திங்கள், 28 டிசம்பர், 2020

ஸ்டாலின் : பாலியல் குற்றங்களுக்கு ஒரு நாள்கூட தாமதம் இல்லாமல் தீர்ப்பு .. மாவட்டங்கள் தோறும் நீதிமன்றங்கள்

மின்னம்பலம் : பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்க மாவட்டம் தோறும் தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயதே ஆன சிறுமியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழின் நான்காவது பக்கத்தில், “And, they all fall down” என்ற முழுப்பக்கக் கட்டுரை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் - அவர்களில் ஒருவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொருவர் காவல்துறை ஆய்வாளர் என்ற தகவல் ரத்தத்தை உறைய வைக்கிறது” என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.

வேலியே பயிரை மேய்வதுபோல் ஒரு காவல்துறை ஆய்வாளரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியளிப்பதோடு இந்த மாநகரத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு இனி யார்தான் பாதுகாப்பு? என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின்,

நிராயுதபாணியாக சில கயவர்களிடம் மாட்டிக்கொண்ட இந்தச் சிறுமியின் உறவினர்களோ - காவல்துறையோ, ஏன் இந்தச் சமூகமோ பாதுகாப்பு அரணாக நிற்கவில்லை என்பது நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளை, சமூகமும் தட்டிக் கேட்பதில்லை. பெற்றோரோ - பாதிக்கப்படும் குழந்தைகளோ புகார் அளிப்பதற்கும் தயக்கம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

“விரைவில் அமையும் திமுக ஆட்சியில் பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மாவட்ட ரீதியாகத் தனி நீதிமன்றம் அமைத்து ஒரு நாள் கூட தாமதமின்றித் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தைரியமாகப் புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசியப் பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும்” என வாக்குறுதி அளித்துள்ளார் ஸ்டாலின்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக