ஞாயிறு, 1 நவம்பர், 2020

காதலரைதான் கரம் பிடிப்பேன்’ - தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்

maalaimalar.com : மஞ்சூர் அருகே நடந்த திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மிகவும் எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்ததுடன் கழுத்தில் மாலையுடனும், மணமகள் பட்டுச்சேலை அணிந்து கொண்டு மாலையுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். திருமண விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

மணமக்களின் குல வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று மணமகன் மணப்பெண்ணிடம் 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.

அதன்படி மணமகளிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று மணமகன் கேட்டார். அவர் 2 முறை கேட்டபோதும் மணமகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அப்போது சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக கொஞ்சம் சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டபடி மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.

உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். அத்துடன் தாலி கட்ட விடாமல் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.

அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவர் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.

உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்க முயன்றனர். அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோர், மணமேடையில் அமர்ந்து மணமகனை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் கரம் பிடிப்பேன் என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.

அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார்.

தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றுக்கூறி மணமகள் மணமேடையில் இருந்து எழும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக