வியாழன், 5 நவம்பர், 2020

திருமாவளவன் கைவைத்தது, சிலந்தி வலை அல்ல, உயிர்ப்பும், எதிர்வினையும் நிறைந்த தேன்கூடு.

A
rivazhagan Kaivalyam
: · மாயாவதி, இந்தியாவின் முதல் தலித் பிரதமர் ஆகப்போகிற அரசியல்வாதியாக அறியப்பட்டவர், பிறகு அடிப்படைவாத இந்துத்துவதோடு ஒருகட்டத்தில் சமரசம் செய்து கொண்டார், அவருடைய அரசியல் கட்சியில் உயர் சாதி இந்துக்களுக்கு ஒரு சிறப்பு "பெர்த்" உருவாக்கினார். தலித்துகளுக்கு பாதகம் நிகழ்ந்தாலும் கூட தனது உயர் சாதிக் கூட்டாளிகளுக்கு பங்கம் வராமல் காத்தார், உயர் சாதி வாக்கு வங்கியைக் குறிவைத்து அவர் நடத்திய அந்த சதுரங்கத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை, கடைசியில் இரண்டு பக்கமும் வாக்குகளை இழந்து பரிதாபமான ஒரு இடத்தில் வந்து நின்றார். ராம்விலாஸ் பாஸ்வான் ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்த ரீதியான தலைவர்களில் மிக முக்கியமானவராக அறியப்பட்டார், அடிப்படை இந்துத்துவ ஆற்றல்களுக்கு எதிரான போரில் முக்கியமான தளகர்த்தராக இருந்தவர், காலம், அதே வலது சித்தாந்த அரசியலுக்குள் அவரை மூழ்கடித்தது, பிறகு மந்தமான ஒரு பொருந்தாத அடையாளத்தோடு இறந்து போனார்.
தமிழகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர்களின் முழுமுதற் போராளியாக அறியப்பட்டவர், அவருடைய அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைப் படைத்தவர், பிறகு என்ன காரணங்களுக்காகவோ, அடிப்படை இந்துத்துவ குட்டையில் விழுந்து புரண்டபடி சுருங்கிப் போனார், இனி ஒருபோதும், முற்போக்கு ஆற்றல்களோடு பயணிக்க இயலாத அளவுக்கு அவர் மீது இந்துத்துவ சாயம், அவருடைய விருப்புடனேயே பூசப்பட்டு விட்டது.
 
ஆனால், அண்ணன் திருமாவளவன் மீது வலதுசாரிகள் எப்போதும் ஒரு குறி வைத்திருந்தார்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை, அவரது பாதையை நாக்பூர் நோக்கித் திருப்பிவிட்டால், ஏறத்தாழ முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றிய மாதிரி என்றொரு கணக்குப் போட்டு அவருக்கு பல்வேறு அழுத்தங்களும், தொல்லைகளும் கொடுக்கப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளில் அவருடைய இறுக்கமான வலதுசாரிகளுக்கு எதிரான பயணம் திசை மாறவே இல்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எளிதாக அதிமுகவின் முதுகில் ஏறி சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்கிற கணக்கை வலுவாக்க வேண்டுமென்றால், அவர்கள் திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றியாக வேண்டும்.
இல்லையென்றால், திமுகவின் தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி உருவாகும் போது, அதை சித்தாந்த ரீதியாக ஒருங்கிணைக்கக் கூடிய மிகப்பெரிய ஆற்றலாக திருமாவளவன் இருப்பார் என்பது கடந்த கால தேர்தல்களில் வலதுசாரிகள் படித்தறிந்த பாடம்.
நாக்பூர் தரப்பில் இருந்து தமிழக பாரதீய ஜனதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய "டாஸ்க்" திருமாவளவனைத் தனிமைப்படுத்துவது, அதற்காக புதிதாக உள்ளே நுழைந்த குஷ்பூ போன்ற "டபரா செட்" அரசியல்வாதிகளை வைத்து பழைய வீடியோ ஒன்றைக் கையிலெடுத்தார்கள், ஆனால், பரிதாபமாக, அது பூமராங் ஆகியதுதான் "ட்விஸ்ட்".
பொதுத் தளங்களில் இருந்தும், முற்போக்கு ஆற்றல்களிடம் இருந்தும் இன்னும் தீவிரமான ஒரு ஆதரவுப் போக்கு நிலவியதை பார்த்து, அதிமுக அரசு கொஞ்சம் பின்வாங்கியது, வழக்கத்துக்கு மாறாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி கண்டனம் தெரிவித்தார்.
பூச்சாண்டி காட்டுகிற தலைவர்களுக்கு மத்தியில், கொள்கைகளை விடாமல் பிடித்தபடி, எளிய மக்களோடு அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து, அரசியல் நாகரீகத்தோடும், அஞ்சாத தீரத்தோடும் நிற்கிற ஒரு தலைவரை எதிர்த்து பாரதீய ஜனதாவின் புது "டபரா செட்டு" வரவுகள் விளம்பரம் தேடித் கொண்டதைத் தவிர வேறு இந்தப் பலனும் இல்லாமல் போராட்டம் பிசுபிசுத்துப் போனதைக் கண்டு தமிழக "அப்பிரண்டிஸ்"களுக்கு நாக்பூர் தனியாக கவனிப்பு செய்ய வாய்ப்பிருக்கிறது.
திருமாவளவன் ஒரு தனி மனிதரோ, வெறும் அரசியல் கட்சித் தலைவரோ அல்ல, தென்னிந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் அறிவுத் திறப்பு, பெருங்கோபமும், போராட்டகுணமும் நிறைந்த கூரிய அறிவாயுதம் கொண்ட தென்னிந்தியர்களின் அடையாளம், நீங்கள் கைவைத்தது, சிலந்தி வலை அல்ல, உயிர்ப்பும், எதிர்வினையும் நிறைந்த தேன்கூடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக