சனி, 28 நவம்பர், 2020

சந்தைக்கு வர தயாராகும் கொரோனா தடுப்பூசிகள் -ஒரு பார்வை

maalaimalar.com :சென்னை:உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இதில் சில முக்கிய நிறுவனங்களின் மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன. சில மருந்துகளின் செயல்திறன் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி உள்ளது. இதனை விரைவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் என்ற அளவில் இந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் மேலும் சில மருந்துகளும் செயல் திறனை நிரூபித்துள்ளன. இந்த நிறுவனங்களின் மருந்துகளை பெறுவதற்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளன.இவ்வாறு விரைவில் சந்தைக்கு வருவதற்கு தயாராக உள்ள சில நிறுவனங்களின் மருந்துகள் குறித்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம். ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா:வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியானது, 62 முதல் 90 சதவீதம் வரை நோய்த்தடுப்பு திறன் கொண்டது என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. இந்த மருந்தை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பயன்படுத்த முடியும். எனவே, இந்த மருந்து சந்தைக்கு வரும்பட்சத்தில் கையாள்வது எளிதாக இருக்கும்.




மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 2 டோஸ் அளவு கொடுத்து பரிசோதனை செய்ததில், 95 சதவீதம் பலன் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து ஆர்என்ஏ (மரபணு குறியீட்டின் ஒரு பகுதி) தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பாதுகாப்பது சற்று கடினம். மிகவும் உறைநிலையில் வைக்க வேண்டும். அதாவது மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும். உற்பத்தி செய்த 6 மாதங்களுக்குள் மருந்தை பயன்படுத்த வேண்டும்.

பைசர்-பயோன்டெக்:

பைசர் பயோன்டெக் நிறுவனமும் ஆர்என்ஏ தொழில்நுட்ப அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த மருந்தின் செயல்திறன் 95 சதவீதம் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற உறைநிலையில் வைத்து மருந்தை பாதுகாக்க வேண்டும்.

காமலேயா (ஸ்புட்னிக்-வி):

ரஷியாவின் காமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் 2 டோஸ் அளவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததில், 92 சதவீதம் செயல்திறன் கொண்டது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து எளிதில் பாதுகாக்க முடியும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக