒரு காவல் நிலையம் என மொத்தம் 75 காவல் நிலையங்களைத் தேர்வு செய்து இருக்கிறார்கள்.

இந்த 75-ல் டாப் 10 காவல் நிலையங்களைத் தேர்வு செய்ய, 19 அளவைகளை வைத்து, காவல் நிலையங்கள் வழங்கும் சேவையின் தரத்தை மதிப்பிட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த மதிப்பெண்களில் இந்த 19 அளவைகளுக்கு தான் 80% வெயிடேஜ் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

காவல் நிலையத்தின் கட்டமைப்பு, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிபவர்களை மக்கள் அணுகுவது, அந்த காவல் நிலையம் குறித்து மக்களின் கருத்து போன்றவைகளுக்கு மீதமுள்ள 20 சதவீத மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள்.

“இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழி அர்ச்சனை” – உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இனிவரும் காலங்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இந்த தொடர்பாக ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. கோயில் நிர்வாகம் தரப்புபில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் கோவில் குடமுழுக்கு விழாவுக்காக 25 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வழியிலும் நடத்தப்படும் என கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், “தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும் என்றால் ஓதுவார்கள் பெயர்கள் ஏன் அழைப்பிதழில் இல்லை. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இனிவரும் காலங்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடத்துவது குறித்து எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தமிழ் மொழியிலும் கண்டிப்பாக இனிவரும் காலங்கள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

“இனி இதுபோன்ற வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கலானால், கோயில் நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்” என கூறிய நீதிபதிகள் விரிவான உத்தரவிற்காக இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் நாம் தமிழர் கட்சியில் வட்டார செயலாளராக உள்ளேன். எங்கள் பகுதியில் கொங்கு மண்டலத்தின் முதல் கோயிலான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது . இந்த கோவில் 900 ஆண்டுகளுக்கு பழமையானது . இந்த கோவிலில் தமிழ் மன்னர்கள் எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த கோவிலில் வழிபட்டு வருகிறோம். இந்த கோவிலில் நானும் ஒரு பக்தன் ஆவேன் என்று கூறியிருந்தார்.

“இந்த கோயில் குடமுழுக்கு விழா நாளை (4. 12. 2020) அன்று நடக்க உள்ளது இதற்காக நாங்கள் எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயில் உதவி ஆணையரிடம், குடமுழுக்கு நடக்கும் பொழுது தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம் திருவாசகம் ஓதப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். இதற்காக எங்கள் தரப்பில் கடந்த 23. 11. 2020 அன்று உதவி ஆணையாளர் மற்றும் கோவில் தரப்பினருக்கு மனு செய்தோம். ஆனால் அவர்கள் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. இதனால் பாரம்பரியமிக்க எங்கள் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம், போன்ற வைகள் வாசிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்” என்று ரமேஷ் கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக