வெள்ளி, 6 நவம்பர், 2020

அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி

maalaimalar :அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வென்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
ஜெனிபர் ராஜ்குமார், கேஷாராம், நிமா குல்கர்னி, வந்தனா சிலேட்டர், பத்மா குப்பா.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கும், பல மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் அபாரவெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் தமிழர்கள் ஆவார்கள். அங்கு நடந்த மாகாண சட்டசபை தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் 5 பெண்கள், 7 ஆண்கள் என 12 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

* நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி பெண் வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தி, அந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

* வெர்மாண்ட் மாகாண செனட் சபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கேஷா ராம் (34) வெற்றி பெற்று, முதல் பெண் செனட் உறுப்பினர் என்ற சிறப்பை அங்கு பெற்றுள்ளார்.

* கென்டக்கி மாகாண சட்டசபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு நிமா குல்கர்னி என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.

* வந்தனா சிலேட்டர் என்ற பெண் விஞ்ஞானி, வாஷிங்டன் மாகாண சட்டசபைக்கு ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

* மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு பத்மா குப்பா என்ற பெண், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

* ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்க் போகலை வீழ்த்தி, ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை செய்துள்ளார்.

* வட கரோலினா மாகாண செனட் சபை தேர்தலில் ஜெய் சவுத்ரி (வயது 51) ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

* அரிசோனா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அமிஷ் ஷா ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.

* பென்சில்வேனியா மாகாண செனட் சபைக்கு நிகில் சாவல் (37) ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

* மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ரஞ்சீவ் பூரி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* நியுயார்க் மாகாண செனட் சபை தேர்தலில் ஜெரேமி கூனி ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார்.

* கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய ஆஷ் கல்ரா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

* டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்தலில் ரவி சாண்டில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலிலும், மாகாண தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் அபார வெற்றி பெற்றிருப்பதை இம்பேக்ட் என்று அழைக்கப்படுகிற இந்திய வம்சாவளி அரசியல் நடவடிக்கை குழு பாராட்டி உள்ளது.

இந்த அமைப்பு, அமெரிக்க தேர்தல்களில் இந்திய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வெற்றிருப்பதை வரலாற்று தேர்தல் என்று கூறி உள்ளது.

இந்த அமைப்பின் செயல் இயக்குனர் நீல் மகிஜா கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டு தேர்தல் அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் பெரிய பங்களிப்புக்கு வழிவகுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்பின் ஆதரவை இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். இவர்களுக்காக 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.75 கோடி) இந்த அமைப்பு தேர்தல் நிதியாக திரட்டி உதவியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக