ஞாயிறு, 1 நவம்பர், 2020

தமிழக மாணவர்களுக்கே மருத்துவ இடங்கள்: ஸ்டாலின் உறுதி!

தமிழக மாணவர்களுக்கே மருத்துவ இடங்கள்: ஸ்டாலின் உறுதி!

மின்னம்பலம் : மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டுப் பலன் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனைக் குறிப்பிட்டு இன்று (நவம்பர் 1) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “உள்இடஒதுக்கீடு செய்து கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் - மத்திய பா.ஜ.க. அரசு போட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கி அரசு மருத்துவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க இதுவரை அ.தி.மு.க. அரசு முன்வராதது – இந்த அரசு ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு உரிமையையும் எப்படி மத்திய பா.ஜ.க. அரசின் மிரட்டலுக்குப் பயந்து பறிகொடுத்து வருகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது” என்று சாடினார். 100 விழுக்காடு இடங்களுக்குமே நீட் தேர்வின் அடிப்படையில், மத்திய மருத்துவ சேவைகள் இயக்குநரகம் (DGHS) மூலமாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கவுன்சிலிங் அறிவித்து - அதற்கான முடிவுகளைக் கடந்த 13.10.2020 அன்றே வெளியிட்டும் விட்டதாகச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,

“ஆனாலும் இதுபற்றி அ.தி.மு.க. அரசு வாய் திறக்காமல் மவுனியாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக அரசு மருத்துவர்களுக்கு, முன்னர் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் இடங்கள் 50 விழுக்காடு வழங்கும் வாய்ப்பை முதல்வரும், அமைச்சர் விஜயபாஸ்கரும் கோட்டை விட்டு – தங்களின் மீதான ஊழலுக்குப் பயந்து அஞ்சி நடுங்கிப் போயிருக்கிறார்கள்” என்றார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அகில இந்தியத் தொகுப்பு முறையை மருத்துவப் படிப்புகளில் ரத்து செய்து, தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும், தமிழக மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக வழி வகை செய்யப்படும். ஆனால், தற்போது இழந்த மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு உள்ஒதுக்கீடு உரிமையை எடப்பாடி மீட்டெடுக்காமல் மத்திய அரசுடன் இணக்கமாகப் பயந்து செல்வதேன் என்ற கேள்வியையும் ஸ்டாலின் முன்வைத்தார்.

மேலும், “அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி மீண்டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது சமூகநீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி. அந்த நிலைப்பாட்டை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக