அவர் மீது அப்படி ஓர் இசைத் தீண்டாமை கடை பிடிக்கப்பட்டது.
தேவா பற்றி மறந்தும் எவரும் எந்த மேடையிலும் சிலாகித்து பேசியது கிடையாது.எந்த இசை நிகழ்சிக்கும் அவரை நடுவராக அமர்த்தியது கிடையாது.
அவரை முதன் முதலில் ஒரு தொலைக்காட்சி ஒரு கானா பாடல் நிகழ்ச்சிக்கு அழைத்ததாக நினைவு.அதைத்தவிர வேறு எங்கும் அவரை கண்டதில்லை.
நான் கலந்து கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியின் ஆடிஷனில் ஏ.வி.ரமணன் சொன்னதை அப்படியே கீழே தருகிறேன்.
தயவு செஞ்சு இந்த மாதிரி பாட்டெல்லாம் குழந்தைங்கள பாட வைக்காதீங்கம்மா உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்//
ஆடிஷனுக்கு வந்திருந்த ஒரு சிறுவன் பாடிய பாடலைக் கேட்டு முகம் சிவக்க அவர் இப்படி சொன்னதற்கு காரணம்.
தேவாவை காப்பி மன்னன் என்பார்கள். ஆனால் எம்எஸ்வி தொடங்கி இளையராஜா ஏ ஆர் ரஹமான் என எல்லோரும் காப்பியடித்த பாடல்களை பிற்காலத்தில் வந்த யூட்யூப் வீடியோக்கள் போட்டுக் கொடுத்தன.
நாங்கள் எங்கள் கல்லூரி விழாவில் கீழ்கண்டவாறு ஒரு ஸ்கிட் ப்ளே செய்தோம்..
ஓர் இளைஞர் புதிதாக ம்யூசிக் போட்டுக் கொண்டிருப்பார். அந்த பக்கம் வரும் இளையராஜாவிடம் அதை கேட்டு விட்டு நல்லாருக்குப்பா ஆனா கொஞ்சம் க்ளாசிக்கலா போடு என்பார்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த பக்கம் வரும் ஏ ஆர் ரஹ்மான் அதே ட்யூனை கேட்டுவிட்டு நல்லாயிருக்கு ஆனா கொஞ்சம் வெஸ்டர்ன் ஸ்டைலில் போடு என்பார்.
கொஞ்ச நேரம் கழித்து தேவா அந்த பக்கம் வருவார். அந்த ட்யூன் அவர் காதிலும் விழும் கொஞ்ச நேரம் ஒளிந்து கொண்டு அந்த ட்யூனை ஒட்டு கேட்டு குறிப்பெடுத்துக் கொள்ளும் தேவா "அப்பாடா அடுத்த படத்திற்கு ஒரு டியூன் கிடைச்சிடுச்சு" என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்புவார்.
எப்பேர்பட்ட வன்மம் இது?
எல்லோரும் நினைப்பது போல சிச்சுவேஷன் சொல்லி பாடல் வாங்கும் இயக்குநர்கள் 80களின் இறுதியிலும் 90 களிலும் அரிதாகவே இருந்தார்கள். அப்படி சொல்லி இசையமைப்பாளர்களிடம் பாடலைப் பெறுவதற்கு கூட இசையறிவு தேவை என்பதுதான் அதற்கு காரணம்.
பெரும்பாலானவர்கள் தாங்கள் பார்த்த இந்திப் பட இசையையோ மேற்கத்திய இசையையோ கொண்டு வந்துக் கொடுத்து இது போலவே வேண்டும் என்றுதான் கேட்பார்கள்.
தேவா அப்படிப்பட்ட இயக்குநர்களுடன் தான் அதிகம் பணிபுரிந்திருக்கிறார்.
அதையும் மீறி அவர் மிரட்டிய படங்கள் தான் ஆசை,நேருக்கு நேர்,கண்ணெதிரே தோன்றினாள் வாலி போன்றவை.
நல்ல இயக்குநர்கள் அமையும் போது அவர் பாடல்களும் பன்மடங்கு சிறப்பாக அமைவதை அவரது கேரியரை தொடர்ந்து கவனித்தவர்களால் உறுதிசெய்ய இயலும்.
இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை.
இளையராஜா தேவா இருவருமே ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து மேலே வந்து சாதித்தவர்கள் தான்.
ஆனால் இளையராஜாவுக்கு கிடைத்த ஆதரவு தேவாவுக்கு கிடைக்கவில்லை.
கிடைக்கவில்லை என்பதை விட விகடன் போன்ற ஊடகங்களே அவர் காப்பியடிக்கிறார் என விஷமத்தனமாக ஒரு சில சொல்விளையாட்டுகளால் அவர்கள் எழுதும் சினிமா விமர்சனங்களில் சுட்டுவார்கள்.அதைப்படிக்கும் அறிவுசுழிகள் (நான் உள்பட) தேவா காப்பி கேட் என இளித்துக் கொண்டு திரிந்தோம்.
இளையராஜா வந்ததையே தாங்க முடியாதவர்கள் எப்படியோ அவரை வளைத்து விட்டார்கள்.அல்லது அவரே வான்டடாக வளைந்து கொடுத்தார்.
இந்நிலையில் இன்னொருவராக தேவா வந்ததை ஜீரணிக்கவே முடியாத நிலைக்குச் சென்றனர்.அதன் விளைவாகவே அவருக்கு காப்பியடிக்கும் இசையமைப்பாளர் என்ற பட்டத்தைத் தந்து இழிவு செய்தார்கள்.
ஆனால் காலம் அவர்களுக்கு ஏ ஆர் ரஹ்மானைக் கொடுத்தது. எப்போதுமே ராஜதந்திரம் வேலைசெய்யாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
இளையராஜா தேவா ஏ ஆர் ரஹ்மான் யுவன் இமான் ஜிவிகே எனச் சென்ற திரையுலகில் பல தசாப்தங்களுக்கு பிறகு அனிருத் வந்திருக்கிறார்.அதனால்தான் பூரித்துக் கொண்டிருக்கிறது 'அவர்களின்' இசையுலகம்.
பேட்டியெடுக்கிறேன் பேர்வழியென்று ஆ.வி யாளர்களே தேவாவிடம் இந்த கேள்வியை ஒருமுறை கேட்டார்கள்.
நீங்கள் காப்பியடிக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே?
இருப்பது ஏழு ஸ்வரங்கள்.இதைத்தானே திரும்பத்திரும்ப பயன் படுத்துகிறோம் என்று சர்காஸ்டிக்காக பதில் சொன்னார் தேவா.
தேவாவைப் பார்த்தால் சில தேரங்களில் ரஜினிகாந்த் போல இருக்கும்.
வெள்ளை குர்தாவில் ரஜினியும் தேவாவும் ஒன்றாக நின்றால் நமது கண்கள் தேவாவை நோக்கியே செல்லும் அளவுக்கு கரிஸ்மா அவருக்கு உண்டு. காதோரம் நரைத்திருந்த அந்த முடி கூட அவரது பர்ஸ்னாலிட்டிக்கு ப்ளஸ் ஆகவே இருந்தது.
அத்தனை ஸ்டைலான இசையமைப்பாளரை தமிழ் திரையுலகம் கண்டதில்லை.
2010 க்கு பிறகு அவர் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதை ஒரு சமூக சிந்தனை மாற்றமாகவே கருதுகிறேன்.
புறக்கணிக்கப்பட்டவை தேவா பாடல்கள் மட்டுமல்ல டி.ராஜேந்தர், சந்திரபோஸ் பாடல்கள் கூட பல ஆண்டுகாலமாக டிவி நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பட்டன
இதையெல்லாம் தாண்டி அந்த மாபெரும் கலைஞனை சமூக வலைதள எழுத்தாளர்கள் இன்று கொண்டாடுவது மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது.
அவரது பல பாடல்களை அண்ணன் சிவசங்கரன் பதிவிட்டு வருகிறார். அவருக்கு என் நன்றி.அவரால் தான் இந்த பதிவையே எழுதுகிறேன்.பல காலமாக அவருக்கு நடந்த புறக்கணிப்பில் நானும் ஒரு கூறாகவே இருந்திருக்கிறேன்.அந்த பாவத்திற்கு இந்த பதிவின் மூலம் கொஞ்சம் பரிகாரம் தேடிக் கொள்கிறேன்.
வாழ்க தேனிசைத் தென்றல் தேவா ( November 20, 1950)
கதிர் ஆர்எஸ்
20/11/20
மாபெரும் கலைஞரைப் பற்றி, சிறந்த அருமையான உண்மையைச் சொல்லிய ஒரு பதிவு
பதிலளிநீக்கு