ஞாயிறு, 22 நவம்பர், 2020

அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம்: தேதி குறித்த ராமதாஸ்

அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம்: தேதி குறித்த ராமதாஸ்

மின்னம்பலம்: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்துகிறது பாமக.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்படவிருக்கும் போராட்டத்தை எந்த வடிவத்தில் நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் இன்று (நவம்பர் 22) இணைய வழியில் நடந்தது.பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் முன்னிலையில் நடந்த இந்த பொதுக் குழுவில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதில், தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி திசம்பர் 1ஆம் தேதி முதல் 31 வரை முதற்கட்ட தொடர் போராட்டம், ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை சிறப்பாக நடத்த மாநில மற்றும் மாவட்ட அளவில் போராட்டக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மாநிலம் தழுவிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக ஜி.கே.மணி, பு.தா. அருள்மொழி, பேராசிரியர் தீரன், பேராசிரியர் கோ.தன்ராஜ், ஏ.கே. மூர்த்தி, திரு. இர. அருள், ஜி. செல்லப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அப்போது, உரையாற்றிய ராமதாஸ், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர். இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சியினரும் நம்மை ஏமாற்றினார்கள். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அதன்பின் பலமுறை கடிதம் எழுதினோம். ஆனால், எனக்கு எந்த பதிலும் வரவில்லை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் நமது கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள்” என்று கூறினார்.

குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது போன்று, குஜ்ஜார் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியது போன்று நமது போராட்டமும் மிக கடுமையாக இருக்கும் என்ற ராமதாஸ், ”நாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்று கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம். பிற கட்சிகளில் உள்ள வன்னியர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் போராடி பெற்று தர இருக்கும் இடஒதுக்கீட்டால் உங்கள் குழந்தைகளும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பயனடைவார்கள்” என்றார்.

ஆட்சியாளர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் என்றவர், “நீங்கள் கேட்பீர்களோ அல்லது கேட்க மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு எங்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தாழ்மையுடன் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்குங்கள். கலைஞர் எங்களுக்கு அழுகிய கனியை கொடுத்தார். நீங்கள் நல்ல சேலத்து மாங்கனியை கொடுங்கள் என்று கேட்கிறோம்.

தமிழக முதலமைச்சராகிய நீங்கள் முதலில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தாருங்கள். மீதமுள்ளதை நாங்கள் பிறகு பார்த்துகொள்கிறோம். வன்னியர் சமுதாயத்தின் போராட்டத்தை, நாங்கள் கேட்கும் இடஒதுக்கீட்டைக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வருவது முதல்வராகிய உங்கள் கைகளில் தான் உள்ளது” என்று வலியுறுத்தினார்.

அரசுக்கு எதிராக ராமதாஸ் போராட்டம் அறிவித்த நிலையில், நேற்று நடந்த அமித் ஷா நிகழ்ச்சியில் பாமகவின் சார்பில் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக