சனி, 28 நவம்பர், 2020

கோவையில் வழிப்பறி கொள்கையர்களால் இளைஞர் விக்னேஷ் கொலை

hindutamil.in :  கோவை கள்ளிமடை, கற்பகம் கார்டன் அருகே காவல்துறையினரின் வாகனச் சோதனையைப் பார்வையிடும், துணை ஆணையர் ஸ்டாலின்.கோவையில் வழிப்பறிக் கொள்ளையர்களால் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாநகரில் 42 புதிய இடங்களில், வாகனத் தணிக்கையைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை விமான நிலையம் அருகேயுள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 26-ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில், விமான நிலைய சாலையில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ் காலனிக்குச் செல்லும்போது, வழிப்பறிக் கொள்ளையர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல்துறையினர், கொலை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல் இரவு நேரத்தில், நடு அரசூர் அருகேயுள்ள, சடையன் தோட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ்செல்வன் (20) பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றபோது, செல்போன் பறிக்க வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளனர். இவர்களுக்கு விக்னேஷ் கொலைச் சம்பவத்தில் தொடர்புள்ளதா என, தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தவிர, சந்தேகத்துக்குரிய சிலரைப் பிடித்தும் விசாரித்து வருகின்றனர்.

வாகனச் சோதனை

இந்நிலையில் மாநகரக் காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் இன்று (28-ம் தேதி) ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ''மாநகரக் காவல்துறையின் கிழக்கு உட்கோட்டத்தில் சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி மற்றும் தெற்கு உட்கோட்டத்தில் ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர் காவல் நிலையங்கள் உள்ளன. இந்த உட்கோட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இப்புதிய குடியிருப்புப் பகுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படும் எல்லைப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள பிரதானச் சாலைகளை விட, உட்புறத்தில் உள்ள முக்கியமான 42 இடங்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. 21 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு, இந்த 42 இடங்களில் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரங்கள், வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. தவிர, சிறப்பு வாகனத் தணிக்கை, மேற்கண்ட உட்கோட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுதல் போன்றவையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் தப்புவதைத் தடுக்க, இரு சக்கர வாகனங்களில் பிடிபடும் இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது'' என்றார்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இளைஞர் விக்னேஷ் கொல்லப்பட்ட சம்பவத்துக்குச் சிறிது நேரத்துக்கு முன்னர், அந்த வழியாகக் காரில் சென்ற கைலாஷ் என்பவர், பிருந்தாவன் நகர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்கள் இருப்பதாகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்குட்பட்ட மேற்கண்ட பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ, காவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் செல்லாமல் தாமதமாகச் சென்றதால், சம்பந்தப்பட்ட சிறப்பு எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்துத் துணை ஆணையர் ஸ்டாலின் கூறும்போது, ''சம்பவம் நடந்த இடத்துக்கு ரோந்துக் காவலர்கள் சில நிமிடங்களில் சென்று விட்டனர். முன்னரே, முறையாக அங்கு ஏன் ரோந்து செல்லவில்லை என விளக்கம் கேட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ரோந்து பேட்ரலில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக