செவ்வாய், 17 நவம்பர், 2020

கைவிடப்படுகிறதா ராமேஸ்வரம் தீவு?

hindutamil.in :புவி வெப்பமாதல், கடல் நீர்மட்டம் உயர்தல் போன்றவை அபாயகரமான பிரச்சினைகளாக மாறி, அடுத்து வரும் தலைமுறைகளின் வாழ்தல் குறித்த கேள்விக்குறியாகி, ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கின்றன. ராமேஸ்வரம் பகுதியிலும் கடல் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வடகடல் கரைப் பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்களைக் காணவில்லை. காரணம், கடல் மட்டம் உயர்ந்து நிலத்தை விழுங்கியிருக்கிறது. தீவின் வடபகுதியெங்கும் நிலத்தடி நீர் உப்பாகி, பக்தர்களுக்கான தீர்த்தங்களும் வற்றிவிட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் நீராதாரம் முற்றிலுமாக அழிந்து, வாழ்வதற்கே தகுதியற்றதாகத் தீவு மாறிவிடுமோ என்ற ஐயம் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் காசி, ராமேஸ்வரம் எனப் புண்ணியத் தலங்களைச் சீரமைக்கிறார்களே, ராமேஸ்வரம் தீவு இனியாவது பிழைத்துவிடும் என்று நினைத்தார்கள். அந்தோ பரிதாபம், அத்தனையும் அரசியல் விளம்பரத்துக்கான நடவடிக்கைபோல் தெரிகிறது. தீவின் முக்கியத்துவமே, அங்கு இயற்கையாய் அமைந்திருந்த தீர்த்தங்களால் வந்தது. பசுமைத் தீர்த்தங்களைப் புனரமைக்கிறோம் என்று வந்தவர்கள்கூட சுற்றிக் கோட்டைச்சுவர் அமைத்து தீர்த்தங்களுக்குப் பெயர் வைப்பதில் மொழித் திணிப்பை நடத்தினார்களே அல்லாது இதயசுத்தியோடு நீராதாரங்களைக் காக்கவில்லை.அரசியல் விளையாட்டு

நாற்புறமும் கடலால் சூழ்ந்த இந்தத் தீவின் குடிநீர் ஆதாரமே, பருவமழை சார்ந்தது. இன்றும் தீவில் வாழும் பூர்வீகக் குடிகள், குடிநீருக்காகக் கிணறு வெட்டும்போது பாறைகளைக் குடைவதில்லை. பாறையைக் குடைந்தால் கடல்நீர் வந்துவிடுமென்று அவர்களுக்குத் தெரியும். மணற்குன்றுகள் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரே, குடிநீருக்கான ஆதாரம். வடபகுதி மண்வளம் முற்றிலுமாகக் கபளீகரம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், தீவின் தென்பகுதியில் இருக்கும் கடற்கரையின் மணற்குன்றுகளே மீதமிருக்கும் நம்பிக்கை. அடிமடியில் கைவைத்ததுபோல் அந்த ஆதாரத்தையும் நிர்மூலமாக்க மல்லுக்கட்டியபடி இருக்கிறார்கள் உள்ளூர் அரசியலர்கள்.

நீர் மேலாண்மைக்கு மன்னராட்சிக் காலத்தைக்கூட ஆராய வேண்டியதில்லை; அதற்குப் பின்னான வெள்ளைக்காரர்களின் நீர் மேலாண்மையே மலைக்கும்படியாய் இருக்கிறது. அக்கறையான ஆட்சியாளர்கள், பாரம்பரியமாய் வாழும் மக்களின் வாழ்வைக் கூர்ந்து நோக்கி, அவர்களின் பட்டறிவைக் கேட்டறிந்து செயல்பட்டிருக்கிறார்கள். செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களுக்கானதாக இருந்திருக்கிறது. 2019-ல் வடகிழக்குப் பருவமழை காலத்தில், ராமேஸ்வரம் தீவு வெள்ளக்காடாய் மாறியிருந்தது. கொட்டித் தீர்த்த மழையில், வெள்ளம் வடியாமல் பாம்பன், தங்கச்சிமடம், சின்னப்பாலம், தெக்குவாடி, தோப்புக்காடு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. காரணம், ஆங்கிலேயர் காலத்தில் தீவின் தென்கடல் பகுதியை நோக்கிப் பாம்பனிலிருந்து கிழக்குப் பகுதியான ஓலைக்குடா வரை அமைக்கப்பட்டிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட கழுங்குகள் என்ற வடிகால் அமைப்புகள். ஆனால், அனைத்தும் பல பத்தாண்டுகளாய்த் தூர்ந்துபோய்க் கிடந்திருக்கின்றன. வடகடல் பகுதியில் கழுங்குகள் என்ற வடிகால் அமைப்புக்கான தேவை இல்லை. காரணம், அரியாங்குண்டு மற்றும் பிள்ளைக்குளத்துக்கும் இடையிலான பஞ்சகல்யாணி ஆற்றுப்போக்கு, அதையும் இன்று காண முடியவில்லை. எங்கும் இறால் பண்ணைகளின் ஆக்கிரமிப்பு.

எங்கும் இறால் பண்ணைகள்

கடல் அரிப்பில் கடற்கரைப் பட்டா நிலங்களே கடலுக்குள் மூழ்கிய நிலையில், இறால் பண்ணைகள் அமைந்திருக்கும் இடங்களோ, அத்தனையும் அரசின் புறம்போக்கு நிலத்தில்! கேட்க நாதியில்லாத காரணத்தால், கடலுக்குள்ளும் தோண்டி அமைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொரு நாளும் வெளியேற்றும் கழிவுநீரால் அந்தப் பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டதோடு, கரைக்கடல் மீன்பிடிப்பும் பாசி வளர்ப்பு விவசாயமும் அழிந்தே விட்டன.

தென்பகுதியில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டம் பாரம்பரியமான கரைக்கடல் மீனவரின் வாழ்வாதாரமாக விளங்கியது. இன்றைய நிலையில், அவை பயன்பாடற்றுப் போனதோடு மட்டுமல்லாமல், பிராந்தியக் கொள்ளையர்களின் மேய்ச்சல் பகுதியாகவும், நிர்வாகம்சார் பிராந்திய அலுவலர்களின் உறவுக் கூட்டத்தின் உல்லாசபுரியாகவும் மாறியிருக்கிறது. வனத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காலத்தில், கரைக்கடல் பகுதியில் இருக்கும் இந்தத் தீவு, இந்தப் பகுதி மீனவர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. செழுமையான இந்தத் தீவுகளில் குடும்பத்தோடு தங்கித் தொழில்புரிந்தார்கள். இன்றோ, கரைக்கடல் மற்றும் அண்மைக் கடல் மீனவர்கள், புயல் மழைக் காலங்களில்கூட இயற்கை அரணாய் அமைந்திருக்கும் தீவுகள் அருகே நெருங்க முடிவதில்லை. இயற்கையை மீறிய கட்டுமானங்களால், வழக்கமாய் வந்து முட்டையிடும் ஆமைக் கூட்டம்கூட இப்போது வருவதில்லை. கவனிப்பாரில்லாமல், நீராதாரங்கள் வறண்டு, பாலை நிலம்போல் காட்சியளிக்கின்றன தீவுகள். நடைமுறைக்கு ஒவ்வாத வறட்டுச் சட்டங்களால் ஏற்பட்ட விளைவு இது.

ராமேஸ்வரம் தீவுக்குள்ளும் தொடர்ச்சியான தனியாரின் நேரடி நிலத்தடி நீர்க் கொள்ளை ஒருபுறமென்றால், மறுபுறம் சத்தமில்லாமல் ஐஸ்கட்டிகளைத் தீவுப் பகுதியிலிருந்து தங்களின் மற்ற பகுதிப் பதப்படுத்தல் தேவைக்காகக் கொண்டுபோகும் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள். சுற்றிக் கடல் சூழ்ந்த இந்தத் தீவுப் பகுதியின் நிலத்தடி நீரை நுகர்வுச் சிந்தனையோடு உறிஞ்சுகிறோமே என்பது அன்றாடம் மெய்யம்புளிப் பகுதியில் ராட்சதக் குழாய்கள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சும் அரசின் ரயில்வே துறைக்கே தெரியாதது பதற்றப்பட வைக்கும் உண்மை.

அரசு செய்ய வேண்டியவை

பாரம்பரியமான இந்தத் தீவு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அரசு துரிதகதியில் இயங்கி தீவின் பாதுகாப்பையும் அதன் இயற்கையான வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். இருகடல் தொழில் நடக்கும் தீவில், குறைந்தபட்சம் வடகடல் பகுதியிலாவது இழுவைமடி மீன் பிடித்தல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டு கரைக்கடல் வளம் பெருகச் செய்ய வேண்டும். குடிநீர்க் கொள்ளையும், அந்தக் குடிநீருக்கே ஆதாரமான மணல் கொள்ளையும் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். புதிய ஐஸ் உற்பத்தி ஆலைகளுக்குத் தடை விதித்து, தீவுப் பகுதியின் நீர்வளம் தீவுக்கானதாக மட்டுமே இருக்க வழிவகுக்க வேண்டும். புற்றீசல்போல் பெருகும் இறால் பண்ணைகளும், தனியார் தங்கும் விடுதிக் கட்டுமானங்களும் முறைப்படுத்தப்பட்டுப் புதிய முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும்.

சவாலாக, வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தென்பகுதி தீவுக் கூட்டத்தின் ஒருசில தீவுகளைத் தேர்ந்தெடுத்து, அதைப் பாரம்பரியக் கரைக்கடல் மீனவர்களின் கூட்டுறவுச் சங்கங்களுக்குக் குத்தகைக்கு விட்டு கடல் அட்டை, கழி நண்டு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை வளர்த்தல், மீன், சிப்பி, சங்கு, பாசி வளர்த்தல் போன்ற வாழ்வாதாரம் பேணலாம்.

பாரம்பரியக் குடிகளின் அனுபவ அறிவைப் பெறாமல் தீவுக்குள் செயல்படுத்தப்பட்ட கரைக் கட்டுமானத் திட்டங்களால், கடலரிப்பு அதிகமாகி மக்களின் வாழ்விடங்கள் கடலுள் அமிழ்ந்து கட்டுமானங்களும் பயனற்றதாகியிருக்கின்றன. மீனவர்களுக்கான கரைக் கட்டுமானங்கள், மீன் இறங்கு தளங்கள், தடுப்புச் சுவர்கள் போன்ற எந்தத் திட்டமானாலும் அவை கடலின், காற்றின் தன்மை அறிந்த பிராந்திய மீனவர்களின் அனுபவ அறிவின் துணையோடு மட்டுமே தீவுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

- ஆர்.என். ஜோ டி குரூஸ், ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக