செவ்வாய், 24 நவம்பர், 2020

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழ் மண்ணில் ஆட்சி செய்த அரசர்களின் நீதி நூல் வைத்யநாத தீக்ஷிதீயம்

 

Dhinakaran Chelliah : · ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு தமிழ் மண்ணில் ஆட்சி செய்த அரசர்களின் நீதி நூல் வைத்யநாத தீக்ஷிதீயம் எனும் “ஸ்ம்ருதி முக்தாபலம்” இந்த நூல் ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பு வரையிலும், ஆங்கிலேயர்களிடம் கப்பம் கட்டிய குறுநில மன்னர்களின் ஆட்சியின் போதும் குறிப்பாக தமிழக நிலப் பரப்பில் ஆட்சி செய்த அரசர்களால் நீதி நூலாக பயன்பட்டு வந்தது. இது அப்போதைய ஆட்சியாளர்களால் சொத்து தகராறு, பாகப் பிரிவினை, வியவகாரம், சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களாக இருந்துள்ளது. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த 500 க்கும் மேற்பட்ட

அரசர்கள், குறுநில மன்னர்கள், ஆட்சியாளர்கள்
நீதி வழங்குவதற்காக இரண்டு வழி முறைகளைப் பின்பற்றினர். ஒன்று ஜீமூதவாகனர் வலியுறுத்திய தாயபாக வழி. இன்னொன்று விஞ்ஞானேஸ்வர்யர் வலியுறுத்திய மிதாக்ஷர வழி.இந்த இரண்டு வழிகளிலும் 20 தர்ம சாஸ்திர நூல்களில் சிலவும் புராண நூல்களில் சிலவும் வசதிக் கேற்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டுள்ளன. இந்த இரண்டு வழிகளில் மிதாக்ஷர வழியே சிறந்த தென்று அறிஞர்கள் கருத்து என வைதிக நூல்கள் கூறுகின்றன.
மிதாக்ஷர வழியை பின்பற்றி தொகுக்கப் பட்ட நூல்களில் ஒன்றுதான் ஸ்ம்ருதி முக்தாபலம்.
இந்த நூல் வைத்யநாத தீக்ஷிதீயம் என்ற பெயருடன் தமிழ் நிலப் பகுதிகளில் ஆணை நிபந்த நூலாக ஆட்சியாளர்களால் பின்பற்றப் பட்டது. இந்த நூலைத் தொகுத்து எழுதியவர் 300 வருடங்களுக்கு முன்பு தஞ்சை நன்னிலம்
பகுதியில் பிறந்தவரான ஶ்ரீ வைத்யநாத தீக்ஷிதர்.
இந்த நூல் வர்ணாச்ரம தர்மம், ஆந்ஹிகம்,ஆசௌசம்,சிரார்த்தம்,திதிநிர்ணயம்,
ப்ராயச்சித்தம் என ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது.
2010 ல் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபையால் வெளியிட்பட்ட நூலில் உள்ள ஒரு சில விடயங்களை காணொளியில் தந்துள்ளேன். இதே நூல் 1953 லும் இதே சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூலில் அநேகமான தர்ம சாஸ்திர நூல்களிலும், சில புராண நூல்களில் உள்ள வர்ணாஸ்ரம விசயங்களும், சிரார்த்தம்,திதி,தர்ப்பணம்,தீட்டு,தோஷம்,ப்ராயச்சித்த விசயங்களும் கூறப்பட்டுள்ளன.
இந்த ஒரு நூல் (ஒவ்வொரு காண்டமும் கிட்டத்தட்ட 800 பக்கங்களைக் கொண்டது) படித்தாலே இன்று சமூகத்தில் நிலவி வரும் வர்ணாஸ்ரம சாதி பிரிவினை பற்றியும் பெண் எப்படி அடிமைப் படுத்தப் பட்டாள் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.
இந்த நூலில் உள்ள 6 காண்டங்களின்
ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள வர்ணாஸ்ரம விசயங்களை எழுத ஆரம்பித்தால் வருடக் கணக்கில் முகநூலில் எழுதிக் கொண்டிருக்கலாம். அந்த அளவிற்கு வைதிய சனாதன ஆதிக்க விசயங்கள் இந்த நூலில்
உள்ளன.
மநு தர்ம சாஸ்திர நூலில் உள்ளவற்றுடன் வியாஸர், யாக்ஞவல்கியர்,ஆபஸ்தம்பர்,
ஹாரிதர்,போதாயணர்,கௌதமர் என பல தர்ம சாஸ்திர நூல்களில் உள்ளவைகளும் கூர்ம புராணம் போன்ற புராண நூல்களில் உள்ள கருத்துக்களும் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இந்த ஒரு நூலைப் படித்தால் வைதிக சனாதனத்தில் உள்ள மொத்தமான தீய கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம்.
பெரு வெள்ளத்தில் ஒரு துளி போல இந்த நூலில் உள்ள ‘தர்ம தேசங்கள்’ எனும்
சிறு பகுதியை காணொளி வாயிலாக விளக்க முயற்சித்திருக்கிறேன்.
மநுதர்ம சாஸ்திரம் போன்றே நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது. மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக