வெள்ளி, 13 நவம்பர், 2020

உதயநிதி போட்டியிடும் தொகுதி... சேப்பாக்கம்?

minnampalam : சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தலுக்குப் பிறகு உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அவர் சென்னை மேயருக்குப் போட்டியிட வேண்டும் என்றெல்லாம் திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிடப் போகிறார் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதாக வந்த தகவல் காரணமாகத்தான் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவுக்குச் சென்றதாகவும் சொல்லப்பட்டது.

உதயநிதி போட்டி தொடர்பாக பிகே ஆலோசனை - ஓகே சொன்ன ஸ்டாலின் - எதிர்க்கும் உதயநிதி என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில், “தனது தாத்தா கலைஞர் போட்டியிட்டு வென்ற சென்னை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி நிற்பதற்கான பூர்வாங்க வேலைகளை அவரது தரப்பினர் தொடங்கிவிட்டனர்” என்று சொல்லியிருந்தோம்.

இந்த நிலையில் நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல்லில் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “மறைந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளது. அவரது குடும்பத்தினரிடம் உரியதை பெற்றுக்கொண்டு உடலை ஒப்படைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் தேர்தலில் நிற்பாரா என முதல்வர் சந்தேகம் எழுப்பியுள்ளார். முதலில் அவர் தேர்தல் களத்துக்கு வருவாரா என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடும் தொகுதி என்ன என்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக