புதன், 4 நவம்பர், 2020

அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் முயற்சி; பிடென் கண்டனம்! live streaming

minnampaalm : அமெரிக்கத் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி மாலை முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடெனும் கடுமையான போட்டியில் இருக்கிறார்கள். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க நேரப்படி இரவு 2 மணிக்கு, இந்திய நேரப்படி இன்று பகல் 1 மணிக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.

“நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற தயாராகி கொண்டிருக்கிறோம். வெளிப்படையாகச் சொல்வதானால் நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் தேர்தலில் மோசடி நடக்கிறது. சட்டத்தை முறையான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்குகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”என்று அறிவித்திருக்கிறார் டிரம்ப்.

இதனால் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அமெரிக்க தேர்தல் சட்டப்படி, அனைத்து வாக்குகளையும் எண்ணப்பட வேண்டும். மேலும் பல மாநிலங்கள் வழக்கமாகவே வாக்குச்சீட்டுகளை எண்ணுவதற்கு நாட்கள் எடுக்கும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மக்கள் அஞ்சல் மூலமாகவும் நேராகவும் வாக்களித்ததால் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு அதிக வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டிரம்ப் தோல்விபயத்திலேயே இப்படி கூறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்னும் பல லட்சக்கணக்கான வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருப்பதாக பென்சில் வேனியா ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாக்கும் எண்ணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிரம்ப்புக்கு பதிலளித்துள்ள ஜோ பிடென், “வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் கூறுவது ஆபத்தான, தவறான வாதம்” என்று கூறியுள்ளார். “டிரம்ப் அவ்வாறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயன்றால் எங்களது சட்ட வல்லுநர்கள் அதைத் தடுத்து நிறுத்துவார்கள்” என்று ஜோ பிடெனின் பிரச்சாரக் குழு மேலாளர் மெல்லி டிலோன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள டிரம்ப், “வெற்றிபெறுவது எளிதானது. வெற்றிவாய்ப்பை இழப்பதுதான் கடினமானது. தேர்தல் இரவை முன்னிட்டு நான் உரையாற்ற வாய்ப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக