ஞாயிறு, 22 நவம்பர், 2020

117 இடங்களில்தான் அதிமுக போட்டியிட வேண்டும் என நெருக்கடி தருகிறது பாஜக- கொங்கு ஈஸ்வரன் தகவல்

Mathivanan Maran -  /tamil.oneindia.com :சென்னை: அதிமுகவை உறவாடி கெடுத்து திமுகவை எதிர்ப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றும் 117 தொகுதிகளில்தான் அதிமுக போட்டியிட வேண்டும் என்று பாஜக நெருக்கடி தருவதாகவும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியினுடைய வேல் யாத்திரையாக இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடைய தமிழக பயணமாக இருந்தாலும் அவை அனைத்தும் தமிழகத்தில் அதிமுகவின் இடத்தை பிடிப்பதற்காகவே முன்னெடுக்கப்படுவதாக உணர முடிகிறது. எம்ஜிஆரின் தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்கான காய் நகர்த்தலை சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை வைத்து பிரதமர் மோடி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். ஓபிஎஸ் அவர்களை அதிமுகவுக்கு எதிராக திரும்பியதும், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சசிகலாவுக்கு எதிராக திரும்பியதும், பின்பு இபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் இணைத்ததும், இப்போது இரண்டு பேருக்கு இடையிலும் பகையை அதிகரிப்பதும் பாஜகவினுடைய வேலைகள் தான். குருமூர்த்தி போன்றவர்களை அதிமுக தலைவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று கொச்சைப்படுத்தி பேச வைப்பதும் பாஜக தான்.
திட்டமிட்ட வேல் யாத்திரை வேல் யாத்திரையை அறிவித்து அதிமுக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி தொடர்ந்து வேல் யாத்திரை நடந்தே தீரும் என்று சூளுரைத்து நடத்தி கொண்டிருப்பதும் அதிமுகவை நீர்த்துப்போக செய்ய தான். அதிமுக அரசின் ஜனநாயக உரிமைகளை கூட ஆளுநரை வைத்து தடைகளை போட்டு மறுக்கிறார்கள்.

அண்ணா பல்கலை. சூரப்பா சூரப்பாவை அண்ணா பல்கலை கழகத்திற்கு துணைவேந்தராக்கி அதன் மூலமாக தமிழக அதிமுக அரசை அடிமை அரசு போல மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு டெல்லிக்கு அழைத்து டிடிவி.தினகரனோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்ற செய்தியையும் கசிய விடுகிறார்கள். பல மாநிலங்களில் மாநிலத்தில் கோலோச்சித்து கொண்டிருந்த மாநில கட்சி ஒன்றை அழித்து பாஜக அரசியல் ரீதியாக ஆதாயம் பெற்ற முன்னுதாரணங்களும் உண்டு

கூட்டணியை அறிவிக்க நிர்பந்தம் அதைப்போல தான் தமிழகத்திலும் எதிர்த்து ஒரு இயக்கத்தை அழிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு உறவாடி கெடுக்கின்ற வேலையை ஜெயலலிதா அவர்கள் இறந்த போதே ஆரம்பித்து விட்டார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடைய தமிழக பயணத்தில் அரசு நிகழ்ச்சியில் கூட்டணி அறிவிப்பை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் மேடையிலே அறிவிக்க வேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

117-ல் அதிமுக போட்டி வரும் சட்டமன்ற தேர்தலில் 50 சதவீத தொகுதிகளில் அதிமுகவும், மீதி 50 சதவீத தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அதன் மூலம் 117 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமென்று பாஜகவின் ஆசையை செயல்படுத்தி இருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கின்ற முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டிருப்பதாக புரிகிறது.

2026யில் பாஜகவை தமிழகத்தில் ஆளும் கட்சியாக அரியணை ஏற்றுவதற்கான இலட்சிய பாதையில் பாஜக பயணிக்க விதைகளை விதைப்பதாக தெரிகிறது. பாஜகவின் நோக்கமே தமிழகத்தில் திமுக பாஜக என்ற இருமுனை போட்டியை உருவாக்குவதுதான். அதனால் அவர்களுடைய நோக்கம் அதிமுகவை அழிப்பது தானே தவிர திமுகவை அல்ல. அதிமுகவை உறவாடி கெடுத்து திமுகவை எதிர்ப்பதுதான் உள்நோக்கம். திமுக யாராக இருந்தாலும் முழுமையாக எதிர்க்க போகிறது. அதிமுக தன்நிலையை தக்க வைத்துக்கொள்ள ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக