இதனிடையே பிறமாநில மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்று இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு மற்றும் கேரள மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 2 தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த மாணவி நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 52 ஆவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.
இந்நிலையில் மாணவியின் தந்தை ரவிச்சந்திரன் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், நாங்கள் முறைகேடு எதுவும் செய்யவில்லை. நாமக்கலில் 130 ஆண்டு காலமாக எங்கள் குடும்பம் வசித்து வருகிறது. கேரளாவில் வெளி மாநிலத்தவர் பிரிவில், விண்ணப்பித்து இருந்தோம். நாமக்கல் மாவட்ட வசிப்பிட முகவரியைத் தான் கேரளாவில் வழங்கினோம். அதற்கான ஆவணங்கள் உள்ளது. ஆனால் என் மகள் நல்ல மதிப்பெண் எடுத்த காரணத்தினால் அகில இந்தியக் கோட்டாவில் புதுவை ஜிப்மர் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே மாநில கலந்தாய்வு எதிலும் பங்கேற்கப் போவதில்லை. இது போன்ற செய்திகளால் மன உளைச்சலில் உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "ஒரு மாணவர் இரண்டு மாநிலங்களில் விண்ணப்பிப்பதில் தவறில்லை. இரண்டு மாநிலங்களிலும் அந்தந்த மாநில இருப்பிடச் சான்றிதழ் வழங்கினால் தான் தவறு" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020-21 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டுப் பட்டியலில் முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி கேரள மாநில மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 5ஆம் இடத்திலும் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள் தெலங்கானா தரவரிசை பட்டியலிலும் உள்ளன.
எனவே நடப்பு கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் வேறு மாநிலங்களில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தவர்களை நீக்கம் செய்வதோடு, அவர்கள் எப்படி தமிழக தரவரிசைப் பட்டியலில் நுழைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக